Sunday, October 5, 2014

எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம்! ஆனந்த சங்கரியார் மோடிக்கு கடிதம். சித்தார்த்தனுக்காக வக்காலத்து.

மடல் வரைவதில் காலத்தை கடத்தியவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி. இவர் பிரபாகரன், மஹிந்த, சந்திரிக்கா என பல்வேறு பட்டோருக்கு கடிதங்களை வரைந்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடதமொன்றினை வரைந்துள்ளார். இக்கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளால் தமது தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்க பட்ட அமைப்பு என்றும் இவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ள அவர் த.தே.கூ தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக கூட்டணியாக உள்ளதே அன்றி அங்கு கூட்டணியே கிடையாது என்றும் அதற்கு உதாரணமாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை மோடியை சந்திக்க செல்லும்போது தவிர்த்து சென்றமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கடிதத்தின் முழுவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர்,
கௌரவ நரேந்திர மோடி அவர்கள்
புது டெல்லி

கண்ணியமிக்க ஐயா,

எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம்

தற்போது நான் வகிக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவி திரு..அ.அமிர்தலிங்கம் அவர்கள் 1989ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக வகித்து வந்ததாகும். அகிம்சையையும், சகிப்புத்தன்மையையும் மிக வலுவாக முன்னெடுத்தமைக்காக யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் 2006ம் ஆண்டுக்கான 'மதன்ஜித்சிங்' விருது எனக்கு கிடைக்கப்பெற்றது. 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வகித்து வந்துள்ளேன். பிரபல வழக்குரைஞரான கியூ.சி பட்டத்தைப் பெற்ற அமரர் கௌரவ சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களால் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே த.வி.கூ ஆகும். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியமையால் மிக்க மதிப்புடனும், நேசிக்கப்பட்டு ஈழத்துகாந்தி என வாஞ்சையுடன் மக்களால் அழைக்கப்பட்டார். அன்னாரால் தமிழ் மக்களுக்காக விட்டுச்செல்லப்பட்ட பெரும் சொத்தே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். எமது இனப்பிரச்சனை சம்பந்தமாக தங்களுக்கு சில விடயங்களை தெளிவுப்படுத்துவதற்காக த.வி.கூ யின் வரலாற்றை மிகச் சுருக்கமாக குறிப்பிட விரும்புகின்றேன். மதிப்புக்குரிய அமரர் கௌரவ ஸ்ரீமதி இந்திராகாந்தி அம்மையார் காலத்திலிருந்து இலங்கையின் இனப்பிரச்சனையை தமிழர் விடுதலைக் கூட்டணியே கையாண்டு வந்தது. ஆனால் தற்போது கட்டாயமான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் சார்பான குழுவினரிடம் கை மாறியுள்ளது.

தமிழ் பேசும் பல்வேறு சிறுபான்மை இனத்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் பல நோக்கங்களில் பிரதானமாகவும், அன்றைய அத்தியாவசிய தேவையாகவும் இருந்தது. சோல்பரி அரசியல் சாசனத்துடன் 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்த இலங்கையில் ஏற்கனவே இருந்த அற்ப சொற்ப அரசியல் உரிமைகளும் நியாயமற்ற முறையில் மறுக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் மூலம் குடியரசாக மாற்றமடைந்தது. அன்றைய தமிழ் மக்களின் ஒற்றுமையின் அத்தியாவசியத்தை உணர்ந்த சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் 23 வருடமாக நிலைத்திருந்த அரசியல் குரோதத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு 1945ம் ஆண்டு தன்னுடன் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அக்கட்சியின் தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களை சந்தித்து அன்று தமிழ் மக்கள் முகம் கொடுத்த சவாலை எதிர்கொள்வதற்காக தன்னுடன் இணையுமாறு, அவரின் வீடு சென்று அழைப்பு விடுத்தார். மிகவும் பாராட்டத்தக்க வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் எந்தவித தயக்கமுமின்றி தமிழரசு கட்சி தலைவருக்கு முழு ஆதரவு கொடுப்பதற்கு இசைந்தார். தமிழ் மக்கள் இவர்கள் இருவரினது மீள் இணைவை இருபெரும் புகழ்மிக்க தமிழ் அரசியல் ராட்சகர்களின் இணைப்பாக கருதினர். தமிழ் சமூகம் இவ்விரு தலைவர்களின் இணைவை, ஒரு பொது நோக்கத்திற்காக தமது அபிப்பிராய பேதங்களை மறந்து இணைந்த பெருந்தன்மையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அத்தகையவொரு பலமான அத்திபாரத்தில் தமிழ் மக்களுக்காக பணியாற்ற ஒரு நிரந்தர அமைப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டதே அன்றி எவரும் இந்த அமைப்பிடம் முறையற்று தலையிடுவதற்கல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) என தம்மை அழைத்துக் கொண்டு தற்போது இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக கூறிக்கொண்ட ஒரு தூதுக்குழு தங்களை சந்தித்தது. இந்தக் தூதுக்குழுவில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த நால்வரும், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவரும் மட்டுமே தங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். அண்மையில் நடந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் 40,000 இற்கு மேல் வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்ற புளொட் கட்சியின் தலைவர் இதில் இடம் பெறவில்லை. வழக்கம் போலவே 55 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரையோ வேறு எவருடனுமோ கலந்து ஆலோசிக்கவும், அழைக்கவும் இல்லை. மேலிடத்திலிருந்து பணிப்பு எதுவும் வரவில்லை போலும்.

மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்களே! நான் சமஷ்டி ஆட்சி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறேன். இதற்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வரவில்லை. மதிப்புக்குறையாத சில ஆங்கில பத்திரிகைகளில் வெளியான சில பகுதிகளை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்

• சண்டே ஐலண்ட் - தனது 12-03-2006 திகதிய பத்திரிகையில் 'ஆனந்தசங்கரியின் தீர்வு' என்ற தலைப்பில் தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில,; 'இந்திய முறையிலான தீர்வை முன்வைத்துள்ளார். பெரும்பான்மையான இலங்கையர்கள் அதனை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் பிரிவினை கோரிக்கையை கைவிடுவார்கள் என்பது கேள்விக்குறி'.

• த மோர்னிங் லீடர்- தனது 15-03-2006 'ஆனந்தசங்கரியின் பிரேரணை' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில், 'ஆனந்தசங்கரியின் பிரேரணை உண்மையில் நடைமுறைச்சார்ந்த பொருத்தமான நடுநிலைமையானதாகும். எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரா?'

• டெய்லி மிரர்- தனது 16-03-2006 'தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரின் வேண்டுகோளுக்கு செவிமடுங்கள்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கத்தில், 'தென்னிலங்கை மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற தலைவர் திரு. ஆனந்தசங்கரி நீண்டகாலமாக புலிகளின் வன்முறையையும், சர்வாதிகார போக்கையும் தொடர்ந்து எதிர்த்து வந்த யதார்த்தவாததியாக மதிக்கப்படுகின்றவர். ஆகவே அவருடைய பொருத்தமான ஆலோசனைகளுக்கு செவிமடுக்கப்பட வேண்டும்'. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்புடையீர், இக்குழுவினருக்கும் தங்களுக்குமிடையில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி எம்மில் யாருக்கும் எதுவும் தெரியாது. பத்திரிகைகளும் பிரமாதமாக எதையும் சொல்லவில்லை. தாங்கள் கூறிய ஆலோசனைகள் சில மட்டுமே தெரியவந்தது. ஆனால் அந்தக் குழுவில் பிரசன்னமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரொருவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களில் சில முக்கியமானவை உண்மைக்குப் புறம்பானவையாதலால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் உள்ள உறவு பற்றியும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆணை கிடைத்துள்ளது என்பது பற்றியநிலைப்பாடும். உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பூசலும், ஏனைய கடசிகளுடன் நல்லுறவு இருப்பதாகவும் தெரியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் ஆகியவற்றின் உறவுபற்றி கூறுவதானால் தமிழரசு கட்சியின் தலைவர் திரு. மாவை சேனதிராஜாவை விடுதலைப் புலிகள் தமது நிலைமையை பலப்படுத்த பயன்படுத்தினர் என்பதே உண்மை. இவர் இரு தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தேசிய பட்டியல் மூலம் கிடைத்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரு தடவையும் முழுமையாக அனுபவித்தவராவார். அதனைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு மூன்றாவது தடவையாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக தெரிவாகி பாராளுமன்றம் சென்றவராவார். இருப்பினும் தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் மறைந்து 26 வருடங்கள் செயல் இழக்கப்பட்டிருந்த தமிழரசு கட்சி முறையற்ற விதத்தில் மீண்டும் இவரால் புதுப்பிக்கப்பட்டது. ஊடக செய்தி ஒன்று பின்வருமாறு கூறியது:- 'தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாவை சேனாதிராஜா 14-10-2003 இல் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உபதலைவர் தங்கனை சந்தித்துள்ளார். தமிழரசு கட்சியின் புனரமைப்பு அவரின் கட்டளைக்கமையவே நடைபெறுகின்றது' இந்தப் பணியில் திரு மாவைசேனாதிராஜா விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமையவே செயற்பட்டுள்ளார் என்பது தெரிகின்றது. அதேபோல் என்னை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க எடுத்த முயற்சிகள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமையவே என்பது இங்கு தெளிவாகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கதையும் இது போன்றதே. தமிழ் தேசிய கூட்டமைப்பு த.வி.கூ உட்பட நான்கு கட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டது அதிலிருந்து எவருடைய அனுமதியின்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயர் நீக்கப்பட்டு அவ்விடத்தில் தமிழரசு கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட சக கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழரசு கட்சியும் விடுதலைப் புலிகளின் தூண்டுதலால் நேர்மையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, ஜி.ஜி.பொன்னம்பலம், பிரசன்னா இந்திரக்குமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய நால்வரும் முறையே தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளான இவர்கள் கையொப்பமிட்டு பிரசுரிக்கப்பட்ட த.தே.கூ இன் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்.

'விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் தேசிய தலைமையாக ஏற்றுக்கொள்வதோடு விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் உண்மையான ஏகபிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொண்டு உண்மையாகவும், உறுதியாகவும் தமிழ் தேசம் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்படுகின்ற சகல நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்' என உறுதியளிக்கிறோம். தமிழரசு கட்சியின் முக்கியமான பொறுப்புள்ள அங்கத்தவர்கள் கூட இதன் தாக்கத்தை அப்போது உணரவில்லை. தமிழரசு கட்சி பொறுப்புள்ள வகையில் நடக்காமல் தமிழரசு கட்சிக்கும் த.தே.கூ இற்கும் பெரும் அவமானத்தை கொண்டு வந்துள்ளனர். த.தே.கூ, தமிழரசுகட்சி ஆகியவற்றின் புனரமைப்பு முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டதென சர்வதேச சமூகம் அறியும்போது அவர்களுடைய நிலைப்பாடு மாறுபட்ட முறையில் இருக்கும். இனப்பிரச்சினை சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏகபோக உரிமையை தமிழரசு கட்சியும், த.தே.கூ உம் இழந்துவிட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட பிழைகள் இன்னும்பல. த.தே.கூ இனர் தமது பிழையான செயற்பாட்டால் சரித்திரத்தையே மாற்றி அமைத்துள்ளனர்.

• விடுதலைப்புலிகளின் கட்டளைக்கமைய 2005இல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை கலந்துகொள்ள விடாது தடுத்தமை.

• குறிப்பிட்ட ஒரு சிங்கள தலைவருக்கு தமிழ் மக்களை வாக்களிக்கும்படி கேட்டு வேறொருவரை வெல்ல வைத்ததோடு அனைத்து சிங்கள மக்களையும் தமிழ் மக்களுக்கு மாறாக ஒன்று சேர வைத்தமை.

• யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் திரு. சிவசங்கர் மேனன் அவர்களின் அழைப்பை ஏற்க மறுத்தமை பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இழப்புக்கு காரணமாக இருந்தது. யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பொது மக்களை இழந்து கொண்டிருந்த நேரத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றிருக்குமானால் பெரும் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்க முடியுமென அறிந்திருந்தும் எதுவும் தெரியாதது போல் நடிக்கின்றமை இவர்கள் மக்களுக்கு தொடர்ந்து செய்யும் துரோகமாகும். ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்கும் த.தே.கூ உம் பொறுப்பேற்க வேண்டும்.

