ஈராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் யாஷிதி பழங்குடி மக்களை பிணைய கைதிகளாகவும் அவர்கள் பிடித்து வைத்துள்ளளனர். ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலையும், ஈராக் மற்றும் குர்திஷ் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளையும் அமெரிக்க இராணுவம் கடந்த மாதம் தொடங்கியது.
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை முதல் அமெரிக்கப் போர் விமானங்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இதில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த 6 வாகனங்கள் வெடித்து சிதறின.
கடந்த இரண்டு மாதங்களாக, இராக்கில் மனிதாபிமான ரீதியாக 162 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி கருத்துத் தெரிவிக்கும் போது, தென்கிழக்கு பாக்தாத் மற்றும் சிஜார் பகுதிகளில், ஈராக் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிகள் ஞாயிறு முதலே எங்களது போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்றார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட நேட்டோ நாடுகளின் ஒத்துழைப்பை அமெரிக்கா பெற்றது. அதில் சில நாடுகள் உடன்படாத நிலையில், அவர்கள் ஆயுதங்கள் வழங்கி உதவி அளிக்கலாம் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனிடையே, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மூன்றாவது படுகொலையாக, பிணையக் கைதியாக வைத்திருந்த பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை கடந்த சனிக்கிழமை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment