Sunday, August 24, 2014

தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் சுஹீரா ஷபீக்கின் நூல் வெளியீட்டு விழா.

தென்கிழக்கு பல்கலைக்கழமும், அதன் விரிவுரையாளர்களும் ஆய்வு முயற்சியிலும், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிலும் ஆழ்ந்து செயற்படும் திறனின் மூலமாக தரமான பட்டதாரிகளை உருவாக்குவதோடு, சமூகத்துக்கும் தன்னாலான பங்களிப்புக்களை நல்கி வருகின்றமைக்கு அண்மைக்கால பல்கலைக்கழக அசைவுகள் கட்டியம் கூறுவதை காணமுடிகின்றது. சர்வதேச ஆய்வரங்குகள், இலங்கையின் மிகப்பெரிய நூலக திறப்பு, விரிவுரையாளர்களின் சமூக பங்களிப்புகள், நூல் வெளியீடுகள், வெளிநாட்டு ஆய்வரங்குகளில் அதிக விரிவுரையாளர்களின் ஆய்வு கட்டுரைகள், அங்கீகரிக்கப்பட்ட சஞ்சிகைகளில் ஆராய்ச்சிக்கட்டுரைகள், உலக பல்கலைக்கழக தரவரிசையில் முன்னேற்றம், இலங்கை பல்கலைக்கழக தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்தமை என்று இப்பல்கலைக்கழகமானது குறைந்த காலப்பகுதியில் அதிக சாதனைகளை சாதித்து வருகின்றது. அந்தவரிசையில் மற்றொரு மைல்கல்லாக தென்கிழக்குபல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் சமூகவியல் விரிவுரையாளரான திருமதி சுஹீரா ஷபீக் எழுதிய “சமூகவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்” எனும் நூலானது கடந்த 21.08.2014 ம் திகதி இலங்கை தென்கிழக்குபல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து சிறப்பித்ததோடு, சிறப்பு அதிதியாக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அலியார் கலந்துகொண்டார்.
அதிதிகளாக மொழித்துறைத்தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் அவர்களும், அரபு மொழித்துறைத்தலைவர் எம்.எச்.ஏ.முனாஸ் அவர்களும் பங்கேற்றிருந்தனர்.

சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், நூலகர், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெருவாரியான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் வரவேற்புரையை இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட தகவல் தொழிநுட்ப விரிவுரையாளர் எப்.எச்.ஏ.ஷிப்லியும், பிரதம அதிதி உரையை பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களும், அதிதி உரையை பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அலியார் அவர்களும் மீள்பார்வை ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் வெளியீட்டாளர்கள் சார்பில் கலந்து கொண்டு வெளியீட்டுரையும். பெருவெளி செயற்பாட்டாளரும், தமிழ் ஆசிரியருமான எழுத்தாளருமான ஏ, அப்துல் ரசாக் நூல் விமர்சன உரையையும், கலை கலாச்சார பீட சமூகவியல் விரிவுரையாளர் எம்.றிஸ்வான் நன்றியுரையும் ஆற்றினர்.

நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் உபவேந்தர் மூலமாக தனது பெற்றோருக்கு வழங்கி அவர்களை கௌரவப்படுத்தினார்.

இளம்பட்டதாரிகளின் கற்றல் செயற்பாட்டை இலகுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்நூலை பெற விரும்பும் மாணவர்கள் நூலாசிரியரை அல்லது இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தை தொடர்புகொண்டு பெறமுடியும்.

தகவல் :-
எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com