இந்திரா காந்தி மாபெரும் வரலாற்று தவறு புரிந்ததாக ராஜிவ் காந்தி தெரிவித்தாராம்! சுவாமி
தமிழ் மக்களின் உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!
இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார். இந்தியாவை பொறுத்த மட்டில் தேசிய மட்டத்திலான நலனை கருத்திற் கொண்டே தனது வெளிநாட்டு மற்றும் தேசிய கொள்கையை வகுக்குமே தவிர பிராந்திய அல்லது ஒரு தரப்பினரின் தேவையை கருத்திற் கொண்டல்ல என்று தெரிவித்த அவர், இலங்கையும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
தமிழ் நாட்டிலுள்ள சிலரது அழுத்தங்கள் காரணமாகவே இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் அப்போது காணப்பட்டன என்றாலும் எப்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கவும் இல்லை ஒத்துழைக்கவும் இல்லை. இதனை இந்தியாவில் நடைபெற்ற சகல தேர்தல்களின் போதும் மக்கள் நிரூபித்து காண்பித்துள்ளனர்.
தற்பொழுது இந்தியாவில் பலமான அரசாங்கம் பதவியேற்றுள்ளது. எனவே எந்த அழுத்தங்களுக்கும் அடிபணிய தேவையில்லை. ஏனெனில் இலங்கை - இந்திய உறவு மிகவும் பழைமையானது. நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவே எதிர்பார்க்கின்றது. எனவேதான் தனது பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு கொடுத்தார். இதன் மூலம் புதிய உறவின் ஆரம்பத்தை தற்பொழுது காணமுடிகிறது.
சிலருக்கு புரிந்துணர்வு இல்லாமை யினாலேயே இலங்கை. இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டன. இந்திய மக்கள் சகல சந்தர்ப்பங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துள்ளனர். தமிழ் நாட்டிலுள்ள ஒரு சிறிய குழுவினர் மாத்திரமே பயங்கரவாதத்திற்கு ஒத்துழைக்கின்றனர். அது ஒரு பாரிய விடயமல்ல. எனவே தான் புலிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே ஆதரவழித்த சகலரையும் மக்கள் தோற்கடித்துள்ளனர் என்றார்.
புலிகள் சிங்கள தலைவர்களைவிட அதிகமாக தமிழ் தலைவர்களையே கொலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினம் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் சந்தோசமடைகின்றேன். அவர் எனது நண்பராவார். புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிக்க தனது தாயான இந்திரா காந்தி ஆரம்பத்தில் மேற்கொண்ட தீர்மானம் வரலாற்று தவறாகும் என பல தடவைகள் கூறியுள்ளார் என்றார்.
இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்று ஐ.நா. ஒரு போதும் கூறவில்லை. மாறாக பிரித்தானிவிலுள்ள புலிகள் சார்பு அரச சார்பற்ற நிறுவனங்களே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது என்றும் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறிவருகின்றனர். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சரியோ பிழையோ இந்த சம்பவத்தில் அதிகமான சிங்களவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இதனை இன அழிப்பு என கூற முடியாது.
தமிழ் மக்களின் உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு தன்னுடன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண முதலமைச்சரை அழைத்த போது அதனை மறுத்த அவர் அவ்வாறு வருவது தான் தமிழ் சமூகத்திற்கு செய்கின்ற அநீதி என்று கூறியிருந்தார். மற்றும் சிலர் இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் அதே இராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி அபேட்சகராக தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களித்தனர். அதிகாரம் தொடர்பில் பேசுகின்றனர். வடபகுதி மக்களுக்கு தேவையான சகல அதிகாரங்களையும் தான் வழங்கியுள்ளதாக இதற்கு முன்னர் மேற்கொண்ட பல விஜயங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெளிவுபடு த்தினார்.
குறித்த மாகாணத்தில் தேர்தலை நடத்தினால் நாம் தோல்வி அடைவோம் என்று தெரிந்தும் அதிகாரத்தை பகிர வேண்டும் என்பதற்காக வடமாகாண தேர்தலை ஜனாதிபதி நடத்தி முடித்துள்ளார். அந்த தேர்தலின் மூலம் முதலமைச்சர் ஒருவரும் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். உலகில் எந்த ஒரு தலைவரும் செய்யாத வேலை இது வென்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நான்காவது பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நாள் நேற்றாகும். நிறைவு நாள் நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய டொக்டர் சுப்பிரமணியம் சுவாமி இதனை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment