விக்கிக்கு அதிகாரம் கொடுத்தது யார்! பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் விக்கிக்கு இல்லை- உயர்நீதிமன்றம்!
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக, வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகியோரினால் இன்று வழங்கப்பட்டது.
மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு. தவிர, அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்ததுடன் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதில்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
இதன்போது, மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளதென தீர்ப்பளித்த நீதியரசர்கள் குழு, 'வட மாகாணசபையின் நடவடிக்கைகளை முறையாகக் கொண்டு செல்வதற்கு இரு தரப்பினரும் ஒற்றுமையாக சேவையாற்ற வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கியது.
முதலமைச்சர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, 'பொதுச் சேவைகள் தொடர்பில் கட்டளையிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவையே சாரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக' குறிப்பிட்டார்.
தனது வேலையில் தலையிடுகிறார் எனவும் தன்னை வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார் எனவும் கூறி முதலமைச்சர் விக்னேஸ்ரனுக்கு எதிராக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வட மாகாண முதலமைச்சரினால், வட மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் தனது உரித்துக்கள் பறிக்கப்படுவதாக அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த மனு, கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படபோது, முதலமைச்சரினால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் அன்று தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் மாகாணத்தின் நல்லாட்சியை மனதில் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வழியாக, நட்புறவு ரீதியாக இணைந்து வேலைசெய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் ஜூலை 14ஆம் திகதி கோரியிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் எண்ணத்தை வடமாகாண நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வழக்குரைஞர்களிடம் அன்றையதினம் கேட்டிருந்தார். இதனை தத்தம் தரப்பினரிடம் பேசி அடுத்த தவணையின்போது ஒரு நட்பு ரீதியான தீர்வுடன் வருமாறுமாறும் பிரதம நீதியரசர், வழக்குரைஞர்களிடம் கேட்டிருந்தார்.
இந்நிலையில், சுற்றறிக்கையை விலக்கிகொள்வதாக முதலமைச்சர், சத்தியக் கடதாசி ஊடாக மன்றுக்கு அறிவித்துள்ளார் என்று அவர் சார்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞர்கள் ஜூலை 14ஆம் திகதி, மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனிடையே குறுக்கிட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த சுற்றறிக்கையை முறைப்படி வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த, முதலமைச்சர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், சத்தியக்கடதாசி மூலமாக வாபஸ் பெற்றுவிட்டோம் என்றனர். இதனையடுத்தே, இந்த மனுமீதான தீர்ப்பு கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி வழக்கப்படும் என்று ஜூலை 28ஆம் திகதி திங்கட்கிழமை (28), உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே மனுமீதான தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமையான இன்று வழங்கப்படும் என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment