Wednesday, September 17, 2014

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான செல்வராசனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி!

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியான இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருண் செல்வராசனை ஆறு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் உளவாளியாகச் செயற்பட்ட இலங்கைத் தமிழரான அருண் செல்வராசன் கடந்த 10ஆம் திகதி சென்னை சாலி கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர், அருண் செல்வராசனை மூளைச்சலவைச் செய்து உளவாளியாக மாற்றியது கண்டறியப்பட்டது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த அருண் செல்வராசன், அதன் மூலமாக பரங்கிமலை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், பாதுகாப்பு மிக்கதாக திகழும் துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களைப் படம் பிடித்து பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான தமீம் அன்சாரி அளித்த தகவலின் பேரில் கடந்தாண்டு மண்ணடியில் ஜாகீர் உசேன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அருண் செல்வராசன் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்ட அருண் செல்வராசனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேசிய புலனாய்வு பொலிஸார் கடந்த 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண் செல்வராசன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண் செல்வராசனிடம் பொலிஸ் விசாரணைக்கு செல்ல விருப்பமா? என்று கேட்டார். அதற்கு அருண் செல்வராசன் எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அருண் செல்வராசனை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருண் செல்வராசனுடன், அவனது கூட்டாளிகள் 5 பேரும் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அருண் செல்வராசன் பணியாற்றியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், 5 கூட்டாளிகள் குறித்து அருண் செல்வராசனிடம் விசாரணை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும், அருண் செல்வராசன் தன்னந்தனி ஆளாக நின்று மிகப்பெரிய அளவான சதி திட்டத்தை செய்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கருதும் பொலிஸார், சென்னையில் அவருக்கு உதவிய முக்கிய பிரமுகர்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.

No comments:

Post a Comment