ரஷ்யா உடனான யுத்த அச்சுறுத்தல்கள் குறித்து ஜேர்மனியில் பதட்டங்கள் அதிகரிக்கின்றன. By Ulrich Rippert and Peter Schwarz
இரண்டு முன்னணி ஜேர்மன் வணிக பத்திரிகைகளான Handelsblatt மற்றும் Frankfurter Allgemeine Zeitungக்கு (FAZ) இடையே ரஷ்யாவை நோக்கிய ஜேர்மன் கொள்கையின் மீது ஒரு கடுமையான கருத்துமுரண்பாடு வெடித்துள்ளது. ரஷ்யா உடன் ஓர் அதிரடி மோதலுக்கு FAZ அழைப்புவிடுத்து வருகின்ற நிலையில், Handelsblatt இதை யுத்தத்திற்கு நேரடியாக இட்டுச் செல்லும் ஒரு "தவறான பாதையாக" வர்ணிக்கிறது. இந்த முரண்பாடு, எதிர்கால ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் திசை பற்றி ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கூர்மையான விரிசல்களை வெளிப்படுத்துகிறது.
உக்ரேனில் நெருக்கடி தொடங்கியதில் இருந்தே, தோற்றப்பாட்டளவில் ஒட்டுமொத்த ஜேர்மன் ஊடகமும் மத்திய அரசாங்கத்தின் வலிய தாக்கும் போக்கை ஆதரித்து, ஊக்குவித்துள்ளன. ஜேர்மன் ஏற்றுமதி தொழில்துறைக்காக பேசும் Handelsblatt, சற்று கூடுதலான விவேகத்துடன் இருக்குமாறு முன்னெச்சரிக்கை செய்திருந்தது.
ஆனால் கடந்த திங்களன்று, Handelsblatt இன் பதிப்பாளர் காபோர் ஸ்ரைன்கார்ட் FAZ மீது ஒரு நேரடி தாக்குதலைத் தொடுத்தார். Handelsblatt சந்தாதாரர்களுக்கு தினந்தோறும் மின்னஞ்சலில் அனுப்பப்படும் அவரது "காலை அறிக்கை" (Morning Briefing) கட்டுரையில், அவர் "ரஷ்யாவிற்கு எதிரான ஒரு தாக்குதலுக்கு”, “பகிரங்கமாக" அழைப்புவிடுக்கும் FAZஇன் பதிப்பாசிரியர் குழுவைக் குற்றஞ்சாட்டினார். FAZஇன் முதல் பக்கத்தில் அதேநாளில் பிரசுரமாகி இருந்த "பலத்தைக் காட்டுங்கள்" என்ற பிரதான கட்டுரையை அவர் மேற்கோளிட்டிருந்தார், அது மேற்கின் "இராணுவ தற்பாதுகாப்பைப் பலப்படுத்தவும் மற்றும் அதை செய்வதற்கான அதன் விருப்பதை எடுத்துக்காட்டவும்" முறையிட்டிருந்தது. அதுபோன்ற வரிகள் "சித்தாந்தரீதியில் ஒரு பலவந்தமான கட்டளையைக்" குறிப்பதாக ஸ்ரைன்கார்ட் குற்றஞ்சாட்டினார்.
FAZஉம் உடனடியாக விடையிறுப்பு காட்டியது. கிறிஸ்டியான் கேயெர், ஸ்ரைன்கார்டின் குற்றச்சாட்டுகளை "அர்த்தமற்றவை" என்று வர்ணித்ததோடு, “வணிக ஆதரவுவட்டங்களிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு" அவர் அடிபணிவதாகவும், “வியாபாரமே சிறந்ததும் மிகவும் முக்கியமானதும் என்னும் பொருளாதாரவாதத்திற்கு ஓர் ஊதுகுழலாக" அவர் தன்னைத்தானே ஆக்கிக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார். “புட்டின் என்னவெல்லாம் செய்தாலும், அவரோடு சிநேகத்தோடு இருங்கள்; இல்லையென்றால் ஜேர்மனியில் இருக்கும் வணிகம் ஒரு பொருளாதார பிரச்சினையைச் சந்திக்கக்கூடும்," என்ற ஸ்ரைன்கார்டின் சூத்திரத்தை கேயெர் குற்றஞ்சாட்டினார்.
FAZஇன் கருத்துப்படி, ரஷ்ய இராணுவத்தினது "இராணுவ ஆக்கிரமிப்பு" ஏற்கனவே தொடங்கி விட்டது, மேலும் இதை கருத்திலெடுக்கத் தவறும் எவரொருவரும் துன்பியலான விதத்தில் யதார்த்தத்துடன் தொடர்பை இழந்துவிட்டவர்களாக இருக்கிறார்கள்.
