Tuesday, October 21, 2014

ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கத்தால் புலி வர வாய்ப்பு ஏற்படலாமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமையால் புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் மீளவும் செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். ஆனால், அதனை உறுதியாக சொல்ல முடியாது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான சுசில் பிரேமஜயந்த நேற்று திங்கட்கிழமைநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தெரிவித்தார்.

ஐரேப்பிய ஒன்றிய நீதிமன்றம், தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு பதவியேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒருவருடம் கடந்து அதாவது 2006 ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீது தடைவிதித்திருந்தது. இதனையடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. தற்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டாலும் ஏனைய நாடுகளில் அத்தடை தொடர்ந்தும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அடங்கும் 28 நாடுகளில் மாத்திரம் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கியமையால் இந்த நாடுகளில் புலிகள் அமைப்பினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாக மக்களிடம் நிதி திரட்டிவந்திருந்தனர். எதிர்காலத்தில் பலவந்தமாக நிதியை திரட்டலாம். இந்நிலையில், புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதையடுத்து இந்த நாடுகளில் மீண்டும் புலிகளுக்கு ஆதரவாக நிதிதிரட்டப்படும் அபாயம் காணப்படுகின்றது என்றார்.

இது தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும். சில நாடுகளில் உள்ள சட்;டம் மற்றும் நீதி முறைக்கு அமைவாக தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கலாம். இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், புலிகள் மீதான தடையைநீக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை கோரியுள்ளனர். இறுதி தீர்மானம் அந்தந்த நாடுகளுடையது. எனினும், இலங்கையில் இந்த அமைப்பை 2009ஆம் முற்றாக நாம் தோல்வியடைய செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com