Tuesday, August 5, 2014

சபரகமுவ பல்கலை தமிழ் மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்! ஒரு மாணவனின் மார்பில் வெட்டுக்காயம்! (படங்கள் இணைப்பு)

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற தமிழ் - முஸ்லிம் மாணவர்களுக்கு ரக்னா லங்கா பாதுகாப்புப் பிரிவு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் (03) விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பாண முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் எனும் மாணவன் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, பல்கலைக்கழத்தை விட்டுச் செல்லுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளான்.

நேற்று (04) அதிகாலையாகும்போது, விடுதியினுள் மலசல கூடங்களுக்குள் தமிழ் - ஆங்கில மொழிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறாதுவிட்டால் தமிழ் யுவதிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதாகவும், பத்து நாட்களுக்குள் செல்லாதவிடத்து அவர்களை கொன்றொழிப்பதாகவும் எழுதப்பட்டுள்ளன.

தாக்குதலுக்குள்ளான சந்திரகுமார் இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது,

தன்னைத் தாக்குவதற்கு வந்தவர்களில் ஒருவர் பாதுகாப்புப் பிரிவினர் அணியும் சீருடை அணிந்திருந்ததாகவும், அவர் 30 - 35 வயது மதிக்கத்தக்கவர் எனவும் ஏனையோர் சாதாரண ஆடையில் வந்திருந்தாகவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான சந்திரகுமாரின் மார்புப் பகுதியில் வெட்டுக் காயம் உள்ளதுடன் அவர் பலங்கொட வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார்.

(கேஎப்) “ த இண்டிபெண்டண்ட்”

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com