ஐ.எஸ். அமைப்பு மிகவும் அதிபயங்கரமான இயக்கமாம் ! அமெரிக்கா
நாம் இதுவரை கண்ட பயங்கரவாத இயக்கங்களை எல்லாம் விட இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) அமைப்பு மிகவும் அதி பயங்கரமான இயக்கம் எனவும் அவர்களிடம் ஆபத்தான சித்தாந்தம், அதிநவீன வல்லமை, வலிமையான நிதி ஆதா ரம் ஆகியவை ஒருசேர அமைந்துள்ளன என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் சக்ஹேகல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மற்ற பயங்கரவாத குழுக்களை போலவே ஐ.எஸ் அமைப்பும் பணபலம், அதிநவீன வசதிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. அண்மையில் அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் பாலியை அவர்கள் கொன்ற விதமும், அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையும் காட்டுமிராண்டித்தனமானவை. அவர்களிடம் நாகரீகமோ, மனித இயல்போ துளியும் கிடையாது.
ஜேம்ஸ் பாலி உள்ளிட்ட சிரியாவில் உள்ள அமெரிக்க பிணை கைதிகளை விடுவிக்க உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய மீட்பு நடவடிக்கைகள் தோல்வி யடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
அங்கு பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள அமெரிக்கர்களை தாயகம் அழைத்து வருவதிலும் குற்றவாளிகளை தண்டிப்பதிலும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. ஈராக்கில் அமெரிக்கா உதவியால்தான் அந்நாட்டு ராணுவமும் குர்து படையும் இர்பில் நகருக்குள் ஐ.எஸ் முன்னேற விடாமல் தடுக்க முடிந்தது. இதனால் அங்கு பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
மொசூல் அணையை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்க அமெரிக்காவின் விமான தாக்குதல்கள் பக்கபலமாக இருந்தன. அந்த அணையை மீட்டதன் மூலம் ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்ந்து கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது என்றார் ஹேகல்.
அமெரிக்க ராணுவ கூட்டுப்படைகளின் தலைமை தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறுகையில், ஐ.எஸ் அமைப்பின் லட்சியம் நிறைவேறினால் மத்திய கிழக்கு நாடுகளின் இயல்பை அது மாற்றியமைத்து விடும். இது பல வழிகளிலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார்.
0 comments :
Post a Comment