தாயையும் 6 வயது மகளையும் கெடுத்த சந்தேக நபரைப் பிடிப்பதற்கு வெலிகம பொலிஸ் தீவிர முயற்சி!
ஒரே நாளில் இரவு நேரம் ஆறு வயது மகளுடன் அவரின் தாயையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரைக் கைதுசெய்வதற்காக வெலிகம பொலிஸார் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றனர்.
இரவுநேரம் சிறுநீர் கழிப்பதற்காக தனியாக கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த ஆறு வயது குழந்தையை பலவந்தமாக எடுத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள இந்த சந்தேக நபர், மீண்டும் 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் தாயின் கழுத்தில் கத்தியை வைத்துப் பயமுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
வெலிகமையை வசிப்பிடமாக்க் கொண்ட இந்தப் பெண்ணின் கணவன் ஏற்கனவே காலஞ்சென்றுள்ளார் எனவும், 6 வயது மகளுடனும் 9 வயது மகனுடனும் உறங்கிக் கொண்டிருந்தபோதே சந்தேகநபர் வீட்டுக்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் வசித்துவந்த வீட்டுக் கதவை மூடக்கூடிய அடைப்பு இல்லை எனவும், கதவைச் சாத்தி மெத்தை ஒன்றைச் சாத்தி வைப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
6 வயது பெண் குழந்தை சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டு, பாயிலிருந்து எழுந்து செல்லும்போது சந்தேக நபர் கதவைச் சத்தமில்லாமல் திறந்துகொண்டு உள்நுழைந்துள்ளதாகவும், மீண்டும் 3 மணித்தியாலங்களின் பின் மீண்டும் வீட்டுக்குள் பலமாக அடித்துத் திறந்து கொண்டு வந்து தாயைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் அருகிலிருந்த வீடொன்றிற்குச் சென்றுள்ள பெண், அவர்களின் தொலைபேசியினால் 119 இற்கு அழைத்து விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிகம பொலிஸ் தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி டல்ஸி கல்யாணி (1187) மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் குறித்த தாயையும் மகளையும் அநுமதித்துள்ளார்.
சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளார். என்றாலும், வெலிகம பொலிஸார் குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment