Friday, December 26, 2014

மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இராணுவம்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளேஎன்று கூறியுள்ளனர். இது தொடர்பாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் அமைப்பின் சார்பிலான ஷான் வீரதுங்க அவர்களை கேட்டபோது, இப்படியான ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் திணைக்களத்தின் மூலம் அனுப்பப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்.

கடந்த சில வாரங்களாகவே இலங்கை இராணுவத்தினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதை தாங்கள் அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த கடிதங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் படங்களுடன், கடந்த பத்து வருடங்களாக செய்த சாதனைகள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவை தேர்தல் விதிகளுக்கு முரணானவை என்றார் அவர். அவை வெறுமனே வருடாந்தம் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அனுப்பப்படும் சாதாரண வாழ்த்து துண்டுப் பிரசுரங்கள் என்று இராணுவம் கூறுவதையும் அவர் நிராகரித்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் தாங்களும் பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் முறைப்பாடு செய்திருந்ததாகவும், அவரும் இவை வெறுமனே வாழ்த்துச் செய்திகள் அல்ல என்பதை புரிந்துகொண்டார் என்றும் குறிப்பிட்ட ஷான் வீரதுங்க, அந்த கடிதங்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்துமாறு தபால் மா அதிபருக்கு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com