டெல்லி உயிரியல் பூங்காவில் இன்று நடந்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர வைத்து விட்டது. அங்குள்ள வெள்ளைப் புலி இருந்த பகுதியில் புலியைப் பார்த்து தனது நண்பர்களுடன் கூச்சல் போட்டு சத்தம் போட்டுள்ளார் ஒரு பிளஸ்டூ மாணவர். அப்போது தவறி உள்ளே விழுந்து விட்டார். அவரை அந்தப் புலி பயங்கர கோபத்துடன் கடித்துக் குதறிக் கொன்ற பரிதாபம் அனைவரையும் உறைய வைத்து விட்டது. டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒரு வெள்ளைப் புலியும் உள்ளது.
இந்நிலையில், இன்று ஹிமான்சு என்ற 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் இந்த உயிரியல் பூங்காவைப் பார்வையிட சென்றுள்ளார். மதியம் சுமார் 1.30 மணியளவில் வெள்ளைப் புலியைப் பார்க்க அம்மாணவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது வெள்ளைப் புலியைப் பார்த்த உற்சாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஹிமான்சு கூச்சலிட்டுள்ளார். புலியைப் பார்த்து உரத்த குரலில் கத்தியுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரைத் தாண்டி புலி இருந்த பகுதிக்குள் போய் விழுந்து விட்டார் ஹிமான்சு.இதைப் பார்த்து ஹிமான்சுவின் நண்பர்கள் மற்றும் மற்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள்ளாக ஹிமான்சுவை நெருங்கி விட்டது புலி.. புலியை மிக நெருக்கத்தில் பார்த்த ஹிமன்சு பயந்து அலறினார்.
ஆனால் அவரை படு வேகத்துடன் புலி கடித்துக் குதறியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களும், மற்ற பார்வையாளர்களும் ஹிமான்சுவைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். கல் மற்றும் குச்சி போன்றவற்றால் அடித்துப் புலியை விரட்ட முயற்சித்துள்ளனர்.ஆனால், அவர்களது எண்ணம் பலிக்கவில்லை. ஹிமான்சுவைக் கடிக்கத் தொடங்கிய புலி பின்னர் அம்மாணவனின் உடலைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்து 20 நிமிடங்களுக்குப் பிறகே பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், வெள்ளைப் புலி அடைக்கப் பட்டிருந்த இடத்தின் தடுப்பு வேலியின் உயரம் குறைவாக இருந்ததே மாணவன் தடுமாறி கீழே விழுந்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. டெல்லியில் இச்சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment