ஜெயலலிதா ஜெயராமுக்கு இடைக்கால நிபந்தனை பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்!!
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பங்களூர் உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை பிணை வழங்கியது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனையையையும் நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் பிணை வழங்கி உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி இந்திய ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் திகதி பெங்களூர் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி இந்தியா ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெங்களூர், பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை பிணையில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதுதவிர தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் தங்கள் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவர்களுடைய பிணை மனுக்களை நீதிபதி சந்திரசேகரா கடந்த 7ஆம் திகதி நிராகரித்தார். குற்றவாளிகளுக்கு பிணை வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும் ஊழலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், பிணை மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டதால் ஜெயலலிதா சார்பில் கடந்த 9ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜெயலலிதாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜராகி ஜெயலலிதாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதேபோல் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி, அவர்களுடைய பிணை மனுக்கள் மீதான விசாரணைக்கான வேண்டுகோளை முன்வைத்தார். இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று விசாரணைக்கு திகதி குறித்து உத்தரவு பிறப்பித்தனர்.
இதன்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணை செய்யப்பட்டது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அரசு தரப்பு வழக்கறிஞராக முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் பவானி சிங் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரான தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஜி.எஸ்.மணியும் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இதேபோல் பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியும் தம் பங்குக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தானும் இந்த வழக்கின் ஒரு அங்கம். அதனால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று சுவாமி தனது மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில், ஜெயாவின் பிணை மனு தொடர்பான வாதப்பிரதிவாதங்களை கருத்திற்கொண்ட நீதிபதி குழு, அவருக்கு இடைக்கால நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது.
அத்துடன், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணையில் விடுதலையாகும் ஜெயலலிதா, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் மேல்முறையீட்டு ஆவணங்களை டிசெம்பர் 18க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட 3 வாரத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
சிறப்பு நிதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு அச்சுறுத்தல் ஏதும் விடுக்க கூடாது என்றும் நீதிபதிகளை அவதூறு செய்யும் வகையில் பிரசுரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்றும் நான்கு ஆண்டு தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment