கறுப்பு “அபாயா”வுக்கு ஆப்பு வைக்கிறது முஸ்லிம் கவுன்ஸில்!
இலங்கையிலுள்ள முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் கறுப்பு அபாயாவுக்குப் பதிலாக வேறு நிறங்களிலனா அபாயாக்களை அறிமுகஞ் செய்வதற்கான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தீர்மானித்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற நீண்ட உடையை அவர்கள் அபாயா என்றே அழைக்கின்றனர். இலங்கையில் பெரும்பான்மை முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயாவையே அணிகின்றனர்.
இச்செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான காரணம் பற்றிக் அதன் உப தலைவர் ஹில்மி அஹமட் குறிப்பிடும்போது, கறுப்பு நிறமல்லாத ஏனைய அபாயாக்களை இலங்கையில் பெற்றுக் கொள்வது சிரமம் எனவும், தற்போது சந்தையிலுள்ள ஏனைய நிறங்களுடன் கூடிய அபாயாக்களின் விலை அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறைந்த விலையில் வெவ்வேறு நிறங்களுடன் கூடிய அபாயாக்களை சந்தைப்படுத்துவதற்கு ஆவன செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் கவுன்ஸிலின் இந்தக் கூற்று தொடர்பில், முஸ்லிம் பெண்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த முஸ்லிம் பெண்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அன்பேரியா ஹனீபா கறுப்பு அபாயாவை விட நிற அபாயாக்கள் அழகு மிக்கவை எனக் குறிப்பிட்டார்.
எழுத்தாளரான அமீனா ஹுஸைன் கருத்துத் தெரிவிக்கும்போது, இலங்கையில் அபாயாக்கு முற்பட்ட காலத்தில் அனைத்து முஸ்லிம் பெண்களும் சாரியே அணிந்தனர் எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, கறுப்பு அபாயாதான் அணிய வேண்டும் என இஸ்லாமிய சட்டம் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களுக்கு இலவசமாக பல்வேறு நிறங்களுடன் கூடிய அபாயாக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு தான் ஏக காலத்தில் செயற்படவுள்ளதாக முஸ்லிம் கவுன்ஸில் தெரிவிக்கிறது.
(கேஎப்)
0 comments :
Post a Comment