"தவறான பாதையில் மேற்கு" என்ற தலைப்பில் ஸ்ரைன்கார்ட் ஒரு நீண்ட கட்டுரையுடன் விடையளித்தார். அக்கட்டுரை வெள்ளியன்று ஒரே நேரத்தில் ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாயின. அது குறிப்பித்தக்கதாகும் ஏனென்றால் ரஷ்யா உடனான யுத்தத்தின் உடனடி அச்சுறுத்தலை எச்சரிக்க, முதலாளித்துவ ஊடகங்களில் அரிதாக தென்படும் ஒரு பகிரங்கதன்மையைக் அது கையாள்கிறது.
Handelsblatt பதிப்பாசிரியர் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தப் பிரச்சாரத்தை முதலாம் உலக யுத்தத்தின் தொடக்கத்தில் இருந்த யுத்த குதூகலத்துடன் ஒப்பிடுகிறார். உக்ரேனை ஆயுதபாணியாக்குவது குறித்து அமெரிக்க காங்கிரஸ் பகிரங்கமாக விவாதித்து வருகின்ற நிலையில், “வரலாறு மீண்டும் திரும்புவதில்லை" என்ற சூத்திரம் அவரை அமைதிப்படுத்தவில்லையென அவர் எழுதுகிறார். முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஸிபெக்னியேவ் பிரஷிஷின்ஸ்கியோ (Zbigniew Brzezinski) போராடுவதற்காக வீட்டுக்கு வீடு மற்றும் வீதிக்கு வீதி உள்நாட்டு பிரஜைகளை ஆயத்தப்படுத்த வேண்டுமென பரிந்துரைத்து வந்தார். மேலும் ஜேர்மன் சான்சிலரும் "கடுமையான நடவடிக்கைகளை எடுக்க" அவர் தயாராக இருப்பதாக அறிவித்து வந்தார்.
Tagesspiegel, Frankfurter Allgemeine Zeitung, Süddeutsche Zeitung மற்றும் Der Spiegelஇன் பெயர்களைக் குறிப்பிட்டுக் காட்டியே, ஸ்ரைன்கார்ட் ஜேர்மன் ஊடகத்தின் இணக்கவாதத்தைத் (conformism) தாக்கினார். அவரது பார்வையில், ஜேர்மன் இதழியல் ஏதோ ஒரு சில வாரங்களில் "ஒரு சீரான மட்டத்திலிருந்து ஆக்ரோஷத்திற்குள் சென்றிருக்கிறது." அந்த கருத்துக்களின் தொகுப்பு, "ஒரு குறிபார்க்கும் துளை அளவிற்கு சிறியதாக சுருங்கி குறுகிப் போய்விட்டது ... சிந்தனைகள் மற்றும் கருத்துக்களில் போட்டியாக இருக்க வேண்டுமென நாம் கருதிய செய்தியிதழ்கள் இப்போது ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிரான தடைகளுக்கு அழைப்புவிடுக்கும் அரசியல்வாதிகளின் குரல்களோடு வரிசையாக அணிவகுத்துள்ளன," என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஸ்ரைன்கார்ட் அவரது கட்டுரையின் இறுதியில், அமெரிக்காவின் அரசியல் போக்கைக் கைவிடுமாறு சான்சிலர் அங்கேலா மேர்க்கெலுக்கும் மற்றும் வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையருக்கும் அவசரகதியில் முறையீடு செய்கிறார். “(யா)ரும் நம்மை ஏவலாளி பாத்திரத்தை வகிக்க நிர்பந்திக்கவில்லை," என்று அவர் எழுதுகிறார். ஜனாதிபதி ஒபாமாவும் "மற்றும் புட்டினும் கனவில் நடப்பதைப் போல முட்டுச்சந்து என்று குறிப்பிட்டுக் காட்டும் ஒரு வழிகாட்டி பலகையை நோக்கி எவ்வாறு உந்திச் சென்று கொண்டிருக்கிறார்கள்," என்பதை ஒவ்வொருவராலும் காண முடியும் என்கிறார்.
