Wednesday, August 27, 2014

சந்தி சந்தியாய் சத்தமிட்டு சன்மார்க்கம் காக்க முடியாது!

வீதியிலும் சந்தி சந்தியாகவும் கூச்சலிட்டு, ஊர்வலங்கள் சென்று, போராட்டங்கள் நடாத்தி, சண்டை சச்சரவில் ஈடுபட்டு, மதம் சார்ந்த விடயங்களை மக்கள் மனதில் நிலைநாட்ட முடியாது என கல்விச் சேவைகள் அமைச்சர் துமின்த திசாநாயக்க குறிப்பிட்டார்.

அநுராதபுரம் சிராவஸ்திபுர ஸ்ரீ சுவர்ண ஜயந்தி விகாரையில் நிர்மாணிக்கவுள்ள தூபிக்காக அடிக்கல் நட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தத் தூபிக்காக கட்சி பேதமின்றி, பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், மத வேறுபாடின்றி பௌத்தர்களும் முஸ்லிம்களும் அடிக்கல் வைத்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -

“எந்தவொரு மதமும் அந்த மதத்தைப் பின்பற்றுவோருக்கு நல்ல மதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனங்களை விமர்சித்து, மதங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, எந்தவொரு மததிற்கும் சிறந்த மதமாக ஆகவே முடியாது.

பௌத்த சமயம் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு பாரிய பொறுப்புள்ளது. மிகப் பழைய காலம் தொட்டு பௌத்த சமயத்தை பௌத்த மதகுருமாரும், பிக்குணிகளுமே காத்து வந்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. இனியும் பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களையே சாரும். அவர்களுக்கு நாங்கள் உந்துசக்திகளாக இருக்க வேண்டும். எங்கள் எதிர்காலச் சந்ததியினரை நல்வழிப் படுத்துவதற்காக நாங்கள் ஆவன செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் பௌத்த விகாரைகளையும், முஸ்லிம் பள்ளிவாசல்களையும், இந்துக் கோயில்களையும் பயன்படுத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment