Thursday, December 25, 2014

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கொழும்பு கூட்டத்தில் உரை.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தன, கடந்த வாரம் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில் தேர்தல் வேலைத்திட்டத்தை விளக்கினார். சோசக அரசியல் குழு உறுப்பினரான விஜேசிறிவர்தன, கிட்டத்தட்ட நான்கு தசாப்த காலங்களாக தொழிலாள வர்க்கத்திற்காகப் போராடிய ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். கொழும்பில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் மஹரகமையில் டிசம்பர் 12 நடைபெற்ற கூட்டமானது, ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலுக்காக சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்இ ஏற்பாடு செய்துள்ள தொடர் கூட்டங்களில் முதலாவதாகும்.

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர் சுரங்க சிறிவர்தன, சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

“வளர்ச்சிகண்டு வரும் ஏகாதிபத்திய போர் ஆபத்து மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே” கட்சி இந்த தேர்தலில் தலையீடு செய்கின்றது என விஜேசிரிவர்தன கூட்டத்தில் தெரிவித்தார்.

சிரியா மற்றும் ஈராக்கில் இராணுவரீதியாக தலையிட ஜனாதிபதி பராக் ஒபாமாவைப் பலப்படுத்தும் அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் அண்மைய தீர்மானம் பற்றி பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

"இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்னர், ஒரு நாடு மீது உலகப் போருக்குத் தயாராவதாக வெளிப்படையாக ஒப்புகொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி விளக்கியது போல், இந்த தீர்மானமானது வெளிநாட்டில் போர்களை தொடங்க ஒபாமாவுக்கு கிடைத்துள்ள ஒரு திறந்த உரிமம் ஆகும். எங்கு எப்போது இராணுவ நடவடிக்கை வெடிக்கலாம் அல்லது எந்த வழிமுறை பயன்படுத்த முடியும் என்பது பற்றி எந்த வரம்பும் கிடையாது," என விஜேசிரிவர்தன எச்சரித்தார்.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஜி 20 உச்சிமாநாட்டில் ஒபாமாவின் உரையை பேச்சாளர் சுட்டிக் காட்டினார். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு கொள்கையின் ஒரு பகுதியாக ஐரோப்பாவில் வாஷிங்டனின் கொள்கை ரஷ்யாவை எதிர்கொள்வது, மற்றும் ஆசியாவில் அதன் கொள்கை, சீனாவைத் தனிமைப்படுத்தி சுற்றி வளைப்பதே என்று ஒபாமா தெளிவுபடுத்திவிட்டார்.

பெய்ஜிங்குடனான அதன் நெருக்கமான உறவுகளை முறித்துக்கொண்டு, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் "முன்னிலை" கொள்கையை ஆதரிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கத்தை நெருக்கும் அமெரிக்க முயற்சிகளே, இன்றைய கொழும்பு அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் உள்ள காரணிகளாகும் என்று விஜேசிரிவர்தன கூறினார். பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் இரண்டுடனும் நெருங்கிய உறவுகளை பராமரிக்கும் இராஜபக்ஷவின் முயற்சிகளை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியாது.

"இராஜபக்ஷவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இன்னும் நெருக்கமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தழுவிக்கொள்ளும் பொருட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார்,” என விஜேசிரிவர்தன தெரிவித்தார்.

"கிளின்டன் பூகோள முன்னெடுப்புக்கு ஆலோசகராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே சிறிசேனவை தேர்ந்தெடுக்கப்பட்டு ஊக்கப்படுத்தி வருகின்றார். இந்த அமைப்பானது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பாதையில் அடியெடுத்து வைக்காத நாடுகளில் திரைமறைவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பேர்போன, அமெரிக்காவைத் தளமாக்கக் கொண்ட கிளின்டன் மன்றத்துடன் இணைந்ததாகும்.

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் வெளியுறவு அமைச்சரான மங்கள சமரவீரவும் சிறிசேனவை வேட்பாளராக்குவதில் முக்கிய பங்காற்றினர். விக்கிரமசிங்க அவரது அமெரிக்க-சார்பு நிலைப்பாட்டால் பேர் போனவர் மற்றும் பெய்ஜிங்குடனான நெருக்கமான உறவுகள் குறித்து இராஜபக்ஷ அரசாங்கத்துடன் முரண்பாடுகொண்டு சமரவீர பிளவுபட்டார். "

"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு," சிறிசேன விடுக்கும் அழைப்புக்கள் குறித்து கருத்து தெரிவித்த சோசக வேட்பாளர், இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சி "அவரது சொந்த ஆளுமையின் விளைவு அல்ல, மாறாக, சர்வதேச நிதி மூலதனம் ஆணையிடும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த தேவையானதாகும். சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டால் இதே போன்று செயல்படுவதோடு அதே சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்வார், " என சோசக வேட்பாளர் விளக்கினார்.

"உலகப் போர் அபாயத்தை தடுக்கும் ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி தன் விதியை அதன் கைகளில் எடுக்காவிட்டால், நெருக்கடி நிறைந்த முதலாளித்துவம் இன்னுமொரு உலகப் பேரழிவுக்குள் தள்ள மனித இனத்தை அச்சுறுத்தும்" என்று அவர் எச்சரித்தார்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளர் தீபால் ஜயசேகரவும், இலங்கை தேர்தல் இடம்பெறும் சர்வதேச சூழ்நிலையை ஆய்வு செய்த்ததோடு, சோசக, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை அதன் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வைக்கும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஐவைஎஸ்எஸ்இ உறுப்பினர் சுரங்க சிறிவர்தன, இலங்கையிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆளும் தட்டுக்கள் வளர்ச்சி கண்டுவரும் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்ற நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் கடினமான சமூக நிலைமைகளை விரிவாக விளக்கினார்.

மஹரகம கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய, சோசக பொதுச் செயலாளர் விஜே டயஸ், இலங்கை தேர்தல் ஒரு தீர்க்கமான அரசியல் கட்டத்தில் இடம்பெறுகிறது என தெரிவித்தார்.

"தனது முழு பதவிக் காலமும் முடியும் வரை இருந்தால், அவரது சிக்கன திட்டத்துக்கு எதிரான மக்களின் சீற்றம் ஆழமடைந்து இன்னொரு முறை தேர்வாக மாட்டார் என்ற அஞ்சத்தினாலேயே, ஜனாதிபதி இராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்" என டயஸ் கூறினார்.

"சிறிசேனவை சோசக அம்பலப்படுத்துகின்றமை இராஜபக்ஷவுக்கே உதவும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்று கூட்டத்தில் பேச்சாளர் தெரிவித்தார். இது ஒரு புதிய கூற்று அல்ல, அது சிறிசேனவின் அரசியல் சுற்றுப்பாதையில் சோசகயை தள்ளுவதற்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

"தேசிய முதலாளித்துவத்திற்கு சரணடையாமல் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடுவது எப்படி என்று சோசகவுக்கு நன்கு தெரியும் என்பதை அது அதன் வரலாறு முழுவதும் நிரூபித்துள்ளது. இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து ஒத்துழைப்பவையாகவே உள்ளன. இராஜபக்ஷ கிராமத்தில் இருந்து வந்தாலும் கூட அவர் வேறுபட்டவர் அல்ல. ஒரு வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை வகித்திருந்தாலும் கூட, இந்திய முதலாளித்துவ வர்க்கம், அதன் ஏகாதிபத்திய எஜமானர்களை எதிர்த்துப் போராட இயல்பாகவே இலாயக்கற்றது என்பதை நிரூபித்ததோடு பிரிட்டனின் 1947ல் இனவாத வழியில் இந்தியவை பிளவுபடுத்தியதற்கு சரணடைந்தது."

போர் அச்சுறுத்தல் அதிகரிப்பது பற்றி எச்சரிக்கை விடுக்கும் ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே என்று டயஸ் சுட்டிக்காட்டினார். " உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் மற்றொரு ஏகாதிபத்திய மோதலுக்குள் இழுத்துத் தள்ள முயற்சிக்கும் ஏனைய கட்சிகள் இந்த ஆபத்துக்களை வேண்டுமென்றே மூடி மறைக்கின்றன."

“இலங்கை வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் விடுக்கும் கட்டளையை சிறிசேன எதிர்க்கவே இல்லை. இந்த வெட்டுக்கள் சமூக திட்டங்கள் மற்றும் பொது நல சேவைகளை வெட்டிக் குறைக்க வழிவகுக்கும்” என்று டயஸ் கூறினார். “ஜனவரி 8 எவர் ஜனாதிபதியானாலும், தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் ஆளும் வர்க்கத்தின் மோசமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரும்," என்று பேச்சாளர் எச்சரித்தார்.

சிறிசேன வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு ஒரு புதிய அரசியலமைப்புக்கு வழிவகுக்கும் என்ற எதிர்க் கட்சிகளின் கூற்றுக்கள் போலியானவை என்று டயஸ் விளக்கினார். "இது யுத்தம் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக எதிர்-புரட்சி போன்ற உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்கான முயற்சி ஆகும்" என்று அவர் கூறினார். "சாதாரண மக்களின் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளைக் கூட பறிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது எந்த நம்பிக்கையும் வைக்கக் கூடாது...

"அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் நிர்ணயசபை மூலம் ஒரு புதிய அரசியலமைப்பு வரையப்படவேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. முழு முதலாளித்துவ அமைப்பு முறையையும் தூக்கியெறிவதற்கான ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான கட்சியின் போராட்டத்தின் பாகமாகவே நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்," என டயஸ் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com