இராணுவ தீவிரப்படுத்தலில் ஈடுபடுவதற்கான அமெரிக்க போக்கு தன்னைத்தானே நிரூபித்துக் காட்டவில்லை என்று ஸ்டெய்ன்கார்ட் வாதிடுகிறார். இரண்டாம் உலக யுத்தத்தில் வெற்றிகரமாக நோர்மண்டியில் தரையிறங்கியதற்குப் பின்னர், அனைத்து பிரதான அமெரிக்க யுத்தங்களான கொரியா, வியட்நாம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் தெளிவாக தோல்வி அடைந்திருந்தன. போலாந்து எல்லையை நோக்கி நேட்டோ துருப்புகளை நகர்த்துவதும், உக்ரேனை ஆயுதபாணியாக்குவது குறித்து சிந்திப்பதும் "இராணுவ வழிவகைகளைக் கொண்ட ராஜாங்க நடவடிக்கைகளின் தோல்வியினது ஒரு தொடர்ச்சியாகும்" என்கிறார்.
மத்திய அரசாங்கம் வில்லி பிராண்ட்டை முன்னுதாரணமாக கொண்டு வழி நடக்க வேண்டுமென ஸ்ரைன்கார்ட் ஆலோசனை வழங்குகிறார். 1961இல் பேர்லினின் ஒரு நகரசபை தலைவராக இருந்த பிராண்ட், “பிளவின் பேரழிவிலிருந்து மிகப் பெரிய யுத்த பேரழிவிற்குள் விழுந்துவிடக் கூடாதென்பதற்காக" அந்த சுவர் கட்டப்படுவதன் மீதிருந்த அவரது செல்லுபடியாக ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார். “அந்த சுவரில் உங்கள் தலையை முட்டிக் கொள்ள ஓடும் ஒரு கொள்கையைப்" பின்தொடர்வதற்கு மாறாக, ரஷ்யாவுடன் ஒரு "நலன்களின் மீள்-இணக்கத்தை" எட்டுவதற்குரிய ஒரு கொள்கையை வடிவமைப்பதே ஜேர்மனிக்கு அவசியமாகும் என்றார்.
அந்த இரண்டு வணிக நாளிதழ்களுக்கு இடையிலான கூர்மையான வார்த்தை பரிமாற்றங்கள், ஒரு அணுஆயுத பேரழிவுக்குள் அபிவிருத்தி அடையக்கூடிய, ரஷ்யா உடனான ஒரு யுத்த அபாயம் ஊடகங்களால் வேறுவழியின்றி ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதையும் விட இன்னும் மேலதிகமாக உடனே நிகழக்கூடியதாக இருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. பிரதான முதலாளித்து நலன்கள் இந்த அச்சுறுத்தலை மிகத் தீவிரமாக கையாளும் என்பதையே ஒரு உடனடி இராணுவ தீவிரப்படல் மீதான Handelsblatt பதிப்பாசிரியரின் கூர்மையான எச்சரிக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
நீண்டகாலமாகவே, ஜேர்மன் வணிக அமைப்புகள் உக்ரேனிய நெருக்கடியில்—முழுமனதுடன் இல்லையென்றாலும் கூட—"அரசியலின் முன்னுரிமைக்கு" மண்டியிடுவதற்கான அவற்றின் விருப்பத்தை அறிவித்திருக்கின்றன. எவ்வாறிருந்த போதினும், ஜேர்மன் பொருளாதாரத்தின் மீது ஒரு பாதிப்பான தாக்கத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தாலும் மற்றும் ஐரோப்பாவை மீண்டும் மந்தநிலைக்குள் தூக்கிவீசக்கூடியதுமான ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான தடைகள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அவை அவற்றின் மௌனத்தை இப்போது கலைத்து வருகின்றன.
அதேநேரத்தில், இராணுவ மோதலின் அபாயம் அன்றாடம் அதிகரிக்கின்றது. லூஹன்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் நகரங்கள் மீதான உக்ரேனிய இராணுவத்தின் முற்றுகை மற்றும் குண்டுவீச்சுக்கள் நூறு ஆயிரக் கணக்கானவர்களை ரஷ்யாவிற்கு வெளியேற நிர்பந்தித்துள்ளதோடு, ஒரு இராணுவ விடையிறுப்புக்குள் ரஷ்யாவைத் தூண்டிவிடுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
வியாழனன்று, நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முஸ்சென் கியேவிற்கு பயணித்ததோடு, மேற்கத்திய கூட்டணியின் நிதியியல் மற்றும் இராணுவ ஆதரவுகள் குறித்து உக்ரேனிய அரசாங்கத்திற்கு உறுதியளித்தார். கியேவில் உள்ள ஆட்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் ஆதரவை அறிவித்தார். அதேநேரத்தில் ஏவுகணை தாங்கிய யுத்தக்கப்பல், Vella Gulf, 400 சிப்பாய்களின் கடற்படை குழுவோடு கருங்கடலுக்கு வியாழனன்று வந்தடையும் என்பதை அமெரிக்க கடற்படை அறிவித்தது.
