சந்திரிக்கா பொது வேட்பாளராக களம் இறங்கினால் தமிழர்களின் ஆதரவு கிடைக்குமாம்! ஐயாசாமி
சந்திரிக்கா பொது வேட்பாளராக களம் இறங்குவாரானால் தமிழர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களின் பெரும்பாலானோரின் ஆதரவு அவருக்கு கிடைக்கும் என்று அகில இலங்கை தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஐயாசாமி இராமலிங்கம் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ஊவா மாகாண தேர்தல் கட்சிகளிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தேர்தல் முடிவினை மையமாக வைத்து கட்சிகள் எதிர்கால தேர்தல் குறித்த காய் நகர்த்தல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தன. ஊவா மாகாண தேர்தல் நிறைவு பெற்றுள்ள இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்த சிந்தனைகள் நாட்டு மக்களிடையேயும் கட்சிகளிடையேயும் வலுப்பெற்றுக் காணப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இத்தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்ற வாதப்பிரதிவாதங்கள் மேலெழுந்து வருகின்ற நிலையில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் மற்றும் தமது கட்சியின் சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து சிந்தித்து வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பெயரும் பொது வேட்பாளர் தொடர்பில் அடிபடுகின்றது. சந்திரிகாவின் கடந்த கால ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்று தலைநிமிர்ந்து வாழும் நிலைமை ஏற்பட்டது. தோட்டப்புறங்களின் அபிவிருத்தி கருதி சந்திரிகா அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனவே, மலையக மக்கள் உட்டபட பெரும்பாலான நாட்டு மக்களின் இதயங்களிலும் அவர் இடம்பிடித்திருந்தார்.
இதனிடையே சந்திரிகா பொது வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நியமிக்கப்பட்டு வெற்றி பெறுமிடத்து மீண்டும் தமிழர்களின் வாழ்வு செழிப்படையும். புரையோடிப்போய் இருக்கின்ற நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வொன்று ஏற்படும். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாகும்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment