தமிழரின் அவலம் ஓடுற நதி.. அண்ண குடிரா! தம்பி குடிரா! பீமன்.
23 வருடங்களாக கழுத்தின் கீழ் இயங்காமல் கட்டிலில் கிடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்.
தமிழ் மக்களின் அவலம் ஓடும் நதியா! அவலத்தை நாம் அருந்தலாமா? தலையங்கத்தை பார்த்தவுடன் பீமனுக்கு விசர் என்று சொல்லியிருப்பீர்கள் அல்லது சொல்லத்தோன்றும். உங்கள் நியாயமான ஆதங்கத்தை புரிந்து கொள்ள என்னாலும் முடியும். ஆனாலும் தமிழ் மக்களின் அவலம் இன்றும் நதியாக ஓடுகின்றபோது அதில் தோய்ந்து , குடித்து , அதிலேயே கழித்து, கழுவி வாழும் ஈனப்பிறவிகளுக்கு இங்குள்ள காணொளி சமர்ப்பணம்.
முள்ளிவாய்க்காலிலே புலிகள் மண்டியிட்டதன் பின்னரான 5 வருடகாலங்களில் நாசாவில் புதிய காண்டுபிடிப்புக்கள் வெளிவந்ததோ இல்லையோ வடகிழக்கில் அவலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
இவர் 1972 ம் ஆண்டு பிறந்து 1988 இல் 16 வயதிலே புலிகள் அமைப்பில் இணைந்து 1991 ம் ஆண்டு பலாலியில் காயமடைந்து கழுத்துக்கு கீழ் இயங்காத நிலையில் கட்டிலில் கிடத்தப்பட்டார். அவயங்கள் அத்தனையும் இயங்காத நிலையிலும் புலிப்பாசிசத்திற்கு முள்ளிவாய்க்கால் வரை முண்டு கொடுத்திருக்கின்றார் அல்லது புலிகள் புளிந்து குடித்திருக்கின்றனர். புலிகளின் வைத்தியசாலை ஒன்றில் நிர்வாக வேலைகளில் உதவியாளாக இருந்திருக்கின்றார். மேலும் இரு சகோதரர்கள் புலிகளமைப்பிலிருந்து இறந்திருக்கின்றார்கள். சகோதரி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகி சில வாரங்களே.
மே 17 2009 ன் பின்னர் புலிகளால் நடுத்தெருவில் விடப்பட்ட இவரை கொட்டும் மழையிலும் , கொழுத்தும் வெயிலிலும் , குத்தும் பூச்சி பூண்டுகளிடமிருந்தும் இக்குடிசை காக்கின்றது.
ஆனால் புலம்பெயர் தேசத்திலோ கொடைவள்ளல்களின் புழுகோசையால் செவிப்பறைகள் வெடிக்கும் தருணத்தில் உள்ளது. எங்கு கேட்டாலும் தாயகத்து உறவுகளுக்கு உதவுவதாக புழுகு. அனேகமான ஆலயங்கள் , தமிழர் சங்கங்கள் , முன்னாள் போராட்ட அமைப்புக்கள் , கலை நிகழ்சிக்காரர் , களியாட்ட விழாக்காரர் , வர்த்தகர்கள் என ஆயிரக்கணக்கானோர் நானாவித வடிவில் மக்களிடம் வசூலித்துக்கொண்டே இருக்கின்றனர். இவர்களின் வசூலிப்பு வெளிப்படையான பகல்கொள்ளை என்பதை எவராவது உணர்ந்து „கணக்கு-வழக்கு' என்று வாயை திறந்தால் „ மிகுதிப்பணத்தில் தாயகத்தில் உறவுகளுக்கு உதவுகின்றோம்' என கேட்டவனின் வாய்க்கு பூட்டிடுவர். இவர்களின் வசூலிப்பின் 5 விழுக்காடேனும் குறித்த மக்களை அடைந்திருந்தால் அவலங்கள் முற்றாக நீங்கியிருக்கும்.
இங்கு மிக இழிவான விடயம் யாதெனில் மக்களின் பல்லாயிரக்கோடிக்கணக்கான சொத்துக்களும் பணமும் புலிகளின் புலம்பெயர் புலித்தலைவர்களிடமும் பினாமிகளிடமும் முடங்கியுள்ளது. இப்பணத்தினை பதுக்கிவைத்துள்ளோர் முன்னாள் புலிகளுக்கு உதவுவதாகவே தெரிவிக்கின்றனர். அவ்வாறாயின் இங்கு அவயங்களனைத்தையும் இழந்து தவிக்கும் நபரை தவிர உதவிக்கு தகுதியுடைய புலிகள் யார்? புலிகளின் பெரும்பகுதியினர் இவ்வாறான துயர்களைச்சுமக்க, பிரித்தானியாவிலே புலிகளின் கோடிக்கணக்கான பணத்திற்கு அதிபதியாக உள்ள ரிஆர்ஓ ரெஜி இடைத்தங்கல் முகாமொன்றிலிருந்த மனைவியை மாற்றியக்க இரட்டை முகவர்களுடாக கோடிக்கணக்கில் பணம்கொடுத்து வெளியே எடுத்து தென்னாபிரிக்காவுக்கு அழைப்பித்து அங்கு ஆடம்பர மாளிகையில் தங்கவைத்துள்ளார். மேலும் புலம்பெயர் புலிகளின் உறவுக்காரர்கள் வெளியே எடுக்கப்பட்டு இந்தியாவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் பராமரிக்கப்படுகின்றனர்.
அத்துடன் சுவிட்சர்லாந்தில் கொத்துரொட்டிக்கு ஏகபிரதிநிதியான புலிகளின் தலைவர் அப்துல்லா தனது கொத்துரொட்டி வியாபாரத்தை வன்னியில் துயருறும் புலிகளின் பெயராலேயே முன்னெடுக்கின்றார். இவர் இங்கு கொத்துரொட்டி கடையில் வேலைசெய்யும் பலருக்கு ஊதியம் வழங்குவதும் இல்லை. காரணம் அப்பணத்தை வன்னியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றாராம். அவ்வாறு இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறார்களாயின் இவ்வீடியோவில் உள்ளவர் கடந்த 5 வருடங்களாக இவர்களது கண்ணில் படாததன் மர்மம்தான் என்ன?
தமிழ் மக்களின் அவலங்களால் புலிகள், மாற்று இயக்கங்கள், அரசியல்வாதிகள் அவர்களின் பினாமிகள் என்று ஒரு குழாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மக்களின் அவலங்கள் கண்டு துவழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அவர்களுக்கு உதவுவதற்கென மேற்படி பெருச்சாளிகளிடம் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அவலங்களின் பெயரால் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் பெருச்சாளிகள் இத்துயரங்களை முடிவுக்கு கொண்டுவருவார்களா என்பதை மக்கள் சில நிமிடங்கள் சுயமாகச் சிந்திக்கவேண்டும்.
மக்களுக்கு உதவ விரும்புகின்ற மக்கள் அவ்வுதவிகளை சுயமாகச் செய்யவேண்டிய கட்டாயத்தையும் தேவையையும் உணரவேண்டும். உதவிகளை செய்கின்றவர்கள் தமது சொந்தங்கள் , நண்பர்கள் என இணைந்து தரகர்கள் இன்றிச்செய்யவேண்டும். அவ்வாறு செய்கின்றபோது நீங்கள் செலுத்துகின்ற முழுவதும் வேண்டப்பட்டவரின் கரத்தினை முழுமையாக அடைகின்றது.
மேலும் இவ்விடயங்ளில் ஊடகங்களும் சிலவேளைகளில் உங்களை தவறாக வழிநடாத்தலாம், அன்றில் ஊடகங்களுக்கு தவறான தரவுகள் வழங்கப்பட்டிருக்கலாம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் உதவி பெறவிரும்புகின்றவர்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொள்ளவது அவசியமானதாகும்.
உதவிகள் என்பது குறித்த வீடியோவில் உள்ள நபர்போன்று முழுமையாக செயலிழந்தவர்கள் அல்லாதவர்களாயின் அவர்களுக்;கு சுயமாக உழைத்து வாழ்வதற்கான முழுமையான உதவியினை செய்வதுடன் அவர்கள் முழு உழைப்பினை பெறும்வரை அவர்களை பராமரித்து கைவிட வேண்டும். மாறாக அவர்களுக்;கு மாதாந்தம் சலுகைப்பணம் கொடுத்து அவர்களை சோம்பேறிகளாக்கி வலுவற்ற மனிதர்களாக்குவது தவிர்க்கப்படவேண்டும்.
மேற்படி வீடியோவிலுள்ள யூட்ஜெயசீலனுக்கு உதவ விரும்புவோர் ஒரு குழுவாக இணைந்து அவர் வாழ்வதற்கு ஏதுவான சிறயதோர் வீட்டினை அமைத்து வழங்குவதுடன் தொடர்சியாக அவரது பாராமரிப்புக்கு பொருத்தமானதோர் செயற்திட்டத்தை வகுத்துக்கொள்வது ஏற்புடையதாகும். ஓர் அங்கவீனன் மீது முன்னாள் புலி என்ற பாரபட்சம் மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்பதை கருத்திற்கொள்ளவேண்டும்.
உதவிபுரிய விரும்புவோர் குறித்த நபரை கீழுள்ள இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரமறிந்து உதவி செய்யலாம்
தொலைபேசி இலக்கம்; 0770059430
வங்கி கணக்கு இலக்கம்; அரியதாஸ் அகலியா
75209453
இலங்கை வங்கி
குழுக்களாக இணைந்து மக்கள் சுயாதீனமாக இயங்குகின்றபோது பெருச்சாளிடமிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும். அரசியல்வாதிகள் அவலங்களை வைத்து வாக்கு பிச்சை கேட்பதை விடுத்து மக்களுக்கு தாம் என்ன செய்திருக்கின்றோம் என்பதை முன்நிறுத்தி வாக்கு கேட்க நிர்ப்பந்திக்கப்படுவர்.
0 comments :
Post a Comment