வாக்குகளில் அரைக்கோடி அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பதற்கு முன்வரும் வேட்பாளருக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தயார் என பொதுபல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பொதுபல சேனா மாநாட்டிடல் குறிப்பிட்டுள்ளார்.
தமது அமைப்பு நாடளாவிய ரீதியாக உள்ள 5000 கோயில்களிலிருந்து 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“கட்சி அரசியலின் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ள இனத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்த்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதனைத் தங்களால் செய்ய முடியாது விட்டால் அந்த தலைமைப் பதவியைத் நாங்கள் தருவதற்குத் தயாராகவுள்ளோம். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க யாராகவும் இருந்துவிட்டுப் போகலாம். அவர்களை ஆட்சிபீடத்திற்கு அமர்த்தும் சக்தி எங்களிடமே உள்ளது.
இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து திருட்டு, கையாலாகாத அரசியல் முறையை நாங்கள் மாற்றியமைப்போம்.. நீல நிற, பச்சை நிற, சிவப்பு நிறக் கண்ணாடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு பௌத்த கொடியை மட்டுமே கைகளில் ஏந்த வேண்டும். சிங்கள பௌத்த நாட்டை இந்நாட்டில் கட்டியெழுப்பவே நாங்கள் அயராது பாடுபடுகின்றோம்.
மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க எல்லோரும் எழுங்கள்… சிங்கள பௌத்தர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்களைத் திரும்பிப் பாருங்கள்… கட்சிகளாகப் பிரிந்து இருந்தது போதும்… எங்கள் தலைவர் டீ.எஸ்.சேனாநாயக்க அல்ல.. பண்டாரநாயக்க அல்ல… கார்ள் மாக்ஸ், லெனின் அல்ல.. எங்கள் தலைவர் புத்த பெருமானே. நாங்கள் நாட்டை மாற்றியமைக்கத் தயாராகவுள்ளோம்..
தயவுசெய்து நீங்கள் மாறுங்கள்.. முடியாதுவிட்டால் நாங்கள் அதற்கும் தயார்…இலங்கையில் 25,287 கிராமங்கள் உள்ளன. அந்த எல்லாக் கிராமங்களிலும் ஒவ்வொரு கோயில்கள் இருந்தபோதும் 12,000 கோயில்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் பௌத்த கொள்கைக்கு ஏற்றாற்போல செயற்படுவன 5000 அளவில் உண்டு. ஒவ்வொரு கோயிலிலிருந்தும் சிங்கள பௌத்தர்கள் 1000 வீதம் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இயலும். யாருக்குத்தான் வெற்றி என்பதைப் பார்த்துக் கொள்வோம்.. இந்த மாற்றத்தை நாங்கள் செய்வோம். தலைவனில்லாத இனத்திற்கு நாங்கள் தலைமைத்துவம் ஒன்றைப் பெறுவோம். அதனை எங்களால் மட்டுந்தான் செய்யவியலும்.
தலைவன் இல்லாத நாட்டுக்கு, இனத்திற்கு பௌத்த சக்தியின் மூலம் பொறுப்புச் சொல்லக்கூடிய, வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க உரிமைகளைப் பாதுகாக்கும் தலைவனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. இன்று முழுச் சமுதாயமும் நோய்வாய்ப்பட்டுள்ளது. தர்மாசனத்தைப் போலவே சிம்மாசனத்தையும் எங்களால் சரிசெய்ய முடியும் என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம்…”
-கலைமகன் பைரூஸ்
No comments:
Post a Comment