Saturday, July 26, 2014

காரைநகர் சிறுமிக்கு நடந்தது என்ன? விளக்குகின்றார் பிரதமர்! சிறு சம்பவங்களை சர்வதேச மயப்படுத்த த.தே.கூ முயலக்கூடாது!

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருசில சம்பவங்களை வைத்துக்கொண்டு அதனை சர்வதேச மயப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு முயற்சிப்பதாக பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 11 வயது சிறுமியொரு வர் கடந்த 15 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

காரைநகர் பகுதியில் கடந்த 15 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமியொருவரை புலி சீருடையணிந்த சந்தேக நபர் ஒருவர் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார். இதனை காவலில் நின்ற கடற்படை யினர் கண்டு துரத்திச் சென்றதாகவும் இது தொடர்பான பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருப் பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

குறித்த சிறுமி வீட்டுக்கு நேரத்துடன் வந்தமை தொடர்பில் சிறுமியின் தாயார் பாடசாலை அதிபரிடம் வினவியுள்ளார். அன்றைய தினம் சிறுமி பாடசாலை செல்லவில்லையென்பது தெரிய வந்தது. இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்.

வைத்திய பரிசோதனைக்கு அமைய குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரிய வந்தது. இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் கடற்படை வீரர்கள் ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் பல இடம் பெறுகின்றன. இந்தியாவில் அதிகமாக நடைபெறுகின்றன. சில சம்பவங்களை வைத்துக்கொண்டு அவற்றை சர்வதேச மயப்படுத்த கூட்டமைப்பு முயற்சிப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை காரைநகர் ஊரி பகுதியில் சிறுமிகள் இருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு விரைவில் நீதி வழங்குமாறு கோரி, யாழ்ப்பா ணத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்ற வளாகத்தில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் வாய்களில் கறுப்புத் துணியினை கட்டியவாறு, இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment