கின்னஸ் சாதனைக்குத் தயாராகின்றார் அனிஸ்டஸ் ஜெயராஜ்!
கின்னஸ் சாதனையொன்றை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிரேஷ்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (30) காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
எவ்வித ஓய்வுநிலையும் இன்றி, தொடர்ச்சியாக உணவு, குடிநீர் இன்றி 12 மணிநேரம் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் நூலொன்றினை எழுதி இச்சாதனை நிகழ்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 56 வயதான சிரேஷ்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் சாதனை முயற்சியினை தெளிவுபடுத்தல் தொடர்பான ஊடகவியலாளர் கலந்துரையாடல் திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (24) இடம்பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
“உலகில் பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றபோதும், இலக்கியத் துறை சார்ந்த கின்னஸ் சாதனைகள் பெருமளவில் நிகழ்த்தப்படாத நிலையில் உள்ளன. இந்த்த் துறையில் சாதனையை நிலைநாட்டி திருகோணமலை மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும் பணியை நான் மேற்கொண்டுள்ளேன்…
எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை எவ்வித ஓய்வு நிலையும் இன்றி தொடர்ச்சி உணவு குடிநீர் இன்றி 12 மணிநேரம் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இச்சாதனை நிகழத்தப்படவுள்ளது. “கரன்ஸி இல்லாத உலகம்” என்ற தலைப்பில் எழுதவுள்ள இந்நூலில் அவர் முதல் 4 மணித்தியாலங்களில் “எழுத்தும் எனது வாழ்வும்” எனும் தலைப்பிலும் அடுத்து 4 மணித்தியாலங்களில் “எனது வாழ்வும் உங்கள் கரண்சியும்” எனும் தலைப்பிலும் இறுதி 4 மணித்தியாலங்கள் “கரண்ஸி இல்லாத உலகம்” எனும் தலைப்பிலும் எழுதவுள்ளேன் என்றார்.
இதுவரை 27 நூல்களை எழுதியுள்ள அவர் 25 நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது முதலாவது நூலான சேகுவரா 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரே மொழியில் 1000 நூல்களை வெளியிட வேண்டும் என்ற அவாவில் உள்ளார் அனிஸ்டஸ் ஜெயராஜ்.
-ரபாய்தீன் பாபு ஏ. லத்தீப்
0 comments :
Post a Comment