Friday, September 19, 2014

ஆசிரியை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை நிரூபனம்!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதும்பிட்டிய பகுதியில் பூசாரி ஒருவரின் வீட்டின் முன்னால் இருந்த புதை குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை அ.சரஸ்வதி கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் நிரூபணமாகியுள்ளது.

அத்துடன் கொலை செய்யப்பட முன்னர் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பதை அறிய உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி பசறை கோணகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக சென்ற ஆசிரியை அ.சரஸ்வதி காணாமல் போனமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே அது தொடர்பில் கைது செய்யப்பட்ட மீதும்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பூசாரி பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்துக்கு அமைய பதுளை மேலதிக நீதிவான் மகேஷிகா பிரியதர்ஷனியின் உத்தரவின் கீழ் பூசாரியினால் ஆசிரியை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதை குழி கடந்த திங்களன்று தோண்டப்பட்டது.

இதன் படி தோண்டி எடுக்கப்பட்ட ஆசிரியையின் சடலம் பதுளை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை 18.09.2014 அன்று பொலிஸாருக்கு கிடைத்த நிலையில் ஆசிரியை அ.சரஸ்வதி துணியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

துணியினால் கழுத்தை நெரித்ததின் விளைவாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாகவும் இது ஒரு கொலை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை குரித்த ஆசி¬ரியை கொலை செய்ய முன்னர் சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாகவோ அல்லது வேறு விதமா¬கவோ துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினாரா என்பதை கண்டறிய சடலத்தின் பாகங்கள் சில அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட நிலை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பூசாரி தற்கொலைக்கு முயன்ற நிலையில் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment