இராஜபக்ஷ அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்துகின்றது. W.A. Sunil
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இஸ்ரேல் அரசாங்கமானது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடூர இராணுவத் தாக்குதலை ஆரம்பித்து இரண்டு வாரங்களின் பின்னர், இலங்கை அரசாங்கம் விடுத்திருக்கும் அறிக்கை மூலம், இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் யுத்த நடவடிக்கையை ஆதரிக்கும் அதே சமயம், அந்நாட்டுடனும் மற்றும் மத்திய கிழக்கு அராபிய நாடுகளுடனும் சமாந்தரமான தொடர்புகளை வைத்துக்கொள்வதற்கான இராஜபக்ஷவின் அவநம்பிக்கையான முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் ஜீலை 15 வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, பாலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் தீவீரமடைந்துவரும் கலவரத்தின் விளைவாக பொதுமக்களின் உயிர்கள் துன்பகரமாக பலியாவதையும் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்களையிட்டும் “ஆழ்ந்த கவலை” அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள போதும், இந்த அட்டூழியங்களுக்கு நேரடிப் பொறுப்பான நெதன்யாகு அரசாங்கத்தினை முழுமையாக அதன் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது. அதற்குப் பதிலாக, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் மீது குற்றம் சாட்டி, “இஸ்ரேல் தேச எல்லைக்கூடான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு” கேட்கப்பட்டுள்ளது. “கலவரங்களை நிறுத்துவதற்கான முயற்சிப்பதற்கும் மோதலுக்கு நிரந்தரமான தீர்வு காணும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் சம்பந்தப்பட்ட பகுதியினர் ஆழ்ந்த உணர்வுடன் செயற்பட வேண்டும்” என மேலும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. “சாதகமான சூழலை உறுதிப்படுத்தல்” என ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் குறிப்பிடுவது, இஸ்ரேலின் வலதுசாரி சியோனிச நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்கு பாலஸ்தீனம் கட்டுப்பட வேண்டும் என்பதையே அன்றி வேறெதையும் அல்ல.
அதற்கு ஒரு வாரத்தின் பின்னர், ஜூலை 23 அன்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசேட கூட்டத்தில் ஸ்ரீலங்காவின் உத்தியோகபூர்வ பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவின் கருத்து, அரசின் இந்த போக்கினை முன்னெடுத்துச் செல்வதாகும்.
அழிவுகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் “திட்டமிட்டு செய்யப்படும் சகல நடவடிக்கைகனையும்” கண்டனம் செய்யும் ஆரியசிங்கவின் அறிக்கை, “பிராந்தியம் முகம் கொடுக்கும் சிக்கல்களை வெற்றிகரமாக அணுகக்கூடிய மற்றும் சமாதானமான தீர்வுக்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரே பொருத்தமான தேர்வாக இருப்பது பேச்சுவார்த்தையே என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்” என குறிப்பிடுகிது. திட்டமிட்டு செய்யப்படும் “சகல” நடவடிக்கைகளையும் எனும் கருத்தில், திட்டமிட்டு ஆத்திரமூட்டல்களை முன்னெடுக்கும் இஸ்ரேலும் அதற்கு இரையாகியுள்ள பாலஸ்தீன மக்களும் ஒரே கும்பலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் “நடுநிலை” முற்றிலும் வஞ்சகமானதாகும். அதே போல், தீர்வுக்கான “ஒரே” வழி பேச்சுவார்த்தையே என மிகைப்படுத்துவது, இஸ்ரேலினுடைய எதிர்ப்போக்கு வகிபாகத்தின் வரலாற்றை வேண்டுமென்றே மூடி மறைப்பதாகும்.
பாலஸ்தீனத்திற்கு ஏதாவது மட்டுப்படுத்தப்பட்ட சுய நிர்வாகத்திற்கு வழி சமைக்கும் 1993 மற்றும் 1995 ஒஸ்லோ ஒப்பந்தம் உட்பட சகல ஒப்பந்தங்களை மீறியதும், சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்பியதும் இஸ்ரேலே ஆகும். பிராந்தியத்தில் இன்னுமொரு பொம்மையாட்சியும் பிற்போக்கு அரசுமான எகிப்தினால் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்தம், சமாதானமான தீர்வுக்கான முக்கியமான “ஆரம்ப அறிகுறியாகும்” என்றும் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார். ஏவுகனைத் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி, ஆயிரக்கணக்கான இரானுவத்தினரை தரைமார்க்கமாக பாலஸ்தீனத்துக்கு அனுப்பி, இப்போதே இஸ்ரேல் அந்த “போர் நிறுத்தத்தை” மீறியுள்ளது.
இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 1200 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மற்றும் செயல்முறை முகவரமைப்பின் அறிக்கையின்படி, இடம்பெயர்ந்து அவர்களின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 1,67,269 ஆகும். இன்னும் ஆயிரக்கணக்கானோர் காஸாவின் வேறு பிரதேசங்களில் வாழும் தமது உறவினர்களிடம் தஞ்சமடைந்துள்ளனர். வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற மற்றும் அடிப்படை வசதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நெதன்யாகு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாலும், பாலஸ்தீனத்திற்கு எதிரான இராணுவத் தாக்குதலின் உண்மையான நோக்கம், அது ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பிரதேசங்களில் அதன் அதிகாரத்தை உறுதி செய்வதாகும். இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொள்ளும் இத்தகைய ஆத்திரமூட்டும் தாக்குதல்கள், வெறுமனே ஹமாஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதற்கானது அல்ல. அது கணிப்பிட்டு மேற்கொள்ளப்படும் குற்றவியல் யுத்தமாகும்.
ஜூலை 18, உலக ட்ரொட்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விடுத்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
“காஸா மீதான இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு கண்டனம் செய்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் சியோனிச அரசாலும் தெற்கில் எகிப்திய நிர்வாகத்தாலும் சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் எதிரில், 200 சதுர மைல்களுக்கும் குறைவான நிலப்பகுதியில் சிக்கொண்டுள்ள 1.8 மில்லியன் பாதுகாப்பற்ற பாலஸ்தீன மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றங்கள் நடக்கின்றன.
ஹமாஸ் எனப்படும் இஸ்லாமிய பாலஸ்தீன இயக்கம், இஸ்ரேல் மீது மேற்கொள்ளும் பலவீனமான ரொக்கட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த இன அழிப்பு நடவடிக்கையை நிகழ்வதாக நியாயப்படுத்தும் சகல ஆளும் தட்டுக்களையும் கண்டனம் செய்ய வேண்டும்.”
அராபிய நாடுகளிடமிருந்து கிடைக்கும் கடன் மற்றும் நிதி உதவிகளினால் இராஜபக்ஷ அரசாங்கம் தனது தந்திரமான அறிக்கைக்கூடாக இஸ்ரேலுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் சமநிலைப் பேணும் கொள்கையை பின்பற்றுவதாக காட்டும் முயற்சி ஒரு மோசடியாகும்.
குளிர் யுத்த காலகட்டத்தில் ஏகாதிபத்தியத்துக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பேரம் பேசல்களின் பாகமாக “அணி சேரா போக்கினை” பின்பற்றிய இலங்கை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பினால் அமெரிக்காவின் மூலோபாய சகாவான இஸ்ரேலுடன் நேரடி தொடர்புகளை பேணுவதில் இருந்து விலகி இருந்து.
1970ல் பிரதமர் ஸ்ரீமா பண்டாரநாயக்க இலங்கையில் இருந்து இஸ்ரேல் பிரதிநிதியை வெளியேற்றிய பின்னர், 1983ல் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தத்தோடு இரு நாடுகளுக்கும் இடையிலுமான உறவு மீண்டும் ஆரம்பமானது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன யுத்தத்திற்கு தேவையான ஆயுத தளவாடங்களுக்கும் இராணுவத்தை பயிற்றுவிப்பதற்கும் இஸ்ரேலுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதோடு இலங்கையில் அமெரிக்க தூதுவராலயத்தில் இஸ்ரேல் ஊக்குவிப்பு பகுதியொன்றை இஸ்ரேல் நிறுவியதோடு பின்னர் தனியான தூதரகத்தை நிறுவியது.
