ஜப்பானிய பிரதமர் இலங்கை சீனாவுடனான உறவுகளை வலுகுறைக்க நெருக்குகிறார். By W.A. Sunil
இலங்கைக்கான சின்சோ அபேயின் இரண்டு நாள் பயணமானது சீனாவின் இழப்பில் தெற்காசியாவில் ஜப்பானிய செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரு பரந்த உந்துதலுடன் பிணைந்துள்ளது.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை எதிர்க்கும் அவரது அரசாங்கத்தின் ஆக்கிரோசமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செப்டம்பர் 7-8ம் திகதிகளில் இலங்கையில் இரண்டு நாட்களை கழித்தார். இது 24 ஆண்டுகளில் ஒரு ஜப்பானிய பிரதமரின் முதல் பயணம் ஆகும். அபேயுடன் ஹிட்டாச்சி, சுமிடோமோ, மிட்சுபிஷி, டொமோ டிஜி, ஒனோமிச்சி டொக்கியார்ட் மற்றும் நொரிடேக் போன்ற கம்பனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பயணித்திருந்தனர்.
கடந்த ஆண்டு, ஜப்பானிய அரசாங்கமானது கிழக்கு சீனக்கடலில் சர்ச்சைக்குரிய டயோயு/சென்காகு தீவு தொடர்பாக சீனாவிற்கு எதிராக ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியிருந்தது. அபே, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா உடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைக்கும் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" என்ற கொள்கையுடன் அணிசேர்ந்துள்ளார். இத்தகைய கூட்டணிகளை பேணும் அதே வேளை, ஜப்பான் பிராந்தியத்தில் தனது சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னேற்ற முற்படுகின்றது.
இப்போது, இலங்கையிலான ஜப்பானின் நிகழ்ச்சி நிரலானது பெய்ஜிங்கில் இருந்து தூர விலகுமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் அதே நிகழ்ச்சி நிரலின் மறுபக்கமாக இருக்கின்றது. பெய்ஜிங், கடந்த ஐந்து ஆண்டுகளில், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டுள்ளது. 2009 முதல் சீனாவானது இலங்கையின் முக்கிய கொடையாளனாக ஜப்பானை மிஞ்சியிருந்தது. அது அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள், மின் நிலையங்கள் போன்றவை உட்பட உள்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய முக்கிய பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. சீனா, கொழும்பு துறைமுகத்தின் புதிய பகுதியொன்றை கட்டுவதற்கும் நிதி வழங்கியுள்ளது.
வாஷிங்டன், புலிகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களை ஆதரித்து வந்துள்ளது. எனினும், 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அது சீனாவிற்கு எதிரான அமெரிக்க கொள்கையின் பின்னால் அணிதிரள இலங்கையை நெருக்கும் ஒரு நெம்புகோலாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நிர்வாகத்தின் போர் குற்றங்களை இழிந்த முறையில் பயன்படுத்தியது.
இராஜபக்ஷ தன்னுடைய பங்கிற்கு, ஜப்பானுடனான நெருக்கமான உறவானது தனது அரசாங்கத்தின் மீதான அமெரிக்க அழுத்தத்தை மென்மையாக்கும் என்று கணக்கிட்டு, அந்த உறவை வளர்க்க ஆர்வமாக உள்ளார். மார்ச் மாதம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையை கோரி, அமெரிக்க அனுசரணையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பை டோக்கியோ புறக்கணித்தது.
எனினும், ஜப்பான், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான ஏதாவது அனுதாபத்தினால் அன்றி, தனது சொந்த மூலோபாய நலன்களுக்காகவே கொழும்புடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த சூழ்ச்சி செய்கின்றது. பொது உறவுகள் நோக்கங்களுக்காக, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை மூடி மறைப்பதை உள்ளடக்கிய இலங்கையின் “நல்லிணக்க முன்னெடுப்புகளையும்”, "மனித உரிமைகள் சபை மற்றும் அதன் வழிமுறைகளிலும்" அரசாங்கம் ஈடுபாடுக் காட்டுவதாக கூறப்படுவதையும் அபே பாராட்டினார்.
அபே மற்றும் இராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஐந்து பக்க கூட்டறிக்கை, இதில் சம்பந்தப்பட்டுள்ள அடிநிலையில் உள்ள கணிப்பீடுகளை சுட்டிக்காட்டியுள்ளன. இரண்டு தலைவர்களும், "பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஸ்திரத்தன்மையை ஸ்தாபிப்பதில் கணிசமான பங்கு வகிப்பதற்காக", இலங்கை-ஜப்பான் உறவுகளை "கடல்சார் நாடுகளுக்கு இடையேயான ஒரு புதிய பங்கான்மைக்கு" உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
இந்திய பெருங்கடலின் மத்தியில் இலங்கையின் புவியியல் அமைவிடத்தையும் "பிராந்தியத்தில் கடற் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும்" சுட்டிக் காட்டிய இரு தலைவர்களும், “கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விவகாரங்களைப் பற்றி இலங்கை-ஜப்பான் பேச்சுவார்த்தைகளை" ஸ்தாபிக்க முடிவெடுத்துள்ளனர். கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் கலந்துரையாடப்பட்டு, ஜப்பான் ரோந்துப் படகுகளை வழங்க உறுதியளித்துள்ளது.