த.தே.கூ இன் நான்கு கட்சிகளின் செயலாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய உத்தரவாதம் 2004 ஏப்ரல் தொடக்கம் 2009 மே 18 திகதி வரை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், குண்டுவெடிப்புக்கள், மிகக்கொடூரமான குற்றச் செயல்கள் மேற்கொள்வதற்கு காரணமாய் அமைந்ததோடு பல ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள, பாராளுமன்ற உறுப்பினர்களின்; இழப்புக்களுக்கும் காரணமாய் அமைந்துள்ளது. 2004ம் ஆண்டு த.தே.கூ இனரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி அனைத்துவிதமான இழப்புக்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் வேண்டும். முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளும்போது அனுபவங்கள் இல்லாதவர்களிடம் கையளிப்பதால் ஏற்படுகின்ற வினையே இதுவாகும்.

அரசுடன் பேசுகின்ற ஆணையை தமிழரசுகட்சிக்கும், த.தே.கூ இற்கும் பல்வேறு தேர்தல்கள் மூலம் மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாததது மட்டுமல்ல தவறான பாதைக்கும் இட்டுச்செல்கின்றது. 2004ம் ஆண்டு வடகிழக்கில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் அற்ப சொற்ப அரசின் தலையீட்டுடன் முற்று முழுவதுமாக விடுதலைப் புலிகளாலேயே நடத்தி வைக்கப்பட்டது. அத் தேர்தலில் ஆள்மாறாட்டம், அச்சுறுத்தல் என்பன வாக்களார்களுக்கு புலிகளால் நிறையவே இருந்தன. இத் தேர்தலில் தோற்றவர்கள் வெல்ல வைக்கப்பட்டார்கள். அதேபோன்று 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் 09 வீதத்திலிருந்து 0.85 வீத மக்களே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய 7,50,000 வாக்குகளில் ஏறக்குறைய 65,000 மக்களே வாக்களித்தனர். இது வெறும் 09 வீதமாகும். இத்தகைய குறைந்த வாக்கை மக்களின் ஆணை என்று கூறமுடியாது. மேலும் உள்ளுராட்சி தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளையும் மக்களின் ஆணை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவை உள்ளுர் சம்பந்தப்பட்ட விடயங்கள். இந்த விடயத்தில் என்ளால் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திய பிரதம மந்திரியின் குழுவினருடன் உண்மையை மறைத்து தவறாக வழிநடத்தியுள்ளனரா என்ற ஐயம் எழுகிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமாக த.தே.கூ அமைப்பே பேசி அரசுடன் வந்தது. இப்போது தமிழ் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளமையால் சம்பந்தப்பட்ட சகல அரசியல் கட்சிகளோடும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா அவர்களால் தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி பேசி தீர்ப்பதற்கு தமிழ் மக்களின் ஓர் நிரந்தர அமைப்பாக செயற்பட உருவாக்கப்பட்டது. அமரர் திரு. தொண்டமான், அமரர் திரு. ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோரின் ஆசீர்வாதத்தோடு தந்தை செல்வா அவர்களால் விட்டுச்செல்லப்பட்ட பெரும் சொத்தே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். ஓவ்வொரு தமிழனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னுடையது என சொந்தம் கொண்டாட உரிமை உண்டு. தன்னால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியை மீள புதுப்பிக்கும் எண்ணம் கடுகளவும் தந்தை அவர்களுக்கு இருக்கவில்லை. அதை உறுதி செய்யும் நோக்குடனேயே திருவாளர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.தொண்டமான் ஆகியோருடன் த.வி.கூ யின் தலைவர் பதவியை இவர்களுடன் பகிர்ந்து கொண்டார். தந்தையை மதிக்கின்ற ஒரு தமிழனும் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக தமிழரசு கட்சியை புதுப்பிக்க எதுவித நியாயமுமில்லை.

கௌரவ பிரதமர் அவர்களே! தங்களால் கூறப்பட்ட ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து ஒரு பொதுவான நிலைப்பாடு எடுப்பதற்காகவே அன்றி தமிழரசு கட்சி ,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் முரண்படுவதற்கல்ல. இவர்களுக்கு இனப்பிரச்சனை தீர்வில் அக்கறை இருப்பின் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.

நான் இந்திய அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை வலியுறுத்தி வருவது யாவரும் அறிந்ததே. அந்த நிலைப்பாட்டை இதுவரை எவரும்; பெரிதாக எதிர்க்கவில்லை. இதுபோன்று நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் பேசக்கூடியதாக ஒரு சந்திப்பை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.
நன்றி


வீ.ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்- த.வி.கூ

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com