சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுதவிர இங்குள்ள சகல பீடங்களும் சரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுவதாகவும், இங்கு இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாசாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய சரீஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குவதாகவும் சொல்லியிருக்கிறார்.
ஊடகவியலாளர் மாநாடொன்றில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருக்கும் இவரைப்பற்றி என்ன சொல்ல ? ஆழமாகவும் நீளமாகவும் தாம் அறிந்த தகவல்களை ஆதாரங்களுடன் பகிர்வதே ஒரு அமைப்பின் நிறைவேற்று அதிகாரிக்கு இருக்க வேண்டிய பண்பு. அதைவிடுத்து கண்டபடி பேசுவதன் மூலம் நாட்டின் கல்வித்துறையையும், பல்கலைக்கழகமொன்றையும் அவமதித்திருப்பது கண்டனத்துக்குரியது.
இங்கு ஐந்து பீடங்கள்தான் இதுவரை காணப்படுகிறது என்று அநேகருக்குத்தெரியும். மேற்சொல்லப்பட்ட பெயர்களில் பீடங்கள் இயங்கவில்லை. அதில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடமானது இளம்பட்டதாரிகளுக்கு இஸ்லாம் தொடர்பான கற்கைகளையும், அரபு மொழியியல் கற்கைகளையும் போதிக்கிறது. அது சிங்கள கற்கைகள், பாளி மொழி தொடர்பான கற்கைகள், சைவ சமய கற்கைகள் போன்று ஒரு சமயநெறி சார்ந்த கற்கையே என்பதும் அநேகருக்குத்தெரியும்.
அதுதவிர இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தென்கிழக்குப்பல்கலைக் கழகமோ, இங்கிருக்கும் பீடங்களோ இயங்கவில்லை. அதுமட்டுமல்ல, இலங்கையின் எந்தப்பல்கலைக்கழகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இசைவாகவே இயங்குகின்றன. எல்லோருக்கும் வெள்ளிடைமலையாகத்தெரியும் விடயங்கள் பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரிக்குத்தெரியாமல் போனதுதான் எப்படி என்று விளங்கவில்லை.
சரீஆ என்பது அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய சட்ட பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய மார்க்க மேதைகளால் எழுதப்பட்ட மார்க்க சட்ட திட்டங்களை குறிக்கும்.
மிக நுணுக்கமான மற்றும் புதிய பிரச்சினைகளுக்குரிய மார்க்க சட்ட திட்டங்களை ஒவ்வொரு பாமர முஸ்லிமாலும் அல் குர்ஆனை மற்றும் அல் ஹதீஸை ஆய்வு செய்து பெற முடியாது. காரணம் ஒவ்வொருவரும் அத்தகைய அறிவையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருப்பதில்லை. எனவே, அத்தகைய சட்ட திட்டங்களை மார்க்க மேதைகள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து தொகுத்து சட்டங்களாக இயற்றி பாமர மக்களுக்கு இலகுவாக விளங்கி கொள்ளக்கூடிய விதத்தில் அமைத்து கொடுத்துள்ளார்கள். அவையே இஸ்லாமிய சட்டங்கள் (சரிஆ) எனப்படுகிறது. இது இலங்கையில் காணப்படக்கூடிய கண்டியன் சட்டம் (Kandyan Law), தேசவழமைச்சட்டம் (Thesawalamai Law) மற்றும் முஸ்லிம் சட்டம் (Muslim Law) போன்று, சிக்கலான சூழ்நிலைகளில் தீர்வினைப்பெற பயன்படும் சட்டமே அன்றி வேறு எந்த தவறான வழிகாட்டல்களையும் இது கொண்டிருக்கவில்லை.
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற கலைப்பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், முகாமைத்துவ வர்த்தக பீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடம், பொறியியல் பீடம் என்பன சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கக்கூடிய தரமான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கிலேயே இயங்கி வருகிறது. இங்கே பல்லின சமூக மாணவர்கள் ஒற்றுமையாகவும், சிறந்தமுறையிலும் தத்தம் கல்விச்செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இங்கே இஸ்லாமிய சட்டம் திணிக்கப்படுவதாகவோ, இஸ்லாமிய சட்டங்களை மையப்படுத்தி மட்டுமே பீடங்கள் இயங்குவதாகவோ யாரும் இதுவரை எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அப்படியிருக்கும்போது இவ்வாறான நச்சுவிதைகளை உள்ளகத்தே கொண்ட செய்திகள் எல்லா தரப்பினரையும் வேதனைப்படுத்துவதை யாரும் மறுப்பதற்கில்லை.
எனவேதான் இவ்வாறான போலியான கருத்துக்களும், இனவாதத்தை தூண்டக்கூடிய கருத்துக்களும் நிறுத்தப்படவேண்டியவை என்பதோடு உயர்கல்வி நிறுவனமொன்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அறிவார்ந்த சமூகமொன்றை பிரசவிக்க அரும்பாடுபடும் தென் கிழக்குப் பல்கலைக்கழகமானது அண்மைக்காலமாக பல சாதனைகளையும், பல முன்னேற்ற அடைவுகளையும் சாதித்துக்கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாக்கம் :-
எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடம்
இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
No comments:
Post a Comment