ஜப்பானின் பக்கத்தில், இந்த முன்மொழிவுகள் ஜப்பானின் மூலோபாய நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை உள்ளடக்குவதை இலக்காகக் கொண்டவையாகும். இந்திய பெருங்கடலானது சீனாவிற்குப் போலவே, ஜப்பானின் தேவைகளுக்கும் மிக தீர்க்கமானதாகும். ஜப்பான் தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கல்களின் 80 சதவிகிதத்தை மலாக்கா ஜலசந்தி வழியாக மத்திய கிழக்கில் இருந்து பெறுவதானால், இந்திய பெருங்கடலின் கடல் பாதைகளுக்கு நெருக்கமான இலங்கையின் அமைவானது டோக்கியோவுக்கு இன்றியமையாத முக்கியத்துவத்தை கொடுக்கின்றது.
அதற்கு சமமாக சீனாவிற்கு மிகவும் அவசியமான எரிசக்தி மற்றும் வளங்கள் இறக்குமதிகளை தடுப்பதற்கு, இந்திய பெருங்கடலிலான கடற்படை மேலாதிக்கமானது அமெரிக்க மற்றும் ஜப்பான் ஏகாதிபத்தியங்களுக்கு தீர்க்கமான இயலுமையை கொடுக்கின்றது.
இந்த கூட்டறிக்கை சீனாவின் நட்பு நாடான வட கொரியா பற்றியும் கவலை தெரிவித்தது. "இரு தலைவர்களும் சர்வதேச சமூகத்தின் கவலையில் வட கொரியா அக்கறை காட்ட வேண்டும் என்ற தங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்துவதோடு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரீட்சிப்பது உட்பட எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் வட கொரியா தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்."
கடந்த டிசம்பரில், இராஜபக்ஷ அரசாங்கம் வட கொரியா ஒரு ஏவுகணையை பரிசோதித்தது பற்றி முதல் முறையாக கவலை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. இப்போது ஜப்பானுடன் சேர்ந்து மேலும் ஒரு அறிக்கையை வெளியிடுவதன் மூலம், ராஜபக்க்ஷ சீனாவிற்கு எதிராக அமெரிக்க மற்றும் ஜப்பானுடன் அணிசேர்வதற்கான தனது தயார் நிலையை பற்றி மற்றொரு சமிக்ஞையை அனுப்பியுள்ளார்.
பதிலுக்கு, பிரதானமாக பணப் பற்றாக்குறையில் இருக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு கணிசமான உதவியை செய்ய அபே உறுதியளித்தார். கடந்த ஆண்டு, ஜப்பான் மொத்தம் 43.8 பில்லியன் யென் [480 மில்லியன் டொலர்] அபிவிருத்தி உதவி நிதி வழங்க உறுதியளித்தது. அபே இந்த முறை, சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்க 330 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானின் பிராந்திய ஒருங்கிணைந்த சேவைகள் டிஜிட்டல் ஒளிபரப்பு முறைமையை தளமாகக் கொண்ட ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக்கு 130 மில்லியன் டொலர் உட்பட பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டார்.
அபேயின் பயணம், தெற்காசியாவில் செல்வாக்குக்கான பரந்த உந்துதலுடன் பிணைந்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன், அபே பங்களாதேஷிற்கு சென்றார். அங்கும் சமீப ஆண்டுகளில் பெய்ஜிங் நெருக்கமான உறவுகளை வளர்த்து வந்துள்ளதோடு பல்வேறு திட்டங்களுக்கும் உதவி வழங்கியுள்ளது. பிரதமர் ஷேக் ஹசினா, ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்புரிமைக்கு பங்களாதேஷ் போட்டியிடாமல் விலகிக்கொள்ள முடிவு செய்தார். அதற்கு பதிலாக அதே இடத்தில் ஜப்பானுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார். ஹசீனா ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு சிறப்பு தொழில்துறை பேட்டைகளை அமைக்க உறுதியளித்த அதேவேளை, பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக பங்களாதேஷிற்கு அபே 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானுக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை முடித்தார். இது ஒரு "சிறப்பு பூகோள மூலோபாய பங்கான்மையை" நிறுவுவதாகப் பாராட்டப்பட்டது. மோடி அபேயுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். தொடர்ச்சியான பாதுகாப்பு மாநாடுகள், ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்காவையும் உள்ளடக்கிய முக்கூட்டு கடற்படை பயிற்சிகள், மற்றும் இந்தியவுக்கான ஆயுத விற்பனைகளும் இதில் அடங்கும்.
இலங்கைக்கான அபேயின் வருகை, சீனாவிற்கு எதிராக ஜப்பான் மற்றும் அமெரிக்காவும் மூலோபாய மற்றும் இராணுவ தயாரிப்புக்களின் மேற்கொண்டு வரும் ஒரு பரந்த சூழலிலேயே இடம்பெற்றுள்ளது. ஜப்பானிய பிரதமருக்கு இராஜபக்ஷ பெரும் வரவேற்பு கொடுத்தமை, அவர் அமெரிக்கா மற்றும் அதன் தற்போதைய பங்காளியான ஜப்பானதும் வழியில் கால் பதிக்கத் தயாராக உள்ளார் என்ற செய்தியை அனுப்பியுள்ளது................................
0 comments :
Post a Comment