இலங்கை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த சனிக்கிழமை நடந்த ஊவா மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அதன் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக சரிந்தமை, அரசாங்கத்தின் மீது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் மத்தியில் ஆழமடைந்துவரும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது.
2009ல் 72 சதவீதமாக இருந்த சுதந்திர முன்னணிக்கான வாக்குகள், இம்முறை 51 சதவீதம் வரை 21 சதவிகிதத்தில் சரிந்தது. இதன் விளைவாக, ஆறு ஆசனங்களை அது இழந்து, 34 ஆசனங்கள் கொண்ட மாகாண சபையில் 19 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. மாகாணத்தின் மிகப்பெரிய பதுளை மாவட்டத்தில், வெளிப்படையான பின்னடைவு ஏற்பட்டது. இங்கு சுதந்திர முன்னணி பதுளை, ஹாலிஎல, வெலிமடை ஆகிய மூன்று ஆசனங்களில் தோல்விகண்டதோடு ஊவா-பரணகம, பண்டாரவளை ஆகிய பிரதேசங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 200 வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றது.
அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே (யுஎன்பீ) பயனடைந்துள்ளது. இதன் வாக்குகள் 2009ல் பெற்ற 22 சதவிகிதத்தில் இருந்து 40 வீதம் வரை 18 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளன. அதனால் அதன் ஆசனங்களின் எண்ணிக்கை 7ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளன. யூஎன்பியை போலி இடதுகளான நவசமசமாஜ கட்சியும் (நசசக) ஐக்கிய சோசலிச கட்சியும் (யுஎஸ்பி) ஆதரித்தன. அவை இந்த வலதுசாரி, வணிக சார்புடைய கட்சியை இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு முற்போக்கான மாற்றீடாக முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்திருந்தன.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) வாக்குகள் 5 சதவீதத்தால் இரட்டிப்பாகி, அது ஒரு ஆசனத்தை வென்றதோடு மொத்தமாக இரண்டு ஆசனங்களைப் பெற்றது. தனது சோசலிச பாசாங்குகளை முழுமையாக கைவிட்ட இந்த கட்சி கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பாகமாக இருப்பதோடு முதலீட்டாளர்களை ஈர்க்கும் கொள்கைகளுக்காக வெளிப்படையாக வக்காலத்து வாங்கி வருகிறது. முற்றிலும் சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ள ஜேவிபீ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடும் ஆதரவாளராக இருந்தது. யுஎன்பீக்கு கிடைத்த வாக்குகளைப் போலவே ஜேவிபிக்கு கிடைத்த வாக்குகளும் பெருமளவில் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு வாக்குகளே.
தேர்தல் முடிவுகள், உண்மையான வர்க்க உறவுகள் பற்றிய ஒரு சிதைந்த பிரதிபலிப்பாகும். ஆனால் ஊவாவில் அரசாங்கத்தின் ஆதரவு சரிந்தமையானது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் அரசாங்கம் மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பான பரந்த எதிர்ப்பையே பிரதிபலிக்கின்றது. அடிப்படை பொருட்களின் விலை உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட அத்தியாவசிய சமூக சேவைகளிலான வெட்டுக்களும் உழைக்கும் மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
நாட்டின் மத்திய மலையக பகுதியான ஊவா, நாட்டின் மிக வறுமை நிலையிலான மாகாணமாகும். இதில் மொனராகலை மாவட்டம் முதன் வகிக்கின்றது. மக்களில் சுமார் 20 சதவீதமானவர்கள் தமிழ் பேசும் வறிய தோட்ட தொழிலாளர்கள் ஆவர். சிறு விவசாயிகள் தமது விவசாய பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பதில் உள்ள கஷ்டங்களுக்கும் இடையில் அகப்பட்டுள்ளனர்.
வளர்ந்து வரும் அந்நியப்படுதல் மற்றும் எதிர்ப்பையும் உணர்ந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெறும் முயற்சியில் ஊவாவில் விரிவான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். குறித்த காலத்தை விட இரண்டு வருடங்கள் முன் கூட்டியே, அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலிலையும் நடத்தும் அறிகுறியை வெளியிட்ட பின்னர், அவர் தனது கையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
கொழும்பில் "ஆட்சி மாற்றத்திற்காக” எதிர்க் கட்சிகள் "வெளிநாட்டு சக்திகளுடனும்" தமிழ் புலம்பெயர்ந்தோருடன் சேர்ந்து சதி செய்கின்றன என்ற அவரது பழசாய்ப் போன குற்றச்சாட்டை இராஜபக்ஷ திரும்பத் திரும்ப கூறினார். சீனாவில் இருந்து இலங்கையை தூர விலகுவதற்கு நெருக்கவதற்காக, பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் செய்த போர் குற்றங்களை அமெரிக்க சுரண்டிக்கொள்கின்றது. எனினும், ஒரு சர்வதேச சதியில் பாதிக்கப்பட்டவராக காட்டிக்கொள்ளும் அதேவேளை, இராஜபக்ஷ ஒருபோதும் சதிகாரர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை, மற்றும் அவர் அமெரிக்கா உடனான உறவுகளை சரிசெய்துகொள்ள தீவிரமாக முயற்சிக்கின்றார்.
