அளுத்கம சம்பவம்: யார்தான் உண்மையைச் சொன்னார்கள்? -தமிழில்: கலைமகன் பைரூஸ்
தர்காநகரில் முஸ்லிம் - சிங்கள கலவரம் நிகழ்ந்த முறைபற்றி தற்போது அனைவரும் நன்கறிவர். அது தொடர்பிலான காணொளிகளை இணையத் தின் மூலம் கண்டுகொள்ளலாம். பௌத்த மாநாடு முடிவடைந்து அனைவரும் பாதையில் அமைதி யாக கலைந்துசெல்லும் வேளை, முஸ்லிம் பள்ளிவாயலில் கூடியிருந்தவர்கள் மேலிருந்து கற்களை எறிந்த முறையை காணொளிகளில் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. கற்களை எறிந்த பின்னர்தான் அவர்களைப் பொலிஸார் தாக்குகின்றனர். பொலிஸார் வன்செயலில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதனால், பத்திராஜகொடவில் உள்ள வீடுகளைத் தீப்ப்பற்ற வைத்து அதற்குப் பதிலடி கொடுக்கின்றனர் முஸ்லிம்கள். பொலிஸாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை, பத்திராஜகொட கிராமம் தீப்பற்றி புகை கிளம்பிக் கொண்டிருப்பதை காணொளிகளில் காணக்கூடியதாகவுள்ளது. பௌத்த துறவிகளும், பௌத்த மாநாட்டுக்கு வந்திருந்தோரும் அமைதியாக கலைந்துசெல்லும் நிலையில் அவர்களுக்கு கற்களால் எறிந்ததற்குப் பிறகும், பத்திராஜகொட கிராமம் தீப்பற்றிய பின்னருமே முஸ்லிம்களின் கடைகள் தகர்க்கப்படுகின்றன. இதுபற்றி மிகத தெளிவாகச் சொல்வதாயின், பொசன் பௌர்ணமி தினத்தன்று இளம் பௌத்த துறவி தாக்குதலுக்குள்ளான நிகழ்வோடு இன்னும் இரண்டு நிகழ்வுகளுக்குப் பின்னரே முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டன. இது இவ்வாறிருக்க வேறு விதமாகவே உலகம் இதனைக் காண்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் உள்ளிட்ட தலைவர்கள் இது தொடர்பில், “கலவரமொன்று நடப்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தபோதும் அரசாங்கம் பொதுபல சேனாவினரின் குறித்த மாநாட்டைத் தடைசெய்யவில்லை” என குற்றம் சுமத்துகின்றனர். அந்த அறிக்கை தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் வெட்கப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் டென்மார்க் பத்திரிகையொன்றில் கேலிச் சித்திரம் ஒன்று வரையப்பட்டிருந்தது தொடர்பில் இலங்கையில் ஹர்த்தால் செய்வதற்கு ஹக்கீமுக்கு முடியும். தற்போது பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள சல்மான் ருஷ்டி எழுதிய “சாத்தானிய வேதங்கள்” நூலினால் மார்க்கத்திற்கு இழுக்குண்டாகின்றது எனக் கூறி கொழும்பில் கிளர்ந்தெழ ஹக்கீமுக்கு முடியும். அதேபோல, தஸ்லிமா நஸ் ரீன் பங்களாதேசத்தில் “லஜ்ஜா” எனும் புத்தகத்தை எழுதி இஸ்லாத்திற்கு இழுக்குச் சேர்த்துள்ளார் எனக் கூறி கொழும்பில் எதிர்ப்பு ஊர்வலம் செல்ல அவரால் இயலும். ஆயினும், பொசன் பௌர்ணமி தினத்தன்று ஒரு இளம் பௌத்த துறவி தாக்கப்பட்டது தொடர்பில் அளுத்கமவில் பௌத்தர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டவியலாது.
ஆவேசப்பட்டிருக்கின்ற பௌத்தர்களை சமாதானப்படுத்தலாம் எனும் நன்னோக்கிலேயே பொலிஸார் அந்தக் கூட்டத்தை நடாத்த இடமளித்தனர். அந்தக் கூட்டத்தில் எந்தவிதப் பிரச்சினைகளும் எழாது என்றும், தமது தலைமைத்துவத்தில் நம்பிக்கை வைக்குமாறும் கூறினர். நிகழ்வின்போது எந்தவொரு முஸ்லிமையும் தாக்குவதற்கு அநுமதியளிக்கப்படவில்லை. ஞானசார தேரர்கூட, “இதற்குப் பின்னர் எந்தவொரு பௌத்த துறவியை மட்டுமன்றி எந்தவொரு சிங்களவனையாவது தாக்கினால் நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்றே கூறினார். பொலிஸார் எதிர்பார்த்த வண்ணம் ஆவேசப்பட்டிருந்தவர்களை சாந்தப்படுத்தும் வண்ணம் பௌத்த மாநாடு இருந்தது. நிகழ்வின் இறுதியில் எந்தவொரு முஸ்லிமும் தாக்கப்படவில்லை.. எந்தவொரு உடைமைக்கும் சேதம் ஏற்படுத்தப்படவில்லை. பிரச்சினை எவ்வாறு தோற்றம் பெறுகின்றது எனில், கலைந்துசென்றவர்களுக்கு முஸ்லிம்கள் கற்களை எறிந்ததனாலேயே… பிரச்சினை மேலெழக் காரணம் முஸ்லிம்களால் தாக்கப்பட்ட இளம் பௌத்த துறவி இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீபோல் பரவியமையே…
கலவரம் நடைபெற்று அடுத்த நாள் அதிகாலையிலேயே நான் அப்பிரதேசத்திற்குச் சென்றேன். களுத்துறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டேன். விடயங்கள் பற்றித் தெரிந்துகொண்டு, அன்று பிற்பகல் 3 மணிக்கு ஜாத்திக ஹெல உறுமய ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தேன். அவ்வூடகவியலாளர் சந்திப்பில் உள்ளதை உள்ளவாறே சொன்னேன். என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அந்தச் சந்திப்பு ஊடகத் தணிக்கை செய்யப்பட்டது. அதனால் இலங்கை மட்டுமன்றி சர்வதேசமே உண்மையைத் தெரிந்துகொள்ள இயலாமற் போயிற்று. அதேபோல உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமாக அரசியலில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் அடிப்படைவாதத் தலைவர்கள் முழு உலகின் பார்வையையும் திசைதிருப்பினார்கள்.
இனவாதப் பூசல் மேலெழும் எனக் கருதி, உண்மையை உள்ளவாறு சொல்லமல் இருப்பதற்காக அரசாங்கம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை தணிக்கை செய்வதற்கு ஆலோசனை வழங்கியதாக ஊடகங்கள் தெரிவித்தன. உண்மையிலேயே அந்தத் தீர்மானது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். வெசாக் பௌர்ணமி தினத்தன்று தமிழீழப் பயங்கரவாதிகளால் ஸ்ரீமாபோதி தாக்குதலுக்குள்ளானபோது கூட சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கவில்லை. அதேபோல அரந்தலாவில் பௌத்த பிக்குமார் 31 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டபோதுகூட பௌத்தர்கள் தமிழர்களைத் தாக்கவில்லை. தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற எந்தவொரு பகுதியிலிருந்தும் ஒருபோதும் ஒரு சிங்கள உறுப்பினர் தெரிவாகவில்லை. என்றாலும் பாக்கிர் மாக்கார், ஏ.ஸீ.எஸ். ஹமீத், எம்.எச். மொஹமட், மொஹமட் அபூஸாலி, ஏ.எச்.எம். பௌஸி போன்றோரை சிங்களவர்களின் வாக்குகளே தெரிவுசெய்தன. அவ்வாறான பின்னணி இருக்கும்போது உண்மையை உள்ளவாறு சொன்னால் பௌத்தர்கள் சீற்றமடைவார்கள் என சிந்திப்பதன் உள்நோக்கம்தான் என்ன?
அரசாங்கம் உண்மையை மறைத்துக்கொள்ளும்போதுதான் மக்கள் கோபப்படுகின்றார்கள். அரசாங்கம் உண்மையை மறைத்துக் கொள்ளும்போது பொய் சிறகு விரித்து விண்ணில் பறக்கும். அந்த வாய்ப்பேச்சின்படி மூன்று பௌத்த துறவிகள் பள்ளியினுள்ளே இழுத்துச் செல்லப்பட்டு, அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல மூன்று பள்ளிகள் தீக்கிரையாகியுள்ளன. 11 முஸ்லிம் இளைஞர்கள் பலவாறு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 18. இவ்வாறான வாய்ப்பேச்சுகள் பரவுவதற்குக் காரணம் அரசாங்கம் உண்மையை மூடிமறைத்ததனாலேயே. அரசாங்கம் உண்மையைச் சொல்லாமல் இருந்தது மட்டுமன்றி, ஊடகத் தணிக்கை செய்து உண்மையை உலகம் அறிந்து கொள்ளமுடியாமல் செய்து விட்டது.
இந்த ஊடகத் தணிக்கை மூலம் நன்மைபெற்றவர்கள் தமிழ்ப் பிரிவினைவாதிகளும் அடிப்படைவாத முஸ்லிம்களுமே. தமிழ் - சிங்களப் பிரச்சினையின் போது தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு அரசாங்கத்தின் சொற்ப அநுதாபம் கிடைக்கும்போது, பெரும்பாலானோர் ஆட்சியாளர்களின் கதையை நிராகரித்தனர்.
விசேடமாக தமிழ் மக்களுக்கு சிங்களவர்களால் ஏற்படும் இன்னல்கள் பற்றி சர்வதேசம் கருத்திற் கொள்ளாதிருந்த்தற்குக் காரணம் தமிழர்களில் பெரும்பான்மையானோர் சிங்களவர்களுடனேயே வாழ்ந்துவந்தமையாகும். அதனால் சிங்களவர்களுக்கு தமிழர்களுடனும், முஸ்லிம்களுடனும் வாழ முடியாது எனச் சொல்வதன் மூலம் தமிழ்ப் போலிகளுக்கும் பெறுமதி வழங்கப்படுகின்றது. தமிழ்ப் பிரிவினைவாதிகள் 30 ஆண்டுகள் கட்டியெழுப்பிய சிறந்த சர்வதேச ஊடக வலையமைப்பொன்று உள்ளது. அவர்கள் அந்த வலையமைப்பை தர்காநகர் மூலம் இலங்கையின் புகழுக்கு இழுக்கு உண்டாக்கப் பயன்படுத்தினர். தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கும், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் சளைக்காத ஊடக வலையமைப்பொன்று உள்ளது. அதன் மூலம் அவர்கள் தங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய முறையில் கதையை மாற்றியமைத்துச் சொன்னார்கள். அதற்கேற்ப, இளம் பௌத்த துறவியொருவர் முஸ்லிம்களால் தாக்கப்பட்டதனால் அதற்கு மாற்றீடாக பௌத்தர்கள் முஸ்லிம்களைத் தாக்கி நால்வர் இறந்ததாளகக் குறிப்பிட்டனர். இவ்வாறான கதை சோடிக்கப்பட்டிருந்தபோதும் உண்மையில் இரு முஸ்லிம்கள் மாத்திரமே கொலை செய்யப்பட்டனர்.
ஊடக தணிக்கையின் அடிப்படையில் பௌத்தத் தலைவர்களும் சர்வதேச ஊடகங்கள் சொன்னவற்றையே நம்பினர். அதனால் அரசாங்க, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், சில பௌத்த மதத் தலைவர்களும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் வெட்டிய பாதை வழியே சென்று பொதுபல சேனாவுக்கும், பௌத்தர்களுக்கும் குற்றம் சொல்லலாயினர்.
இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், அரசாங்கத்திற்கு அபகீர்த்தி சேர்த்தவர்கள் வேறுயாருமல்லர். ஊடக தணிக்கையைச் செய்த அரசாங்கத்திலுள்ள அதிகாரம்மிக்கவர்களே. ஒரு புறம் அவர்கள் இலங்கையின் புகழுக்கு இழுக்குச் சேர்த்தனர். மறுபுறம் 1983 இற்குப் பிறகு புலிப் பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலைகள் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் செய்தபோது அப்பாவித் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்யாத சிங்களவர்களைச் சந்தேகிப்பதால் அவர்களை அவமானப்படுத்தியிருக்கின்றனர். அதனால் இந்தத் தீர்மானம் எடுத்த அதிகாரம்மிக்கவர்களை இனங்காண்பது நன்மை பயக்கும்.
தர்காநகரில் ஏற்பட்ட கலவரத்திற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் திட்டமிட்டு சிங்களவர்களைத் தாக்கியமை என்பது தெளிவாகின்றது. ஆயினும், பௌத்த மாநாடு நடைபெறும் அத்தினம் 2000 இற்கும் மேற்பட்ட மக்களை ஒன்றுதிரட்டியவர் யார்? இவர்கள் செயற்படுவதற்கு பள்ளிவாயலை தாரை வார்த்துக் கொடுத்தவர் யார்? இவர்களில் யார்தான் உண்மையாகத் தாக்கினார்கள்? போன்ற வினாக்களுக்கு விடை தேட வேண்டும். அதேபோல இந்தக் கலவரத்தை திரிபுபடுத்தி பொய்ப் புள்ளிவிபரங்கள் வழங்கி, தேசத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்நடவடிக்கை ஆறிச் செல்கின்ற புண்ணை மீண்டும் காயப்படுத்த முனைவதாக சிலர் தர்க்கிக்கலாம். ஆயினும் புண்ணொன்று இருக்கும்போது நாங்கள் செய்ய வேண்டியது ஏதேனும் ஒன்றினால் கட்டி அதனை மறைத்துக் கொண்டு இப்போது புண் வெளியில் காண்பதில்லையே என்று சந்தோசிப்பதல்ல. அவ்வாறு செய்தால் அந்தப் புண்ணிலிருந்து சீழ் ஓடி அது பெருத்துவிடும். இல்லாவிட்டால் வேறொரு இடத்தில் அது மீண்டும் தோன்றும். புண் ஆற வேண்டுமென்றால் எவ்வளவுதான் வலி ஏற்பட்டாலும், அதனைச் சுத்தம் செய்து தொற்றுக் கிருமிகளை முழுமையாக அழித்து மருந்து கட்ட வேண்டும். தர்காநகரில் ஏற்பட்ட கலவரம் மீண்டும் தொடராதிருக்க வேண்டுமென்றால் எவ்வளவுதான் வலி ஏற்பட்டாலும் தொற்றுநோய்க் கிருமிகளை அழித்தொழிக்க வேண்டும்.
நன்றி - லங்காதீப (ලංකාදීප)
0 comments :
Post a Comment