Thursday, July 31, 2014

இலங்கை போலந்துக்கு இடையில் விமான சேவைக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கை போலந்து நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளுக்கான இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தமொன்று அண்மையில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகளால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் விமான சேவையினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கலாநிதி ரவீந்திர ருபேரு தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று போலந்தின் தலைநகர் வார்சவ்விற்கு சென்றுள்ளனர். மேலும் போலந்திலுள்ள இலங்கை தூதரக அங்கத்தவர்கள், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தவர்கள், சிவில் விமான போக்குவரத்து சபையினர் மற்றும் சிறிலங்கன் விமான சேவை அங்கத்தவர்கள் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைகள் போலந்து நகரின் விமான போக்குவரத்து துணைத்தலைவர் இஸபெலா ஸிமஜடா வோஜ்ரிடசோவஸ்காவினால் தலைமை தாங்கப்பட்டது. மேலும் போலந்து பொது மக்கள் ஆணைய அங்கத்தவர்கள், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், விமான சேவையின் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான சிறந்த நட்புறவினை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இரு நாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் இரு குழுக்களும் புதியதொரு விமான சேவை ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டதுடன், இடம்பெற்று வரும் துரித அபிவிருத்திகள் , மற்றும் பொது நோக்கு அபிவிருத்தி சம்பந்தமாக மேலும் கலந்துரையாடினர்.

1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை போலந்துக்கிடையில் விமான சேவை சம்பந்தமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இவ் ஒப்பந்தம் குறிப்பிடக்கூடிய தொன்றாக அமையும்.சுற்றுலா வியாபாரம் சம்பந்தமான முன்னேற்றங்கள் மட்டுமன்றி இருநாடுகளுக்கிடையிலான நட்புறவும் விரிவடையக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

போலந்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இலங்கை தூதரகத்துடன் வைத்திருந்த நெருங்கிய தொடர்பு உறவின் மூலமே இப் பேச்சுவார்த்தை மற்றும் கூட்டத்தொடர் துரித கதியில் வெற்றிகரமாக நடைபெற வழிகோலியுள்ளதாக போலந்துக்கான இலங்கையின் தூதரக அலுவலர் டி.எஸ்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com