Thursday, July 10, 2014

இலங்கையில் நடைமுறையிலுள்ள மின் வர்த்தக சட்டங்கள் .

மின் வர்த்தகம் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாத ஒரு வியாபார வடிவமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையாகும் பொருட்கள் சேவைகளை மட்டுமன்றி, உள்நாட்டில் சந்தையிலுள்ள பொருட்கள் சேவைகளையும் கொள்வனவு செய்கின்ற புதிய நுகர்வோர் நடத்தை போக்கை நம்மால் அவதானிக்க முடிகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு இவ்வர்த்தகம் நன்மைகளை கொண்டிருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தீமைகளையும் கொண்டுள்ளதை நுகர்வோர்கள் நன்கறிவர். இத்தகைய தீமைகளில் இருந்தும், இணைய வர்த்தக மோசடிகளில் இருந்தும் நுகர்வோர்களையும், விற்பனையாளர்களையும் பாதுகாக்க இலங்கையில் பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அச்சட்டங்கள் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்

அரசாங்கத்திலும், இலத்திரனியல் அரசாங்க சேவை ஸ்தாபனங்களிலும் பயன்படுத்துவதற்கான மிகப்பொருத்தமான சட்டமாக 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் விளங்குகிறது. பிரதம அமைச்சர், வியாபார வர்த்தக அமைச்சர் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் ஆகியோரின் கூட்டிணைந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் வரைவுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக ICTA (Information and Communication Technology Agency வுடன் இணைந்து சட்டவரைஞர் திணைக்களம் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் மீதான சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்களால் தீர்மானிக்கப்பட்டது. ICTA வின் சட்ட மற்றும் கொள்கை உள்ளீடுகளுடன் சட்டவரைஞர் திணைக்களத்தினால் சட்டம் தயாரிக்கப்பட்டு 2006 மார்ச் 7ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் 2007 ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம், ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவினால் சர்வதேச வர்த்தக சட்டம் (UNCITRAL) மீது ஸ்தாபிக்கப்பட்டதரங்கள், இலத்திரனியல் வர்த்தகம் (1996) மீதான மாதிரி சட்டம் மற்றும் இலத்திரனியல் கையொப்பங்கள் (2001) மீதான மாதிரி சட்டம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டிருக்கிறது.

சட்டத்தின் நோக்கம் வருமாறு

• சட்ட தடைகளை நீக்கி, சட்ட நிலையான தன்மையை நிலைப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கு வசதிப்படுத்துதல்.

• இலத்திரனியல் வர்த்தகத்தின் நம்பத்தகுந்த வடிவத்தின் பயன்பாட்டை ஊக்குவித்தல்,

• அரசாங்கத்துடன் ஆவணங்களை இலத்திரனியலில் கோவைப்படுத்த வசதியளித்தல் மற்றும் நம்பத்தகுந்த வடிவத்தில் இலத்திரனியல் தொடர்பாடல் மூலம் வினைத்திறன்மிக்க அரசாங்க சேவைகளை வழங்க ஊக்குவித்தல்,

• தரவு செய்திகள், இலத்திரனியல் தொடர்பாடல் என்பற்றில் பொதுமக்களின் நம்பகத்தன்மை, ஒருங்கிணைப்பு, நம்பியிருத்தல் என்பவற்றை ஊக்குவித்தல்.

இந்த சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு இலத்திரனியல் வடிவத்தில் தகவல்களையும் தரவுகளையும் தக்க வைத்துக்கொள்வதோடு இலத்திரனியல் மூலம் சேவைகளை வழங்குவதற்கு அரசாங்க நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணனி குற்ற சட்டம்,

கணனி குற்றங்களை அடையாளம் காண்பதற்கும், அதற்கான புலனாய்வு மற்றும் அத்தகைய குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பவற்றையும் வரையறுக்கும் சட்டமாக இது காணப்படுகிறது. இச்சட்டமூலம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு 2005 ஆகஸ்ட் 23ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்ற 'பீ' நிலையியற் குழுவால் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. அது 2007 மே மாதம் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 2007 யூலை 9ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபாநாயகரால் சான்றுப்படுத்தப்பட்டது.

2007 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணனி குற்ற சட்டத்தின் அடிப்படை, கணனிக்குள், கணனி நிகழ்ச்சிக்குள், தரவுக்குள் அல்லது தகவலுக்குள் அதிகாரமின்றி பிரவேசிக்கும் முயற்சிகளை குற்றமாகக்கருதுவதாகும். அதிகாரமற்ற சீராக்கல், தகவல்களை மாற்றுதல் அல்லது அழித்தல், பிரவேசத்தை மறுத்தல் என்பவற்றை சட்டம் குற்றமாக குறிப்பிடுகிறது. அத்துடன் அதிகாரமற்றவர்கள் பிரவேசிப்பதை தடுக்கும்வகையில் கணனி நிகழ்ச்சித்திட்டங்களை நபர்கள் அமைப்பதையும் குற்றமாகக் கருதுகிறது. உத்தேச சட்டத்தின் கீழ் ஏனைய குற்றங்களாக, கணனியை சேதப்படுத்துகிற அல்லது கணனிக்கு தீங்கிழைக்கிற வைரசுகள், லொஜிக் குண்டுகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல், தகவல்களை சட்டவிரோதமாகப் பிரதிபண்ணுதல், கணனி சேவைகளை அதிகாரமின்றி பயன்படுத்துதல், கணனி நிகழ்ச்சித்திட்டமொன்றை துண்டித்தல், ஒரு கணனியிலிருந்து இன்னொரு கணனிக்கு தரவுகளை அல்லது தகவல்களை ஊடுகடத்துகின்றபோது குறுக்கீடு செய்தல் என்பவையும் கருதப்படுகிறது.

குற்றங்களை புலனாய்வு செய்வதற்காக புதிய ஆட்சியொன்றை இந்த சட்டம் அறிமுகப்படுத்துகிறது. கணனி குற்றச் செயல்களைப் புலனாய்வு செய்வதற்காக பொலிஸ் 'நிபுணர்கள்' குழாம் ஒன்றை அமர்த்திக்கொள்வதற்கும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் உண்டு.

2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து பாதுகாப்பு சட்டம்

புலமைச்சொத்து உரிமைகளைப் (IPR) பாதுகாப்பது சம்பந்தமாக 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து பாதுகாப்பு சட்டம் 1979ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க புலமைச்சொத்து குறியீட்டை திருத்தியது. 2003ஆம் ஆண்டின் பு.சொ.சட்டம் மென்பொருள், வர்த்தக இரகசியங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட பிரிவுகள் என்பவற்றைப்பாதுகாப்பது தொடர்பிலான பல புதிய தோற்றங்களைக் கொண்டிருக்கிறது.

இவை தவிர மேலும் சில சட்டங்கள்

• 2003ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம்

• 2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவு, கணக்குத் தீர்த்தல் சட்டம்

• 2006ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க கொடுப்பனவு விருப்பாவண நன்கொடை மோசடி சட்டம்

இவ்வாறாக நுகர்வோர்களையும், வியாபார நிறுவனங்களையும் மின் வர்த்தக மோசடிகளில் இருந்து பாதுகாப்பதற்கும், சரியான கொடுக்கல் வாங்கல் பொறிமுறைகள் ஊடாக வர்த்தக செயற்பாடுகளை முன்னேடுப்பதற்கும் அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள இச்சட்டதிட்டங்களை பின்பற்றினால் எதுவித பிரச்சினைகளும் இல்லாமல் மின் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

தொகுப்பு :-
எப். எச். ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment