ஜெயாவின் ஜாமீன் மீதான சிறப்பு மனு எதிர்வரும் 7-ம் திகதிக்கு ஒத்திவைப்பு! புதிய முதல்வரை பார்க்க மறுத்தார் ஜெயா!
தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் திகதி ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு அக்டோபர் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா 5-வது நாளாக சிறையில் உள்ளார்.
தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி ரத்தினகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால் வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கோரியும் தங்களுக்கு வழங்கப் பட்ட தண்டனை, தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் 4 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பு 11-வது நீதிமன்ற ஹாலில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. காலை 9 மணிக்கு நீதிபதி ரத்னகலா தனது இருக்கையில் அமர்ந்து அவசர கால மனுக்களை விசாரிக்க ஆரம்பித்தார்.
காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் வந்தனர். ஜெயலலிதா தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அவரது உதவி வழக்கறிஞர்கள் 3 பேரும் 10.52 மணிக்கு வந்தனர்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி ரத்னகலா முன்பு காலை 11.05-க்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் ஜாமீன் மனு மீதான வாதத்தை தொடங்குவதற்கு முன்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பேசினார்.
பவானி சிங் மறுப்பு
அப்போது,''ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதால் அன்றுடன் எனது பணி முடிந்துவிட்டது. என்னால் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி வாதாட முடியாது. இது தொடர்பாக கர்நாடக அரசு அரசாணை வெளியிடவில்லை'' என்றார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ரத்னகலா, ''அரசு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது. எனவே வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்றார்.
3 மணி நேரத்தில் புதிய மனு
இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி ரத்னகலா ஏற்காத அதே மனுவை மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர கால சிறப்பு மனுவாக தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அம்ஜத் பாஷா, மூர்த்தி ராவ் ஆகியோர் நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாயை சந்தித்துப் பேசினர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலாவிடம் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கறிஞர்கள் புதிய மனுவை தட்டச்சு செய்து பிற்பகல் 1.30 மணிக்குள் அவசர கால மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவில்,''குற்றவியல் நடைமுறை சட்டம் 389(1) பிரிவின்படி, 7 ஆண்டுகளுக்குள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலே வழக்கை விசாரிக்கலாம். இதற்காக நீதிபதி தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே புதிய மனுக்களை அவசர கால சிறப்பு மனுவாக உடனடியாக விசாரிக்க வேண்டும்''என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாய் இந்த மனு குறித்து விடுமுறை கால நீதிபதிகள் ரத்னகலா, அப்துல் நாஸர் ஆகியோரிடம் ஆலோசித்தார். டெல்லியில் இருந்த தலைமை நீதிபதி வஹேலாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவையும் அவசர கால சிறப்பு மனுவாக ஏற்பதாக பதிவாளர் தேசாய் தெரிவித்தார்.
இந்நிலையில், புதன்கிழமை ஜெயலலிதா தாக்கல் செய்த அவசர கால சிறப்பு மனு மீதான விசாரணையும் அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் நேற்று முழுவதும் ஹோட்டல் அறையில் காத்திருந்த அனைவரும் இரவில் சென்னைக்கு திரும்பினர்.
'ஆட்சி நிர்வாகத்தில் கவனம்'
தமிழக முதல்வரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுப்பு தெரிவித்தது ஓ.பி.எஸ். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனத் தெரிகிறது. இதனை சிறை ஊழியர் வாயிலாக ஜெயலலிதாவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
'ஓ.பன்னீர்செல்வம் தற்போது தமிழகத்தின் முதல்வராகிவிட்டார். அவர் சிறைச்சாலைக்கு வருகை தருவது சரியல்ல. மாறாக அவர்
ஆட்சி நிர்வாகத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்' என சிறைத்துறை ஊழியர் வாயிலாக ஜெயலலிதா முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு அனுப்பிய தகவலில் கூறியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை மாலை தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் அன்றிரவு 9 மணிக்கு பெங்களூரை வந்தடைந்தார்.அவருடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விசுவநாதன், விஜயபாஸ்கர், வைத்தியலிங்கம் ஆகியோரும் வந்தனர்.
பெங்களூரில் உள்ள மதான் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவர்கள், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று காலை 9 மணிக்கு சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியிருந்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அதில் ஜாமீன் கிடைத்தால் விடுதலை செய்தியுடன் அவரை சந்திக்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் காத்திருந்தார்.
மேலும் சிறை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடத்தலாம் என திட்டமிட்டு வளர்மதி, கோகுல இந்திரா, தங்கமணி, வேலுமணி, ராமராஜ், செந்தில் பாலாஜி, மோகன் ஆகிய அமைச்சர்களும் பரப்பன அக்ரஹாராவுக்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மீண்டும் ஜெயலலிதாவை சந்திக்க அவரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை என கூறிவிட்டார்.
எனவே ஒரு நாள் முழுவதும் பெங்களூரில் காத்திருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் நேற்று மாலை 5 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினர். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்த பிறகு தங்களை ஜெயலலிதா சந்திப்பார் என பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment