Friday, October 17, 2014

சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவு!

ஜனநாயக கட்சியின் தலைரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைத்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு வாக்குரிமை இருக்கின்றதா? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் விசேட அதிகாரிகள் குழுவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அந்த தீர்ப்பு தொடர்பிலான விபரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்று வியாழக்கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2014ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பிலிருந்து சரத் பொன்சேகாவின் பெயரை நீக்கிவிடுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா, கடந்த மேல் மாகாண சபைத்தேர்தலின் போது கெஸ்பேவ தேர்தல் தொகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார் என்பதுடன் அவருடைய பெயர் 2013ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு, வாக்குரிமை இருகின்றதா என்று சிலர் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியிருந்தனர்.

அதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் சட்டமா அதிபரினால், தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையை, கட்சி செயலாளர்களை அழைத்து உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளர் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com