போலி ஆவணத்துடன் மஹிந்த பிரச்சாரம்; 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம்: சரத் என் சில்வா
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக போலியான ஆவணமொன்றை அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் தயாரித்து மஹிந்த ராஜபக்ஷ தனது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றமை பாரிய குற்றச்செயலாகும். இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் இதனைக் காரணங்காட்டி அவரை பதவி நீக்கம்செய்யலாம் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்துள்ள சரத் என்.சில்வா, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான போலியான ஆவணமொன்றை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது 20 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்ககூடிய குற்றச்செயல்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரசாரம் செய்துவரும் ஆவணம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் சட்டங்களின் கீழும் இது ஒரு குற்றமாகும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான போலியான ஆவணங்களை ஊடகங்களில் வெளியிடுவது குற்றம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவுசெய்யப்பட்டாலும் உயர் நீதிமன்றம் மூலமாக அவர் மீது இதற்காக குற்றம்சாட்டலாம் என்று சரத் என் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment