தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிணையில் செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வரையும் நிபந்தனை பிணையில் செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டதாக இந்திய செய்தித்தளங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும் அந்த செய்தியை மறுத்துள்ள அத்தளங்கள் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை மனு மீதான விசாரணை இன்று (07) நடைபெற்றது.
ஜாமீன் மனு விசாரணையை முன்னிட்டு பெங்களுரின் சில முக்கியப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஜெயலலிதாவின் பிணை மனுவை முதல் மனுவாக விசாரிக்கக் கோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் மனுவை முதலில் விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயலலிதா தரப்பில் மன்றில் ஆஜரான வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். யெலலிதாவின் மனுவை அவசர மனுவாக கருதி முதல் மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம், ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்தார்.
ஆனால், மனுவை வரிசைப்படியே விசாரிக்க முடியும் என நீதிபதி சந்திரசேகர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் பிணை மனு வரிசை எண்படி 73ஆவது வழக்காக விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக் கோரி அவர் சார்பில் மன்றில் ஆஜரான வழங்குரைஞர் ராம் ஜெத்மலானி வாதிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார்.
இதேவேளை, ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கினால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், பிணை வழங்கக்கூடாது என வாதிட்டார்.
'ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவரை பிணையில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும் தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக் கூடாது' என அவர் மன்றில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, 'ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார்' என்றார்.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானியின் வாதம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன.
தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர். உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு பிணை மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் 2.30 மணிக்கு வாதம் தொடங்கியது. 3.35 மணியளவில் ஜெயலலிதா பிணையில் செல்ல முடியாது என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 comments :
Post a Comment