ஜனாதிபதி இராஜபக்ஷ காலத்திலேயே இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மிக நெருக்கமான இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகள் மிகவும் நெருக்கமடைந்தன. இராஜபக்ஷ பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை 2006ல் மீண்டும் ஆரம்பித்த பின்னர், ஆயுதமும் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியையும் பெற்றுக்கொள்வதற்காக, மிகவும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட நாடுகளில் இஸ்ரேலுக்கு முக்கியமான இடம் கிடைத்தது. ராடர் உபகரணங்கள், கிபீர் தாக்குதல் விமானங்கள் மற்றும் டோரா தாக்குதல் படகுகளையும் இஸ்ரேல் இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது.
இராஜபக்ஷ அரசாங்கம் பின்பற்றும் தந்திர கொள்கை, அது மேலும் மேலும் வலது நோக்கி தள்ளப்படுவதையும், ஏகாதிபத்திய சக்திகளுடன், குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்துடன் கூட்டு சேர்வதற்கான அதன் போக்கினை சமிக்ஞை செய்கின்றது.
பழைய தீவிரவாதியும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் இராஜதந்திர அதிகாரியாகவும் சேவை செய்த தயான் ஜயதிலகவின்படி இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள், அது இஸ்ரேலினுடைய “பொறியில்” அகப்பட்டுக்கொண்டுள்ளதன் விளைவாகும். ஆனால் உண்மை அதுவல்ல. தழிழர் விரோத இனவாத யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், அரசாங்கத்தின் இராணுவம் இழைத்த யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை பற்றிக்கொண்டு, இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அமெரிக்கா பிரயோகிக்கும் அழுத்தம் மேலும் மேலும் உக்கிரமடைந்துள்ளமை, அது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு ஆளும் தட்டுக்களுடன் அணிதிரளும் திசையை நோக்கி நகரச் செய்துள்ளது.
மார்ச் மாதம், யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிரான ஒரு சர்வதேச விசாரணையை கோரி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா பிரேரணை ஒன்றை கொண்டுவர தயாராகிய நிலைமையில், இராஜபக்ஷ ஜனவரி மாதம் இஸ்ரேலுக்குப் பயணித்தார். அது இலங்கை ஜனாதிபதி ஒருவர் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அமெரிக்காவால் ஆட்டுவிக்கப்படும் இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊடாக ஒபாமா நிர்வாகத்தின் அனுதாபத்தினை பெற்று, பிரேரனையை சமர்பிக்காதபடி தவிர்த்துக்கொள்வதே இராஜபக்ஷவின் அந்த பயணத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆயினும் ஒபாமா நிர்வாகம் பிரேரணையை நிறைவேற்ற முன் சென்றது. இலங்கை-பாலஸ்தீன நட்புறவு சங்கத்தின் ஆரம்ப தலைவராகவும் பல வருடங்கள் அதில் பிரதான பதவி வகித்தவருமான இராஜபக்ஷ, அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் அணிதிரள முனைவது, அவரும் அவரது அரசாங்கமும் பிற்போக்கு வலதுசாரி பக்கம் திரும்புவதன் இன்னொரு வெளிப்பாடாகும்.
புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்திற்கு எல்லா வகையிலும் உதவிய அமெரிக்காவுக்கு மனித உரிமைகள் தொடர்பாக எந்தவித அக்கறையும் கிடையாது. “ஆசியாவில் முன்னிலை” என்ற அதன் புதிய மூலோபாயத்தின் கீழ், சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைக்கும் திட்டத்தின்படி, இராஜபக்ஷ அரசாங்கத்தை சீனாவுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதார தொடர்புகளிலிருந்து தூர விலக்குவதே ஒபாமா நிர்வாக்கத்தின் ஒரே தேவையாகும். இப்போது அந்த பிரேரணையின்படி சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையிலேயே அமெரிக்காவின் மூலோபாய அவசியத்துடன் அணிதிரளும் திசையில் இராஜபக்ஷ அரசாங்கம் தீவிரமாக திரும்பியுள்ளது.
இலங்கை தொழிலாள வர்க்கம் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டனம் செய்யவேண்டும். இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச பிற்போக்கு சக்திகளுடன் அணிதிரண்டு தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தாக்குதல்களை மேலும் மேலும் தீவிரமாக்கும் என்பதையே அதன் நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.
0 comments :
Post a Comment