Thursday, July 10, 2014

பௌத்தர்களை அவமானப்படுத்தும் செயலின் முன்னோடியாக ரவூப் ஹக்கீம்! குற்றம் சுமத்தியுள்ளது ஹெல உறுமய

அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், சிங்கள பௌத்த மக்களை சர்வதேச ரீதியில் அவமானத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான நபர் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபிததேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை கூறியுள்ளார்.

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மோதல்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில், நாட்டின் பெருபான்மை பௌத்த மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும், பௌத்த அமைப்புகளுக்கும் எதிராக பாரிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு உண்மை மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் பௌத்த மக்கள் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை அபகீர்த்திக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கும் பிரசார யுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நீதியமைச்சர் இதில் முதன்மையாக இருந்து செயற்பட்டுள்ளார். ஏனைய முஸ்லிம் தலைவர்கள் பலர் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக பொய்யான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கி, பௌத்த பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் பற்றி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இதன்மூலம் இலங்கையின் பௌத்த மக்கள் அவமானத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவங்களின் உண்மை நாட்டுக்கும், உலகத்திற்கு மறைக்கப்பட காரணம் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் உத்தியோகபூர்வமாற்ற தணிக்கையாகும்.

அளுத்கம சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தும் விதம் பக்கசார்பாக இருப்பது எமக்கு ஆழ்ந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com