Tuesday, July 29, 2014

காசாவில் இஸ்ரேலிய போர் குற்றங்களை இந்தியா மூடி மறைக்கிறது! By Deepal Jayasekera

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதலுக்கு இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் விடையிறுப்பானது, இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி இஸ்ரேலுடன் ஒரு நெருக்கமான கூட்டணியை ஏற்படுத்த பார்த்து வருவதைக் குறித்துக் காட்டுகிறது. இரண்டு வாரங்களாக காசா மீது இஸ்ரேல் ஒரு மரணகதியிலான வான்வழி போர் நடத்திய பின்னர் பாலஸ்தீன பிராந்தியத்தின் மீது அதன் தரைவழி தாக்குதலைத் தொடங்கிய இருந்த நிலையிலும், இந்திய அரசாங்கம் தோற்றப்பாட்டளவிற்கு மவுனமாக இருந்தது.

ஜூலை 10இல், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒரு அறிக்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் இருப்பதற்கு அறிகுறியைக் காட்டியது. "இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே தீவிரமாக அதிகரித்திருக்கும் வன்முறை குறித்து, குறிப்பாக அப்பாவி மக்களைப் பரிதாபகரமாக கொன்றிருக்கும் மற்றும் பலத்த பொருட்சேதங்களை ஏற்படுத்தி இருக்கும் காசா மீதான பலமான வான்வழி தாக்குதல்கள் குறித்து" இந்தியாவின் ஆழ்ந்த கவலைகளை அது வெளியிட்டது. இருந்த போதினும், “இஸ்ரேல் தரப்பின் இலக்குகளுக்கு எதிரான ராக்கெட் தாக்குதல்களால் எல்லை தாண்டிய ஆத்திரமூட்டல்கள் ஏற்பட்டிருந்ததற்கு" அதன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, அது இஸ்ரேலின் தரப்பில் சாய்ந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நடுநிலைமை என்ற போர்வையில் அந்த அரசாங்கம், இஸ்ரேல் காசாவில் அதன் குற்றகரமான நடவடிக்கைகளுக்கு வழங்கும் நியாயப்பாட்டை ஆதரித்தது.

இஸ்ரேலின் படுகொலைகளுக்கு மக்களிடையே எதிர்ப்பு இருந்த போதினும், பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க மறுத்ததோடு, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் மேல்சபையான முறையே லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் கடந்த வாரம் விவாதத்தையும் தடுத்தனர். காங்கிரஸ், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உட்பட உத்தியோகபூர்வ எதிர்கட்சிகள், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன.

ஆனால் இந்த கட்சிகளின் நிலைப்பாடு முற்றிலும் போலித்தனமானதாகும். காங்கிரஸ் கட்சி அந்த யூத-பாதுகாப்புவாத அரசுடன் மிக நெருக்கமாக இராஜாங்க மற்றும் இராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொண்டே, அது பாரம்பரியமாக பாலஸ்தீன மக்களின் ஒரு நண்பனாக காட்டிக் கொண்டதோடு, இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு வெற்று விமர்சனங்களை வெளியிட்டது. 1992இல், சோவியத் ஒன்றியத்தின் பொறிவுக்குப் பின்னர், பிரதம மந்திரி நரசிம்ம ராவின் காங்கிரஸ் அரசாங்கம் தான், இஸ்ரேலுடன் ராஜாங்கரீதியிலான உறவுகளை ஸ்தாபித்தது.

இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், புது டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் உட்பட, இந்தியாவெங்கிலும் பரந்தளவில் நடந்திருந்ததற்கு இடையே, அந்த நாடாளுமன்ற விவாதத்திற்கு அழுத்தம் அளிக்கப்பட்டிருந்தது. காஷ்மீரில் நடந்த போராட்டங்களை ஒடுக்குவதில், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (CRPF) கடந்த சனியன்று குல்காம் மாவட்டத்தில் ஒரு இளைஞரைச் சுட்டுக் கொன்றது.

வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரி சுஷ்மா சுவராஜ் எந்தவொரு விவாதத்தையும் தடுக்க வழங்கிய பரிந்துரையை ராஜ்ய சபா அவைத்தலைவர் நிராகரித்த பின்னர், இறுதியாக திங்களன்று ராஜ்ய சபாவில் காசா மீதான ஒரு விவாதத்தை எதிர்கட்சிகளால் கொண்டு வர முடிந்தது. "நாம் அவ்விரு தேசங்களோடும் இராஜாங்கரீதியிலான உறவுகளைக் கொண்டிருக்கிறோம். ஆகவே எந்தவொரு நட்பு நாட்டையும் தாழ்வுபடுத்தி குறிப்பிடுவது அவர்களுடனான நமது உறவுகளைப் பாதிக்கும்," என்று கூறி சுவராஜ் அவருடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்.

சுவாராஜின் கருத்துக்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா ஈடுபட்டு வரும் அந்த சமநிலைப்படுத்தும் நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது. 1992இல் இருந்து, அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி-தலைமையிலான அரசாங்கங்கள் இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்துள்ளன, அது இப்போது ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப் பெரிய ஆயுத வினியோகஸ்தராக உள்ளது. இஸ்ரேலினது ஆயுத ஏற்றுமதிகளில் 40 சதவீதத்தை இந்தியா விலைக்கு வாங்கி வருவதாக ஒரு இஸ்ரேலிய நாடாளுமன்ற (Knesset) ஆய்வறிக்கை குறிப்பிட்டது. “இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக" போராடுகிறோம் என்ற பெயரில் இந்தியாவும் இஸ்ரேலும் அவற்றின் இராணுவங்கள் மற்றும் உளவுத்துறை எந்திரங்களுக்கு இடையிலான ஆழமான தொடர்புகளையும் அபிவிருத்தி செய்துள்ளன.

வெளியேறவிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் இறுதி நடவடிக்கைகளுக்கு இடையே, இஸ்ரேல் உடன் ஒரு தாயக பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதும் ஒன்றாக இருந்தது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அருகில் உள்ள இந்தியாவின் எல்லைகளை ஒட்டி நிறுவுவதற்காக, கடந்த டிசம்பரில் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா 15 ஆளில்லா டிரோன் விமானங்களை விலைக்கு வாங்கியது. 2009இல், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தந்திரமாக வேவு பார்க்கும் ப்ஹால்கான் உபகரண அமைப்புமுறையை இஸ்ரேலிடம் இருந்து விலைக்கு வாங்கியது.

அதே நேரத்தில், எரிபொருள் இறக்குமதிகளுக்காக இந்தியா மத்திய கிழக்கை பலமாக சார்ந்திருப்பதால், இஸ்ரேலின் தரப்பில் மிக பகிரங்கமாக சாய்வதன் மூலமாகவோ அல்லது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அதன் போர் குற்றங்களை பகிரங்கமாக ஆதரிப்பதன் மூலமோ அப்பிராந்தியத்தின் அரபு முதலாளிகளிடமிருந்து அது அன்னியப்படவும் முடியாது.

ராஜ்ய சபாவில் நடந்த விவாதத்தின் போது, காங்கிரஸைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆஜாத் பேசுகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறிவிட்டதா என கேள்வி எழுப்பி, வெளியுறவுத்துறை மந்திரிக்கு சவால் விடுத்தார். சுவராஜ் பதிலளிக்கையில், “பாலஸ்தீனத்தை நோக்கிய இந்தியாவின் கொள்கையில் முற்றிலும் அங்கே எந்த மாற்றமும் இல்லை. அது முழுவதுமாக பாலஸ்தீன தரப்பை ஆதரிக்கிறது, அதேவேளையில் இஸ்ரேலுடனும் நல்லுறவுகளைப் பேணுகிறது," என்றார்.

இந்த பாரபட்சமற்ற அணுகுமுறை என்று அழைக்கப்படுவதற்குப் பின்னால், அந்த அரசாங்கம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டிருக்கிறது. காசாவின் நிராதரவான மக்கள் மீதான இஸ்ரேலிய யுத்த எந்திரத்தின் தாக்குதலுக்கு ஒரு பெயரளவிலான கண்டனத்தையும் கூட அது வெளியிட மறுத்தது, அல்லது அதை பாலஸ்தீன போராளிகளால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட வரம்புக்குட்பட்ட ராக்கெட் தாக்குதல்களோடு சமாந்தரப்படுத்தி காட்டியது, இந்த ஒரு நடவடிக்கை, இஸ்ரேலில் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பெடுத்துக் கொள்ளப்படும்.

முஸ்லீம்-விரோத இந்து மேலாதிக்கவாதத்தின் அடிப்படையில் அமைந்த பிஜேபி, சந்தேகத்திற்கு இடமின்றி அந்த யூத-பாதுகாப்புவாத ஆட்சியோடு ஒரு அரசியல் உறவைப் பேணுகிறது என்பதோடு, "இஸ்லாமிய பயங்கரவாதத்தின்" மீதான அதன் போரில் அதை ஒரு கூட்டாளியாகவும் கருதுகிறது. இந்த ஆண்டின் தேர்தல்களை வெல்வதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கையில், மோடி இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொண்டிருந்தார்.

மே மாத மத்தியில் வெளியான இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸின் ஒரு கட்டுரை மோடியை "இஸ்ரேலினது தெற்காசியாவின் சிறந்த நண்பராக" பாராட்டி இருந்தது. அது குறிப்பிடுகையில், “மோடியின் தலைமை மற்றும் ஊக்கத்தின் கீழ் ... இஸ்ரேல் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடாக குஜராத்திற்குள் பாய்ச்சி உள்ளது. குஜராத் மற்றும் இஸ்ரேல் இருதரப்பில் இருந்தும் அதிகாரிகள் வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை ஆழப்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளில் ஒருவரையொருவர் சந்திக்க விஜயம் செய்துள்ளனர்," என்று குறிப்பிட்டது.

அதே நேரத்தில், மோடி அரசாங்கத்தால் மத்திய கிழக்கின் அரபு ஆட்சிகளோடு ஒரு பகிரங்கமான முறிவையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாலஸ்தீன மக்களை நோக்கிய அரபு முதலாளிமார்களின் போலித்தனமான பாத்திரத்தை நன்கறிந்துள்ள நிலையில், சுவராஜ் விவாதத்தின் போது, "அவ்விரு நாடுகளுக்கும்—இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்—இடையே பேச்சுவார்த்தைக்கான எகிப்தின் ஏற்பாட்டை ஏற்குமாறு நாம் அவற்றுக்கு கூற வேண்டும்," என்று கூறி, மத்தியஸ்தம் செய்வதற்கான எகிப்தின் ஏற்பாட்டை பிடித்துக் கொண்டார்.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் பாலஸ்தீனியர்கள் எகிப்தில் அடைக்கலம் காண்பதைத் தடுப்பதற்காக காசாவை ஒட்டியுள்ள அதன் எல்லைகளை மூடிமுத்திரையிட்டது உட்பட, ஒரு அமெரிக்க வாடிக்கையாளர் ஆட்சியாக விளங்கும் எகிப்திய இராணுவம் பகிரங்கமாக இஸ்ரேலுடன் ஒத்துழைத்துள்ளது. எகிப்திய இராணுவம் தரகு பேச்சுவார்த்தைகளை வழங்கி வருகிறதென்றால், அது இஸ்ரேலிய போர் குற்றங்களால் மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு கிளர்ச்சிப் பேரலை உருவாக்கப்படுமோ என்ற அச்சத்தினால் மட்டுமே ஆகும்.

ராஜ்ய சபாவில் அந்த விவாதம் நடப்பதற்கு அனுமதித்திருந்த போதினும், பிஜேபி-தலைமையிலான அரசாங்கம் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வர எதிர்க் கட்சிகளை அனுமதிக்கவில்லை. அதற்கான விடையிறுப்பில், காங்கிரஸூம் ஏனைய எதிர்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகளும் போலியான ஒரு போராட்டக் காட்சியை அரங்கேற்றுவதற்காக வெளிநடப்பு செய்தனர்.

புதனன்று வெளிப்படையாக அதன் உண்மை-ஸ்வரூபத்தைக் காட்டும் விதத்தில், ஒரு பாலஸ்தீன தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மோடி அரசாங்கம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கழகத்தில் உள்ள அதன் பிரதிநிதிகளுக்கு குறிப்புகளை அனுப்பியது. அந்த தீர்மானமோ, இருதரப்பிலிருக்கும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்திருந்ததோடு, ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பிராந்தியத்தில், அதுவும் குறிப்பாக காசாவில், மனித உரிமை மீறல்களின் மீது ஒரு சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்த வாக்கெடுப்பு ஒரு ஸ்தாபிக்கப்பட்ட வடிவத்திலேயே நடந்தேறியது. அமெரிக்காவிடம் இருந்து மட்டுமே எதிர்ப்பு ஓட்டு வந்திருந்தது என்ற போதினும், அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய கூட்டாளிகள் அந்த வாக்கெடுப்பைத் தவிர்த்திருந்தனர். ஆபிரிக்கா, மத்திய கிழக்கத்திய மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் வாக்குகளோடு அந்த தீர்மானம் நிறைவேறியது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அரசாங்கம் மாற்றவில்லை என்பதற்கு ஆதாரமாக, அந்த வாக்கெடுப்பை இந்திய வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான மந்திரி சுவராஜ் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்திருந்தாலோ அல்லது அதை தவிர்த்திருந்தாலோ சந்தேகத்திற்கு இடமின்றி அது மத்திய கிழக்கிலிருந்து விமர்சனத்தைத் தூண்டிவிட்டிருக்கும். அதுபோன்றவொரு நடவடிக்கையை உடனடியாக எடுக்க அது தயாராக இல்லை என்ற அதேவேளையில், பிஜேபி அரசாங்கம் இஸ்ரேல் உடனான நெருக்கமான உறவுகளின் அடித்தளத்திற்கு தெளிவாக தயாரிப்பு செய்து வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com