அமெரிக்க உளவுவேலை மோசடியும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீள்வரவும். By Peter Schwarz
CIA நிலைய தலைவரை இந்த வாரம் வெளியேற்றியதானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜேர்மன் அரசாங்கத்தால் திட்டமிட்டு முன்னோக்கி உந்தப்பட்டும், பிரச்சாரம் செய்யப்பட்டும் வந்துள்ள ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புத்துயிரூட்டலோடு நேரடியாக தொடர்புபட்டதாகும்.
அந்நாட்டை விட்டு CIAஇன் பேர்லின் தலைவர் உடனடியாக வெளியேற வேண்டுமென்ற அரசாங்கத்தின் முறையீட்டிற்கு ஜேர்மன் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் திருப்தியோடு விடையிறுப்பு காட்டி இருந்தன. அது "ஜேர்மன்-அமெரிக்க உறவுகளின் வரலாறில் ஒரு திருப்புமுனையை மற்றும் அமெரிக்க இறுமாப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத ஒரு நடவடிக்கையை," குறிப்பதாக Süddeutsche Zeitung நாளிதழ் எழுதியது.
மிக பரந்தளவில் விற்பனையாகும் அந்த ஜேர்மன் நாளிதழ், அந்த கடுமையான நடவடிக்கையை ஜேர்மனியின் மேலதிக சுதந்திரத்தை நோக்கிய ஒரு படியாக கருதியதோடு, 2003 ஈராக் யுத்தத்தில் ஜேர்மனி பங்களிக்க மறுத்ததோடு ஒரு சமாந்தரத்தையும் வரைந்து காட்டியது: “பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் யுத்தத்திற்கான ஹெகார்ட் ஷ்ரோடரின் எதிர்ப்பு பிரதான கூட்டாளியிடமிருந்து சுதந்திரத்தை உறுதிபடுத்துவதற்கான முதல்படியாக இருந்தது. இப்போது அடுத்த படி எடுக்கப்பட்டுள்ளது," என்று எழுதியது.
Süddeutsche Zeitungஇன் செய்தியின்படி, ஜேர்மானியர்கள் "நியாயமாக நடத்தப்படுவதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதோடு, அமெரிக்கா உடனான கூட்டணியில் ஒரு சம அளவிலான கூட்டாளியாக இருக்கிறார்கள் ... ஜேர்மனி உடனான ஒவ்வொரு விவகாரத்திலிருந்தும் அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை ஒபாமாவும், அவரது மக்களும் நம்பகமான விதத்தில் உணர்வார்கள்; உணர்கிறார்கள்."
பல்வேறு பிராந்திய செய்தியிதழ்களும் இதே தொனியில் பேசின. “ஏனோதானோ என்று கையாள்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது: இந்த சேதி இப்போது வாஷிங்டனை எட்டியிருக்கும்," என்று Nordwest Zeitung அறிவித்தது. மேலும் Neue Osnabrücker Zeitung குறிப்பிடுகையில், “அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து ஜேர்மனி அவமானப்படுத்தப்படுவதை இனியும் உதறிவிட முடியாது," என்று எழுதியது.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், குறிப்பாக இடது கட்சியும், அரசாங்கம் நடவடிக்கையை வரவேற்றது.
உளவுத்துறை சேவைகளுக்கான நாடாளுமன்ற கட்டுப்பாட்டு குழுவில் இடம் பெற்றிருக்கும் இடது கட்சியின் ஆண்ட்ரே ஹான் கூறுகையில், அமெரிக்க உளவுத்துறை தலைவரின் வெளியேற்றம் "வெறும் ஒரு முதல் நடவடிக்கை" மட்டுமே ஆகும் என்றார். “எவ்வாறு அரசாங்கம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உளவுத்துறை அமைப்புகளின் உளவுவேலைகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்க திட்டமிடுகிறது என்பதை, கோடைகால இடைவெளிக்குப் பின்னர் உடனடியாக ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அரசாங்க அறிவிப்பில் விவரிக்க வேண்டும்," என்றார்.
இது மிக முற்றிலும் அர்த்தமற்றதாகும். CIAஇன் பேர்லின் தலைவரை வெளியேற்றியதற்கும் உளவுவேலைகளில் இருந்து பிரஜைகளைப் பாதுகாப்பதற்கும் அங்கே எந்தவொரு சம்பந்தமும் இல்லை. மேலும் இந்த அச்சுறுத்தலில் இருந்து ஜேர்மன் அரசாங்கம் அவர்களை பாதுகாக்கப்போவதுமில்லை. உலகளாவிய தொலைதொடர்பு வலையமைப்புகளின் மீது உளவுபார்த்துக் கொண்டே, கொல்லும் டிரோன்களுக்கான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட ஜேர்மன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உளவுவேலைகளில் மிக நெருக்கமாக கூடி வேலை செய்துள்ளன. இது முன்னாள் NSA ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டனால் வெளியிடப்பட்ட ஆவணங்களில் எடுத்துக்காட்டப்பட்டு இருந்தது.
அவற்றின் அந்த ஒத்துழைப்பு, அமெரிக்க உளவுத்துறை தலைவர் வெளியேற்றப்பட்டதற்குப் பின்னரும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அட்லாண்டிக்கின் இருபுறத்திலும் உள்ள அரசாங்க செய்திதொடர்பாளர்களால் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தான் ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் வழங்குவதையோ அல்லது ஜேர்மனில் வந்து மெய்பித்துக் காட்ட அவரை அனுமதிப்பதற்கு விதிவிலக்கு அளிப்பதற்கோ கூட ஜேர்மன் அரசாங்கம் கடுமையாக மறுப்பு தெரிவித்தது.
ஒரு பிரதான ஏகாதிபத்திய சக்தியாக உலக அரங்கிற்கு திரும்புவதற்கான பேர்லினின் முயற்சியே, வாஷிங்டன் உடனான மோதலுக்கான நிஜமான காரணமாகும். ஏற்கனவே ஜனவரியில், வெளியுறவுத்துறை மந்திரி பிரான்க்-வால்டர் ஸ்ரைன்மையர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கையில், “பூகோள அரசியலில் ஒதுங்கி இருந்து கருத்து தெரிவிப்பதோடு" தன்னைத்தானே மட்டுப்பட்டு கொள்வதினும் மேலாக ஜேர்மனி மிகவும் வீரியமானதும், பலமானதும் ஆகும் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் வெகு விரைவிலேயே, ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் முனிச் இராணுவ மாநாட்டில் ஜேர்மனியின் பலமான இராணுவ ஈடுபாட்டிற்கு ஆதரவாக பேசியிருந்தார்.
அதன் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கு திரும்புவதென்பது, ஒரு முழு உலகளாவிய சக்தியாக அதன் இடத்தை தானாக முன்வந்து விட்டுக்கொடுக்க தயாராக இல்லாத அமெரிக்காவுடன் ஜேர்மனியை மோதலுக்குள் கொண்டு வருகிறது. தற்போதைக்கு இது, "நியாயமாகவும், மற்றும் ஒரு சமமான பங்காளியாகவும் கையாள்வதற்கான" அமெரிக்காவினது விருப்பத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது இதனோடு நின்றுவிடப் போவதில்லை.
இராணுவவாத வளர்ச்சியின் மூல ஆதாரமாக உள்ள, செல்வாக்கு பரப்பெல்லை, மூலப் பொருட்கள், புதிய சந்தைகள் மற்றும் மலிவு உழைப்புகள் மீதான சண்டை சீனா மற்றும் ரஷ்யா நோக்கிய இன்னும் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு மட்டும் இட்டுச் செல்லவில்லை, மாறாக ஏகாதிபத்திய கூட்டாளிகளுக்கு இடையிலான மோதல்களையும் உருவாக்குகிறது. இரண்டுமே ஒரு மூன்றாம் உலக யுத்தத்தில் போய் முடியும்.
ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்கனவே அங்கே கணிசமான பதட்டங்கள் நிலவுகின்றன. உக்ரேனிய அதிகாரத்தில் ஒரு வலதுசாரி, மேற்கத்திய-சார்பிலான ஆட்சியை நிறுவுவதில் அவை கூடி வேலை செய்துள்ள போதினும், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தால் அது முக்கியமாக ஜேர்மனியையும் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களையும் பாதிக்கும் என்பதால், அந்த பிரச்சினையின் மீது அவற்றிற்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
மத்திய கிழக்கில், ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் அதிகளவில் அமெரிக்க கொள்கையில் இருந்து தூர விலகி இருந்து வருகின்றன, அது ஒரு தோல்வியில் போய் முடிந்துள்ளது. மரபார்ந்தரீதியில் அமெரிக்காவின் ஒரு நெருங்கிய கூட்டாளியான முன்னாள் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி ஜோஸ்கா பிஷ்ஷெசர், Süddeutsche Zeitungஇன் விருந்தினர் பக்கத்தில் புதனன்று ஒரு கட்டுரையை பிரசுரித்தார். அமெரிக்க துருப்புகளை "மிக வேகமாக மற்றும் மிகவும் முன்கூட்டியே திரும்ப அழைத்துக் கொண்டதை" அவர் “இரண்டாவது பிழையாக" வர்ணித்ததோடு, அப்பிராந்தியத்தின் பேரழிவுகரமான அபிவிருத்திக்கு "ஆரம்ப தவறாக" அவர் 2003 ஈராக் இராணுவ படையெடுப்பை வர்ணித்துள்ளார்.
