இலங்கையின் இறைமையை இந்தியா மதிக்கவேண்டும் என்றும் வட மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் கோர முடியாது என்றும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதியும் ஆணைகுழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நிபுணர்களில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த அவ்தாஷ் கௌசால் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கைக்கு உதவும் வேளை இந்தியா, இலங்கையின் இறைமையை மதிக்கவேண்டும் எனவும் இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் பேசலாம், ஆலோசனை கூறலாம் ஆனால், இப்படித்தான் நடக்கவேண்டும் என இலங்கைக்கு கூறமுடியாது. இலங்கையும் இந்தியாவும் பரஸ்பரமற்றவகையில் இறைமையை மதிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரிவினைவாதிகளை அழைத்து, இலங்கை பேசினால் இந்தியரான எமக்கு எப்படியிருக்கும் என அவர் கேட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னணியில் இந்தியாவும் இலங்கையும் மற்றவர் இறைமையை மதிக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடாது. ஆனால், இலங்கை பிரச்சினையை தீர்க்க உதவவேண்டும். நாம் பெரியண்ணனாக இருக்கக்கூடாது. இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கக்கூடாது. ஆனால், எமது நிலைப்பாட்டை அவர்கள் விளங்கும் வகையில் தெளிவாக்க வேண்டும்.
13ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு அதிகார பகிர்வு செய்வதில் இதுவரை உண்டான முன்னேற்றத்தை நாம் பாராட்டவேண்டும். அதிலிருந்து முன்னகர இலங்கைக்கு ஊக்கமளிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியன் எஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் தொலைபேசியூடாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment