இலங்கையில் மழை, வெள்ளத்தால் பாரிய அழிவு: 80 ஆயிரம் பேர் இடம்பெயர்வு
இலங்கையில் நிலவும் கடுமையான காற்றுடன் கூடிய மழை மற்றும் வெள்ளம் காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் உள்ளடங்கலாக நாட்டின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடெங்கிலும் சுமார் ஆறரை லட்சம் பேர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. மோசமான காலநிலை காரணமாக பெரும்பாலான பிரதேசங்களில்இயல்புநிலை சீர்கெட்டு, இன்று நத்தார் கொண்டாட்டமும் சோபை இழந்து காணப்பட்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
புத்தளம்- மன்னார் நெடுஞ்சாலை முழுவதும் வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. பல பிரதேசங்களில் வீதிகள் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயுள்ளது. பல நெடுந்தூர ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 'குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், தெற்கில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான மழை பெய்கின்றது. ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் நீர்த்தேக்கங்களின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன' என்றார் பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி.
கண்டி, புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சம்பவம் வீதம் நான்கு பேர் மழைவெள்ளத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, தொடரும் மோசமான காலநிலை காரணமாக பதுளை, குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் பேரிடர் முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
இலங்கைத் தீவைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடல் பரப்பில் அச்சுறுத்தும் அளவுக்கு 80 கிலோமீட்டரையும் தாண்டிய வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சூழ்நிலையில் தொடரும் மழை, வெள்ளத்தால் தேர்தல் பிரச்சாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment