பார்வையற்ற மாணவர்களை அடித்து துவைக்கும் கொடூர ஆசிரியர்: பதற வைக்கும் வீடியோ!
பார்வையற்ற மாணவர்கள் 3 பேரை ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக பிரம்பால் அடிக்கும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி ஒன்று ஹைதராபாத்தில்; வெளியாகி உள்ளது. ஏறக்குறைய 3 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், பார்வையற்ற 3 மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கையில் வைத்துள்ள பிரம்பால் கண் மூடித்தனமாக அடித்து துவைக்கிறார். வலி பொறுக்க முடியாமல் அந்த மாணவர்கள் தங்களை விட்டுவிடுமாறு ஆசிரியரிடம் கெஞ்சி கதறுகின்றனர்.
ஆனால் துளியும் இரக்கம் காட்டாத அந்த ஆசிரியர், தொடர்ந்து அடித்தபடியே அந்த மாணவர்களில் ஒருவனது தலையை பிடித்து தரையிலும், சுவற்றிலும் வேகமாக மோதுகிறார். அப்போது அருகில் இருக்கும் இன்னொரு நபரும் , மாணவர்களை அடிக்க அந்த ஆசிரியருக்கு உதவுகிறார். வலி தாங்க முடியாத அந்த மாணவன் கதறுகிறான். அடிவாங்கும் சிறுவர்கள் மூவருமே 10 வயதுக்கு உட்பட்டவர்களே.
இதில் இன்னொரு குரூரம் என்னவென்றால் கண் பார்வையற்ற அந்த மூன்று மாணவர்களையும் அடித்து துவைக்கும் அந்த ஆசிரியரும் ஒரு கண்பார்வையற்றவர்தான். என்ன காரணத்திற்காக இந்த மாணவர்களை அந்த ஆசிரியர் அடித்தார் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. ஹைதராபாத்திலிருந்து 650 கி.மீ. தொலைவில் உள்ள காக்கிநாடாவில், பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் 'கிரீன்ஃபீல்டு ரெசிடன்ஸியல் ஸ்கூல்' என்ற பள்ளியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை யார் எடுத்தார் என்பது குறித்த தகவல் தெரியாத நிலையில், என்டிடிவி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் இந்த வீடியோ வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவர்களை அடித்த ஆசிரியர் மற்றும் அந்த பள்ளியின் முதல்வர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வருகிறது. யாருடைய நிதி உதவியால் இந்த பள்ளி நடத்தப்படுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை என்றபோதிலும், அறக்கட்டளை ஒன்றால் நடத்தப்படலாம் என்று அப்பள்ளிக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 62 மாணவர்கள் வரை இங்கு தங்கியிருந்து படிப்பதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அங்கிருந்து மாற்றப்படுவார்களா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
0 comments :
Post a Comment