Saturday, September 27, 2014

சொத்து சேர்ப்பு வழக்கில் ஜெயலலிதா நான்கு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் நாடு முழுக்க கலகம்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் குற்றவாளி என நீதிமன்று அறிவித்துள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

வழக்கில் தொடர்புடைய சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. காஞ்சிபுரம், கோவையில் பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறார். மேலும், அவர் இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குள் தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மேல் நீதிமன்றம் சென்று தண்டனையை குறைக்கவோ அல்லது விடுதலை பெறவோ செய்யாமல் தேர்தலில் நிற்க முடியாது.

நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம். எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டிய முடியாது. ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது என்றே அர்த்தம். எனவே ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தவிர்த்து இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தாலும் கூட இன்னும் 2 சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை அடைக்க பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்களுக்காக நேற்றே அறைகளை போலீசார் தயார் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பு இன்று தான் அளிக்கப்பட்டது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறித்த வழக்கு ஒரே பார்வையில்

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந்தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி 27.6.1996-ந்தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் 14.8.1996-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே 7.9.1996-ந்தேதி இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லமநாயுடு நியமிக்கப்பட்டார். விசாரணை அதிகாரி நல்லமநாயுடு உத்தரவின் பேரில் 18.9.1996-ந் தேதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மறுநாள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்பட்டன. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் 7.12.1996-ந்தேதி அன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். நகரும் சொத்துகளான 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி தங்கக் காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்பு, 214 சூட்கேஸ், தங்க- வைர நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பொருட்கள் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டன. ஜெயலலிதா தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

3.1.1997-ந்தேதி ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. 19.11.1999-ந் தேதி தொடங்கிய விசாரணை 18.7.2001-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 259 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யபட்டன. அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2001-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 79 சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்தது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் முதல் நபர்(ஜெயலலிதா) முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 27.12.2003-ந்தேதி அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தனிக்கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது. ஏ.எஸ்.பச்சாபுரே நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அரசு சிறப்பு வக்கீலாக ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டார். 9.5.2005-ந்தேதி அன்று ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு ஆகிய 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்று 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க பெங்களூர் தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 14.7.2005-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 2010-ம் ஆண்டு வரை தமிழில் இருந்த வழக்கு ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் 88 ஆயிரம் பக்கங்கள் ஆகும். குற்றப்பத்திரிகை மட்டும் 13 ஆயிரத்து 600 பக்கங்களை கொண்டுள்ளது. பெங்களூர் தனிக்கோர்ட்டில் 252 அரசு தரப்பு சாட்சிகளும், 99 எதிர்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து கடந்த 2011-ம் ஆண்டு அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுமாறு கோரி மனு செய்தார். அதைத்தொடர்ந்து அப்போதைய தனிக்கோர்ட்டு நீதிபதி மல்லிகார்ஜுனா உத்தரவின் பேரில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

2012-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி அரசு சார்பில் ஆஜராகி வந்த அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா பதவியை ராஜினாமா செய்தார். அதே மாதம் 29-ந் தேதி அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். 13.8.2013-ந் தேதி அன்று இந்த வழக்கில் அரசு தரப்புடன் தி.மு.க. விடுத்த கோரிக்கையை அப்போது நீதிபதியாக இருந்த பாலகிருஷ்ணா ஏற்றுக்கொண்டார். அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை நீக்க வேண்டும் என்று கோரி 23.8.2013-ந்தேதி கர்நாடக ஐகோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து 26.8.2013-ந் தேதி அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் அவர் தொடர்ந்து ஆஜராகி வாதாட நீதிபதிகள் அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் தனது இறுதி வாதத்தை தொடங்கினார்.

25 நாட்கள் அவர் வாதிட்டு தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து சசிகலா சார்பில் வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும் ஆஜராகி வாதிட்டனர். அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் 15 நாட்கள் இறுதி வாதம் செய்தார். அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவித்தார்.

ஆனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் நபரான ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருப்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வசதியாக தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றுமாறு யோசனை தெரிவித்ததால் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

வழக்கு ஆவணங்களை மாற்ற வசதியாக வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை தொடங்கி 18 ஆண்டுகள் ஆகிறது. இதில் கர்நாடகத்தில் மட்டும் 11 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்:-

1. பச்சாபுரே 2. மனோலி 3. ஆன்ட்ரிக்ஸ் (தற்காலிகம்) 4. மல்லிகார்ஜுனய்யா 5. சோமராஜ் (தற்காலிகம்) 6. பாலகிருஷ்ணா 7. முடிகவுடர் (தற்காலிகம்) 8. ஜான் மைக்கேல் குன்கா

1 comments :

ARYA ,  September 28, 2014 at 5:25 AM  

இலங்கையையும் ராஜபக்சவைவும் எதிர்ப்பவர்கள் அழிவார்கள் , இது தான் வரலாறு. இலங்கையை பிரிக்க போகிறேன் என்றவள் , இப்ப கம்பி எண்ணவே நேரத்தை செலவழிக்க வேண்டியது தான் , தமிழ் பிரிவினை வாதிகளுக்கு இவள் வக்காலத்து வேண்டும் போதே எனக்கு தெரியும் இவள் ஒரு நேர்மை அற்ற அரசியல் வாதி என்று.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com