நிறைவேற்று அதிகாரம் கொண்டவரால் சட்டத்துறைக்கும் பிரச்சினையே!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒருவர் சட்டத்திற்கு சோரம் போவதில்லை எனவும், அவர் ஆயிரம் உயிர்களைக் கொன்றாலும் நீதிமன்றத்தின் முன் அவரைக் கொண்டுவர முடியாது எனவும் மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிடுகின்றார்.
பாராளுமன்றத்திற்கோ யாப்புக்கோ, நீதிமன்றத்திற்கோ அவர் பொறுப்புச் சொல்ல மாட்டார் எனவும், உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான நிறைவேற்று அதிகாரம் கொண்ட பலம்மிக்க ஒருவர் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொழும்பில் “ வளமான நாட்டுக்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்தால்கூட அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது எனவும், ஏற்கனவே இந்த நிறைவேற்று அதிகார முறைமைக்கு மகாசங்கத்தினரும், ஏனைய மதங்களின் மதகுருமார்களும், கல்வியலாளர்களும் ஏன் மகிந்த ராஜபக்ஷ கூட எதிர்ப்புத் தெரிவித்தனர். மகிந்த ராஜபக்ஷ தனது மகிந்த சிந்தனையின் இம்முறையை நீக்கி பாராளுமன்றத்தில் பொறுப்புச் சொல்லக்கூடிய ஒரு பிரதமரை நியமிப்பதாக கூறியுள்ளார் என்பதையும் அங்கு சுட்டிக்காட்டினார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment