Saturday, August 23, 2014

"தமிழ்ச்சோலை" பாடசாலை என்ற பெயரில் மனமாற்ற பாடசாலைகளை புலிகள் ஐரோப்பிய நாடுகளில் நடத்துகின்றனர் - ஜெனீவா பிரதிநிதி!

"தமிழ்ச்சோலை" பாடசாலை என்ற பெயரில் மனமாற்ற பாடசாலைகளை புலிகள் ஐரோப்பிய நாடுகளில் நடத்து கின்றனர் என தெரியவந்துள்ளது தமிழீழ விடுதலை புலிகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் "மதரஸா" போன்ற போதனை செய்யும் பாடசாலைகளை தமிழ் மக்கள் மத்தியில் நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

"தமிழ்ச்சோலை" என்று புலிகளால் நிர்வகிக்கப்படும் இப்பாடசாலைகள் பல்வேறு பெயர்களில் இயங்குவதாகவும், அங்கு தமிழ் இளைஞர்களிடம் பயங்கரவாத சிந்தனைகள் போதிக்கப்படுவதாகவும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புகள் ஏற்பாடு செய்யும் பிரச்சார நிகழ்வுகளுக்கு வலுக்கட்டாயமாக இந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளச்செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பல்வேறு பெயர்களில் ஐரோப்பாவில் இயங்கி வரும் 300 க்கும் மேற்பட்ட 'தமிழ்ச்சோலை' பாடசாலை களில், 4 தொடக்கம் 21 வயதுக்கு உட்பட்ட சுமார் 20,000 தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசு நிதியில் இப்பாடசாலைகள் இயங்கினாலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புலிகள் மூலம் இவை நிர்வகிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்த பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரவிநாத் ஆரியசிங்க இந்த கருத்தினை முன்வைத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com