Monday, July 21, 2014

இலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவிற்கு தகுந்த பதிலடி கொடுத்த தெற்காசிய நாடுகள்!

தெற்காசிய நாடுகள் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு விசா வழங்க மறுத்தமை எமக்கு கிடைத்த பெரிய வெற்றி

இலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் வருகைக்கு தெற்காசிய நாடுகள் வீஸா வழங்க மறுத்துள்ளன. இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்குரிய தருணம் இதுவல்லவெனவும் விசார ணைகளுக்கான நிபுணர் குழு இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவி பிள்ளை தலைமையிலான நிபுணர்கள் குழு, விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது என்பதனை புரிந்து கொண்டவர்களாக, இலங்கையிடம் வீஸா கோருவதனை கைவிட்ட நிலையில் அயல் நாடுகளில் வீஸா கோரும் முயற்சியில் இறங்கினர்.

சர்வதேச விசாரணையை முன்னெடுக்க குறித்த நாடு மறுக்கும் பட்சத்தில் அதன் அயல் நாடுகளில் தங்கியிருந்து விசாரணைகளை தொடர்வதனை ஐக்கிய நாடுகள் சபை வழக்கமாக கொண்டிருந்தது. அந்த வகையில் இலங்கைக்கு மிகவும் அண்மித்த நாடான இந்தியாவிலிருந்து விசாரணைகளை தொடுப்பதற்கு நவி பிள்ளையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முயற்சித்த போதும் மோடி அரசாங்கத்தின் அதிருப்தியினால் அவர்களது அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 வது அமர்வு கடந்த மார்ச் 26ம் திகதி நடைபெற்ற போது, மேலைத்தேய நாடுகளால் முன்வைக்கப்பட்ட சர்வதேச விசாரணையினை நிறைவேற்றுவது குறித்த பிரேரணை தொடர்பில் இந்தியா வாக்களிக்காது விலகியிருந்த போதிலும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தீலீப் சிங், இந்தியாவின் அப்போதைய அரசாங்கம் சார்பில் சர்வதேச விசாரணைக்கான எதிர்ப்பினையும் அதிருப்தியினையும் தெரிவித்திருந்தார்.

அதே நிலைப்பாட்டினையே மோடி அரசாங்கமும் கொண்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக் கப்பட்டு வரும் இத்தருணத்தில் சர்வதேச விசாரணைகள் பொருத்தமற்றது என்பதனை வலியுறுத்தி நிபுணர் குழுவிற்கான வீஸாவினை வழங்க மறுத்துள்ளது.

இதேபோன்று பாக்கிஸ்தானும் இலங்கை மீதான சர்வதேச விசாரணையினை வன்மையாக கண்டித்துள்ளதுடன் நிபுணர் குழுவிற்கு வீஸா வழங்க மறுத்துள்ளது. மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகளும், இலங்கை மீது சர்வதேச விசாரணையினை தொடுப்பதற்கு இது உரிய தருணமல்ல என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளன. எனவே அருகிலுள்ள நாடொன்றிலிருந்து விசாரணையை மேற்கொள்ள முடியாது சென்றமை எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

எனவே இவர்கள் ஒஸ்லோ, வண்டன், ஜெனீவா போன்ற நகரங்களிலிருந்தே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் இறுதி வரையில் தமது சாட்சியாளர்களை வெளிப்படுத்தப் போவதில்லை. அத்துடன் இணையதளங் களுக்கூடாக பெற்றுக் கொள்ளப்படும் சாட்சியங்கள் நம்பகத் தன்மையற்றவை. ஆகையினால் இந்த விசாரணை வெற்றியளிப்பதற்கான சாத்தியங்கள் இல்லையெனவும் சட்டத்தரணி பிரதீப மஹாநாம தெரிவித்தார்.

மேலும் நவி பிள்ளை, ஆரம்பத்தில் இலங்கையில் உள்நாட்டு விசாரணைகளின் அவசியத்தினை வலியுறுத்தியிருந்தார். அதற்கமையவே நாம் காணாமற் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் ஆகியவற்றின் அறிக்கைகளை 2015 மார்ச்சில் சமர்பிப்பதன் மூலம் இவ்வருடம் எமக்கு எதிர்த்து மற்றும் வாக்களிக்க மறுத்த நாடுகளின் வாக்குகளையும் எமக்கு சார்பாக திரட்டிக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். இதன் மூலம் சர்வதேச விசாரணை அறிக்கை யினால் எழக்கூடிய சவால்களை நாம் முறியடிப்பது நிச்சயமெனவும் அவர் கூறினார்.

உள்நாட்டு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட் டுள்ளமையானது அறிக்கையின் பெறுமதி மற்றும் நம்பகத்தன்மையை இரட்டிப்பாக்கு மெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் வருகைக்கு தெற்காசிய நாடுகள் வீஸா வழங்க மறுத்துள்ளமை எமக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகுமென மனித உரிமைகள் சட்டத்தரணி டொக்டர் பிரத்தீப மஹாநாம தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com