தேர்தல் பிரசாரத்தில் சிறார்கள்; தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும் கொடிகளைஅசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன.
சிறார்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை அரசு, சிறார்களின் உரிமைகளைக் காப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சேனக டி சில்வா தெரிவித்தார்.
இந்த சட்டவிதிமுறைகளுக்கு அமைய சிறார்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பெருமளவிலான சிறார்கள் பயன்படுத்தப்படுவதை ஊடகங்களில் காணமுடிவதாகவும் வழக்கறிஞர் சேனக டி சில்வா தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்களில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறார்கள் தொடர்பான புகார்களை ஆராய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரங்கள் உள்ளனவா என்று கேட்டபோது, 'ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பான சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இவ்வாறான சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ளதாக சேனக டி சில்வா கூறினார்.
0 comments :
Post a Comment