இது முன்னணி ஜேர்மன் வட்டாரங்களுக்குள் இருந்து, வெளியுறவு கொள்கையின் ஓர் அடிப்படை புனரமைப்பை அறிவுறுத்தி மேலதிகமாக அழைப்புகளுக்கு, அதாவது அமெரிக்காவின் கூட்டணியிலிருந்து விலகி ரஷ்யா உடன் நெருக்கமான கூட்டுறவுக்கு நகர்வதற்கான அழைப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.
ஸ்ரைன்கார்ட் அமெரிக்க வெளியுறவு கொள்கையை கூர்மையாக தாக்குகிறார், ஆனால் அதுபோன்றவொரு போக்கின் மாற்றத்திற்கு அவர் போதுமானளவிற்கு அழைப்புவிடுக்கவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக அது ஜாகோப் ஒகுஸ்டீனால் செய்யப்படுகிறது, அவர் அவரது வாராந்திர Spiegel Online கட்டுரையில் ஸ்ரைன்கார்டின் போக்கை போன்ற அதேபோன்றவொன்றை பரிந்துரைக்கிறார். Spiegel பதிப்பாசிரியர்கள் ரஷ்யா மீது வலிந்து தாக்கும் மோதலுக்கு உரக்க கூச்சலிட்டிருந்த போதினும், Spiegelஇன் சக-உரிமையாளரான ஒகுஸ்டீன் ரஷ்யா உடன் சேர்ந்து—அதுவும் "அவசியமானால் அமெரிக்கா இல்லாமலேயே கூட"—புதிய பாதுகாப்பு கட்டமைப்புகளைக் கட்டியெழுப்புவதற்கு கோருகின்றார்.
ஸ்ரைன்கார்ட் மற்றும் ஒகுஸ்டீனின் நிலைப்பாடு, யுத்தத்திற்கான ஒரு கோட்பாட்டுரீதியிலான எதிர்ப்பையோ அல்லது சமாதானத்திற்கான ஒரு அர்ப்பணிப்பைக் கூட முற்றிலுமாக விலக்கி வைத்துள்ளது. அதற்கு மாறாக, அவர்கள் ஜேர்மன் பொருளாதாரத்தின் ஒரு அடுக்கிற்காகவும் மற்றும் அமெரிக்க நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருப்பதால் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தம்நாடும் கொள்கையை நிராகரிக்கும் ஜேர்மன் அரசியல் சிந்தனையின் ஒரு பிரிவுக்காகவும் பேசுகிறார்கள். அவர்களின் விமர்சனங்கள் ஜேர்மன் மற்றும் அமெரிக்க கொள்கைக்கு இடையே உள்ள நெருக்கமான பிணைப்பின் மீது கவனம் செலுத்துகின்றது.
ஸ்ரைன்கார்ட் குறிப்பிடுவதைப் போல ஜேர்மன் அரசியலும் பெருவணிகமும் அமெரிக்காவின் ஒரு "ஏவலாளியாக" இல்லாமல், அவற்றின் சொந்த நலன்களைச் சுதந்திரமாக பின்பற்ற அவற்றை அனுமதிக்கும் ஒரு வெளியுறவு கொள்கையை அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த போக்கு தவிர்க்க முடியாமல் ஓர் ஆயுதமயமாக்கலுக்கும் மற்றும் இராணுவவாதத்திற்கும் இட்டுச் செல்லும் என்பதோடு அதன் விளைவாக அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளோடு பகிரங்கமாக மோதலுக்கும் இட்டுச் செல்லும்.
கூர்மையான யுத்த அபாயத்திற்கான ஆழமான காரணம், வெறுமனே ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளில் தங்கியிருக்கவில்லை. அது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே மூலப் பொருட்கள், சந்தைகள் மற்றும் மூலோபாய மேலாதிக்கத்திற்கான ஓர் உலகளாவிய யுத்தத்தினூடாக உலகை மறுபங்கீடு செய்ய, ஏகாதிபத்திய சக்திகளை எது உந்திச் செல்கின்றதோ அந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளிலிருந்து எழுகின்றது. சமூகத்தின் ஒரு சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த யுத்த அச்சுறுத்தலைக் கடந்து வரமுடியும்.
0 comments :
Post a Comment