அமெரிக்க உளவுவேலைகள் குறித்து முன்னணி ஜேர்மன் அரசியல்வாதிகளிடமிருந்து வரும் தற்போதைய கோபம் பெரிதும் வெறும் காட்சிக்குரியதாகும். 1999இல் இருந்து 2010 வரையில் ஜேர்மன்-அமெரிக்க கூட்டுறவுக்கான ஜேர்மன் அரசாங்க ஒருங்கிணைப்பாளராக இருந்த SPD அரசியல்வாதி கார்ஸ்டன் ஃபோஹ்ட் (Karsten Voigt), Die Zeitக்கு அளித்த ஒரு நேர்காணலில் கூறுகையில், அந்நாட்டின் வெளியுறவு உளவுத்துறை சேவைக்குள் (BND) இருந்து அமெரிக்க உளவாளி வெளிவந்ததில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை என்றார்.
"நம்முடைய அரசாங்கமும், BNDயும் அமெரிக்கா உளவு பார்த்துள்ளது என்பது ஒரு ஆச்சரியத்திற்குரியதா," என்று கேட்கப்பட்ட போது, ஃபோஹ்ட் இவ்வாறு விடையிறுத்தார்: “உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை, ஆனால் அந்த விடயம் அவ்வாறு இருப்பதாக நான் எப்போதும் கருதிகிறேன். தொன்னூறுகளில் என்னுடைய பதவிகாலத்தின் போது, வாஷிங்டனில் இருந்த ஜேர்மன் தூதர்களை, அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்பதற்காக சமாதானப்படுத்த வேண்டி இருந்தது," என்றார்.
ஜேர்மன் அரசாங்கம் அதன் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்காகவும், ஜேர்மன் இரகசிய சேவை மற்றும் இராணுவப் படைகளை விஸ்தரிப்பதற்காகவும், அமெரிக்காவின் குற்றகரமான வெளிநாட்டு கொள்கைக்கு எதிரான பரந்த கோபத்தை சுரண்டுவதற்காக, கோபத்தைக் காட்டுவது போன்ற ஒரு காட்சியை திட்டமிட்டு பயன்படுத்தி வருகிறது. அதுபோன்றவொரு கொள்கை மாற்றமானது, இதர ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தினது குற்றங்களையும் ஒதுக்கி மறைக்கும் ஒரு பாரம்பரியத்திற்கு ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் திரும்பி வருகிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆட்சியிலிருக்கும் கட்சிகளும், பழமைவாத CDU / CSU மற்றும் சமூக ஜனநாயக SPDஇன் ஆதரவை மட்டும் ஜேர்மன் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை, மாறாக எதிர்கட்சிகளான பசுமை கட்சி மற்றும் இடது கட்சியின் ஆதரவையும் பெற்றுள்ளது.
உளவுவேலை மற்றும் யுத்தத்திற்கு எதிராக போராட விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்த மோசடியை நிராகரிக்க வேண்டும். ஜேர்மன் உளவுவேலை சேவைகளை மேம்படுத்துவதன் மூலமாக, NSA, CIA மற்றும் ஏனைய அமெரிக்க சேவைகளால் மில்லியன் கணக்கான மக்கள் மீது நடத்தப்படும் உளவுவேலைகளை நிறுத்த முடியாது, மாறாக ஜேர்மனியிலேயே உள்ளவை உட்பட இரகசிய சேவைகள் அனைத்தையும் கலைப்பதன் மூலமாக மட்டுமே அதை நிறுத்த முடியும்.
யுத்தம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தோடு சேர்ந்து, அரசு உளவுபார்ப்பு மற்றும் கண்காணிப்புக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவத்தை தூக்கி வீசி ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உறுதியளிக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தைக் கோருகிறது.
0 comments :
Post a Comment