Friday, August 29, 2014

டக்ளஸின் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்திற்குச் சொந்தமானதே குறித்த டிப்பர்!

தடயத்தை அழிப்பதற்காக பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லையாம்

யாழ்ப்பாணம், நவக்கிரி, டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதி கர்ப்பிணி பலியான விடயத்தில் பொலிஸார் எவ்விதத் திலும் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லை என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா தெரிவித்துள்ளார்

குறித்த டிப்பர் வாகனம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்திற்குச் சொந்தமானது. இந்நிலையில், விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

விபத்து இடம்பெற்றதற்கான தடயத்தை அழிப்பதற்காகவே சடலத்தை பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அது முற்றாகத் தவறு. ஒருவர் இறந்தமை தொடர்பில் பொலிஸாரால் அறிய முடியாது. வைத்தியரே கூறமுடியும். ஆகவே. மேற்படி விபத்தில் சிக்கிய பெண் உயிருடன் இருக்கின்றார் என நினைத்து பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். மாறாக தடயத்தை அழிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை' என தெரிவித்தார்.

மேலும், 'இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தை எரித்தவர்களை நாங்கள் கைது செய்யவில்லை. அவர்களை அடையாளம் காண்பதற்குக்கூட நாங்கள் முயற்சி க்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு பொலிஸார் பக்கச்சார்பாக நடந்தனர் என்று கூற முடியும்' என கேள்வி எழுப்பினார்.

அவ்வாறிருக்க, மேற்படி விபத்துச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?' என்று உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், 'இலங்கையில் எப்பாகத்தில் வாகனங்கள் எரியூட்டப் பட்டாலும் அவ்விடத்திற்கு பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் செல்வது வழமை. அந்தவகையில் மேற்படி சம்பவத்திற்கும் அதிகளவான பொலிஸார் சென்றிருந்தனர்' எனக் கூறினார்.

மாத முடிவிற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது. இதன்போது, நவகிரி பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment