நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் ரொக்சியன் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்படதுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் வட மாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்றில் நிறுத்தினர்.
அவ்வழக்கு விசாரணை கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனுவை கமலேந்திரன் தாக்கல் செய்திருந்தார்.
பிணை மனு மீதான வழக்கு விசாரணையின் போது கடந்த ஒகஸ்ட் மாதம் 29ம் திகதி நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்ற நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர் அனுமதி வழங்கினார். அதை அடுத்து கமலேந்திரன் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் வழக்கு முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க கூடாது எனவும் வாரத்தில் ஒரு நாள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனவும் சாட்சியங்களை தொந்தரவு செய்யக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
எனினும் வழக்கு விசாரணையின் போது கமலேந்திரனை பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதவான் அனுமதித்த போதிலும் பிணை எடுக்க ஆள் இல்லாதமையால் கமலேந்திரன் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டார். அந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது கமலேந்திரனை பிணை எடுக்க அவரது உறவினர்கள் இருவர் முன் வந்ததால் கமலேந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment