Thursday, July 31, 2014

மகிந்த வெல்வது உறுதி! வாக்களிக்கா விட்டால் நட்டமடைவது முஸ்லிம்கள் தான். மஹிந்த அல்ல!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அளித்த வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அளிப்பார்களாக இருந்தால் தனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்வேன் என அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவது உறுதி. அதில் நாமும் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும். தேர்தலில் எதிர்த்து வாக்களித்து விட்டு அவர் வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் அவரிடம் சென்று அமைச்சுப் பொறுப்பை பெற்று என்ன முகத்துடன் எமது பகுதிக்கு அபிவிருத்திக்கான நிதியை கேட்பது. அதனால் தான் கூறுகின்றேன். கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை விடவும் குறைவாக வாக்குகள் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களால் அளிக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வேன்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம் தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தால் மாத்திரம் தான் தோற்கடிக்க முடியும் என்றால் நாம் ஒற்றுமைப்பட்டு அவரை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும். மாறாக மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பதால் அவரை தோற்கடிக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காமல் அவரை தோற்கடித்து வெல்ல வேண்டும் அல்லது அவர் வெல்வார் என்றால் அவருக்கு வாக்களித்து வெல்ல வேண்டும். எந்த வெற்றி பொருத்தமாக இருக்குமோ அதன்படி நடப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கூடுதலான வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக அவர் வருவது உறுதி. அவ்வாறு அவர் ஜனாதிபதியாக வரும் போது அந்த வெற்றியில் பங்காளர்களாக இல்லாமல் நாம் இருப்போமானால் நட்டமடையப் போவது வாக்களிக்காத முஸ்லிம்கள் தான். மஹிந்த ராஜபக்ஷ அல்ல என்றார்.

ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொள்ளும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com