அரசாங்கம் வாக்காளர்களை திசைதிருப்பும் முயற்சியில், தேர்தல் சட்டங்களை வெளிப்படையாக மீறி, அரச வளங்களை பயன்படுத்தி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக மிரட்டல்கள் மற்றும் வன்முறைகளையும் பயன்படுத்தியது. அதன் அனைத்து இழிந்த தந்திரங்களின் மத்தியிலும், பிரச்சாரம் தெளிவாக தோல்விகண்டது. ஊவாவிலான பின்னடைவு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில்களில் ஏற்பட்ட பின்னடை போக்கின் தொடர்ச்சியாகும். மார்ச் மாதம் நடந்த மேல் மாகாண மற்றும் தென் மாகாண சபை தேர்தலில்களில், சுதந்திர முன்னணி முறையே 12 மற்றும் 5 ஆசனங்களை இழந்தது.
ஊவா தேர்தல் முடிவு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, "எங்களுக்கு இந்த வியத்தகு வெற்றியை வழங்கியமைக்கு" நன்றி என வாக்காளர்களுக்கு கேலிக்கூத்தான முறையில் நன்றி தெரிவித்த இராஜபக்ஷ, அதன் “பாரிய அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு கிடைத்த மக்களை ஆணை” என கூறிக்கொண்டார்.
மிகவும் யதார்த்தமான மதிப்பீட்டை செய்ய முற்பட்ட சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த, "பதுளை மாவட்டத்தில் இளம் மற்றும் புதிய முகங்களை நிறுத்தத் தவறியமையே” இழப்புகளுக்கு காரணம் என கூறினார். உண்மையில், அரசாங்கத்தின் "பாரிய அபிவிருத்தி முயற்சிகள்" தமது சமூக உரிமைகள் மீது தாக்குதல்கள் அதிகரிப்பதையே அர்த்தப்படுத்துகின்றது என்று மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
2009ல், புலிகளை தோற்கடித்த பின்னர், இராஜபக்ஷ ஒரு புதிய செழிப்பு சகாப்தத்துக்கு வாக்குறுதியளித்து மாகாண சபை தேர்தலில் தீர்க்கமான வெற்றிகளைப் பெற்றார். எனினும், இலங்கை தற்போதைய பூகோள பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட நிலையில், போரின் முடிவானது உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தின் மீதான இடையறா தாக்குதல்களையே வழங்கியது.
தேர்தல் முடிவு, சமூக அமைதியின்மை வளர்ச்சியடைவது பற்றிய ஊடகங்களின் கவலையை தூண்டிவிட்டிருந்தது.
ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், வாக்காளர்கள் சுதந்திர முன்னணியை "இடி போல் அறைந்துள்ளதாக" கூறியது. அது அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியதாவது: "இப்போது ஊவா மக்கள் அறைந்திருந்தாலும் அதை வெளியேற்றாமல் நிறுத்தியுள்ளனர். சுதந்திர முன்னணி எதிர்காலத்தில் ஒரு தேர்தல் பேரழிவை தடுக்க வேண்டுமெனில், மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழியை அது அமைக்க வேண்டும்”.
டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் கூறியதாவது: "மக்களின் செய்தி தெளிவானது. அவர்கள் ஏழை மற்றும் பணக்காரர் இடையே வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பரவலான ஊழல், சட்ட ஆட்சியின் பொறிவு, பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் ஜனநாயகத்தின் தூண்கள் மீதான கடுமையான தாக்குதல்களை பற்றி மகிழ்ச்சியின்றியும் கலங்கிப் போயுமுள்ளனர்."
ஆசிரியர் தலையங்க எழுத்தாளர்கள், இலங்கை ஆளும் வர்க்கத்தின் சார்பில் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பேசுகின்ற அதேவேளை, அவர்கள் வாழ்க்கை தரங்களை சீரழிக்கும் மற்றும் சமூக சமத்துவமின்மையை அகலப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். சந்தை சார்பு மறுசீரமைப்புக்கு கனதியாக வக்காலத்து வாங்கும் யூஎன்பி தலைமையிலான ஒரு அரசாங்கம், வெகுஜன எதிர்ப்பை நசுக்க சுதந்திர முன்னணி பயன்படுத்தும் அதே பொலிஸ்-அரச வழிமுறைகளையே நாடும்.
பிரச்சாரத்தின்போது, சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் அறிக்கை ஒன்றை விடுத்ததோடு பதுளை மாவட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடியது.
ஒரு விவசாயி கூறியதாவது: "நீண்ட காலம் ஊமையாகவும் செவிடாகவும் பாசாங்கு செய்த பின்னர், அரசாங்கம் திடீரென நிவாரணங்களை விநியோகிக்கின்றது. அரசியல் கட்சிகள் தேர்தலில் காலத்தில் மட்டுமே மக்களின் துன்பத்தை பார்க்கின்றன. நாம் விரும்பியோ விரும்பாமலோ வழக்கமாக வாக்களிக்கிறோம். அரசாங்கம் நாட்டின் வளர்ச்சி பற்றி ஊடகங்களில் விளம்பரப்படுத்தி வருகிறது. அபிவிருத்தி இடம்பெற்றால், நாம் அதை உணர வேண்டும். மாறாக, வாழ்க்கை செலவு காரணமாக மூன்று வேளை உணவு கூட எம்மால் சாப்பிட முடியாமல் உள்ளது. நாங்கள் விவசாயிகள் பிச்சைக்காரர்கள் ஆகி வருகின்றோம்."
பண்டாரவளை மருத்துவமனையில் ஒரு தொழில்நுட்ப தொழிலாளி கூறியதாவது: "இந்த அரசாங்கம் போர் வெற்றி மூலமே அதிகாரம் பெற்றது, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் அல்ல. நாங்கள் [போராட்டத்துக்கு] தெருவுக்கு வரும்போது, அரசாங்கம் முழு நாட்டையும் எங்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றது... உலகத் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கருத்தை நான் விரும்புகிறேன்."
No comments:
Post a Comment