Monday, July 14, 2014

ஜே.வி.பி புதிய கூட்டணி உருவாக்க முயற்சி. -யொஹான் பெரேரா

நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் அமையவுள்ள ஜே.வி.பி தலைமையிலான கூட்டமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐ.தே.க மற்றும் வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஜே.வி.பி தலைமையிலான அரசியல் கூட்டை உருவாக்குவதற்காக ஆரம்பக்கட்ட பேச்சுகள் நடைபெறுவதாக ஊடகவியளாலர் சந்திப்பின் போது ஹேரத் தெரிவித்தார்.

இது சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க என்பவற்றுக்கு மாற்றாக அமையும் என அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐ.தே.க. ஆகிய இரண்டையுமே மாறி மாறி தெரிவு செய்யும் மக்களின், அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே இந்த கூட்டின் இறுதி நோக்கமாகும்.

இருப்பினும் இந்த கூட்டணியானது இம்முறை நடைபெறவிருக்கின்ற ஊவா மாகாணசபை தேர்தலை அல்லது ஜனாதிபதி தேர்தலை நோக்கமாக கொண்டதல்ல. இந்த கூட்டணியின் இறுதி நோக்கம். நாட்டில் அரசியல் முறைமையையும் கலாசாரத்தையும் மக்கள் விரும்பும் வகையில் மாற்றியமைப்பதாகும். இது தேர்தலில் வெல்வதற்கும் அப்பாற்பட்டது.

ஜே.வி.பி, ஊவா மாகாண தேர்தலில் மணிச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடும். பதுளை மாவட்ட தலைமை வேட்பாளராக முன்னாள் எம்.பியான சமந்த வித்தியரத்னவும், மொனராகலை மாவட்ட தலைமை வேட்பாளராக ஆர்.எம். ஜயவர்த்தையும் இருப்பர். முன்னாள் எம்.பியான ராமலிங்கம் சந்திரசேகர் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர், ரில்வின் சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்கந்த, எம்.பிக்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் கொண்ட குழு ஏனைய வேட்பாளர்கள் பற்றி தீர்மானிப்பர்.

இந்த தேர்தல் முடிவிலேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் காலம் நிர்ணயிக்கப்பட இருப்பதினால் ஜே.வி.பி, ஊவா மாகாண தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என ஹேரத் தெரிவித்தார்.

நன்றி தமிழ்மிரர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com