நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலுள்ள சவால்! - தமிழில் : கலைமகன் பைரூஸ்
குருணாகலை, ரம்பொடகல்ல ஸ்ரீ ஸ்வர்ணகிரி ரஜமகா விகாரையின் விகாராதிபதியாகவிருந்த அம்பேபூஸ்ஸே சுமங்கள தேரரின் மரணம், அப்பிரதேசத்து சிங்களவர்களினதும் ஏனைய இனத்தவர்களினதும் பெரும் கவலைக்குரிய செய்தியாக இருந்தது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் ரம்பொடகொல்ல மகா வித்தியாலய விளையாட்டுத் திடலில் சில நாட்களுக்கு முன்னர்தான் நிகழ்ந்தது. பொதுவாக பௌத்த துறவியொருவர் மரணமடைந்தால் அவருக்காக இல்லற வாழ்க்கையோடு ஒட்டியவர்கள் அழுது அங்கலாய்ப்பது மிகக் குறைவாகவே இருக்கும். ஆயினும், சுமங்கள தேரரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நாளின் அந்திப்பொழுது எல்லோரினதும் பார்வைகள் குத்தி நின்ற நிகழ்வொன்றும் இடம்பெற்றது. தற்போதைய சூழ்நிலையில் அது சிறப்பிற்குரியதாகும். அரிதானதும் அபூர்வமானதுமாகும். கட்டப்பட்டுள்ள மனிதாபிமானச் சங்கிலியை பிரிப்பதற்கு இலகுவான காரியமாகவே அது இருந்தது. அழுது துயர்ப்படும் உற்ற உறவினர்கள், விகாரைக்கு ஒத்தாசை புரிபவர்கள், இனத்தினரின் நடுவே அப்துல் பாயிஸ் உள்ளிட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அந்நிகழ்வில் கண்ணீர் மல்க ஒப்பாரிவிட்டு அழுத காட்சி அது. வேறுவிதமாகச் சொல்வதாயின் முஸ்லிம்களின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பாய்ந்த காட்சி அது. இளம் பௌத்த துறவியாக நின்று ஏனைய இனங்களுடன் புரிந்துணர்வுடன், ஒற்றுமையுடன், சகோதரவாஞ்சையுடன் வாழ்ந்துவந்துள்ளமை வேறு விடயம். இன, மத பேதமின்றி சாதாரண மனித சுபாவம் இதிலிருந்து வெளியாகியிருப்பது இதன் இன்னொரு பார்வையாகும்.
இந்நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் தங்களுக்கிடையே மட்டுமன்றி பௌத்த மதகுருமார்களுடன் எந்தளவு நெருக்கமான உறவினைப் பேணுகிறார்கள் என்பதற்கு ரம்படகல இறுதிக் கிரியை நிகழ்வு ஒரு பதச்சோறாகும். கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படும் வேளை, வட்டரெக்க விஜித்த தேரர் சிறைப்படுத்தப்பட்டுள்ள போது, அம்பேபூஸ்ஸ சுமங்கள தேரர் இனங்களிடையே ஒற்றுமையை விதைத்து, இனவாதத் தீயை அணைத்துவிட்டு இவ்வுலக வாழ்வை நீத்திருக்கின்றார். மேலும், மனிதாபிமானத்தை விதைத்துச் சென்றுள்ளார்.
அவ்வாறாயின் இந்த இனவாத, மதவாத தீச்சுடரை பற்றி எரியச் செய்பவர்கள் யார் என்பது நன்கு புரியும். அங்கு மதவாதம், அடிப்படைவாதம், அரசியல் மூன்றும் இருக்கின்றது. இருந்திருந்து முஸ்லிம் சிங்கள வீடுகள் தீப்பற்றி எரிவதும், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதும், இந்த நாசகார, படுபயங்கர சக்தி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து செயற்படுவதனாலாகும்.
எதிர்க்கட்சி என்றும்போல் அனைத்தையும் ஆளும் கட்சியின் கணக்கில் வரவு வைப்பதில் முனைப்புடன் இருக்கின்றது. தற்போதைய ஆளும் கட்சியினர் 1983 களில் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் இதனையே செய்தனர். இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களை சிறைவைத்து அன்றைய அரசாங்கமும் முட்டாள்தன வேலையே செய்தது.
உண்மையான பகைவர்கள் யார் என்பதைக் கண்டுகொள்ள முடியாத அன்று ஆட்சி பீடத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு, 1983 கறுப்பு ஜூலையையும் தன் கணக்கில் வரவு வைத்தது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும். இப்போதாவது அந்தக் குற்றத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக் கொள்வதற்கு முன்வர வேண்டும். தற்போதைய பிரச்சினை பற்றி, இதன் சூழ்ச்சி பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிந்திருக்கின்றார் போலும்.
“ஏதோ ஒருவகையில் முஸ்லிம்களை எங்களிலிருந்து தூர ஒதுக்குவதற்கான நடவடிக்கையில் அவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் நடந்து கொண்டார்கள். இன்று நான் முஸ்லிம்களைச் சந்திக்கச் சென்றேன். வீடுகள் உடைக்கப்பட்டிருக்கின்றனவே எனச் சொன்னபோது அவர்கள் அவர்கள் சொன்னார்கள், “இது இப்பிரதேசத்தவர்களின் வேலை அல்ல சார் என. வேறு பிரதேசங்களிலிருந்து வந்துதான் இதனைச் செய்தார்கள்” என்றார்கள்.
பேருவலையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான பட்டறையின்போது, ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஊரில் இருந்திருந்தால் இந்த அசம்பாவிதங்கள் பற்றிய தெளிவு அவர்களுக்கு வந்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“இந்நிகழ்வு நடைபெறும்போது அவ்விடத்திற்குச் சென்று ஒருங்கிணைத்தவர் யார்? இது தொடர்பில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நாங்கள் கிராம மக்களுடன் சேர்ந்திருந்தால் இது எங்களுக்குப் புரியும். நாங்கள் தெரிந்துகொள்ளாத பக்கம் இது என நான் நினைக்கிறேன்.”
(ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ)
“எதிர்க்கட்சியினர் கையில் அகப்படும் எந்தக் கல்லினாலும் அரசாங்கத்திற்கு அடிக்கும் கைங்காரியத்தையே செய்கின்றது. ஆளும் கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிற்சில வேளைகளில் பிழையான தீர்மானங்கள் எடுப்பதும், சட்டத்தை சரிவர அமுல்படுத்தாமையும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.”
(தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - 2014.07.02 லங்காதீப)
அளுத்கம மற்றும் பேருவலையின் அழிவுக்குள்ளான அனைத்தும் துரித கதியில் மீளக் கட்டியெழுப்பப்பட்டாலும், நொந்துபோயுள்ள உள்ளங்களை பழையபடி கொண்டுவருவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என கடல் மற்றும் நீர்வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார். அந்தக் கதையிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அந்த அசம்பாவிதங்கள் நிகழ்கையில் அனைத்தையும் அவர்கள் சிறுகச் சிறுக கண்களால் கண்டிருக்கின்றார்கள். அவர்களின் மனக்கண் முன் அந்நிகழ்வு நிழலாடுகின்றது. அதனால் உடைந்த உள்ளங்களை அமைதிப்படுத்துவதற்கு கீழ்த்தரமான அரசியலனால் அன்றி, மறைந்தும் மறையாதுள்ள அம்பேபூஸ்ஸ சுமங்கள தேரர் போன்ற போதகர்களின் செயல்ரீதியான மனிதாபிமான வழியினால் மட்டுமே ஆகும் என்பது தெளிவு.
இந்த அரசியல் இழுபறிக் களத்தில் மீண்டும் வழமைபோல் ஒருவருக்கு ஒருவர் விரல் நீட்டுவதுதான் நடக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் “வாழ்க்கை வரலாறு” போல, நிகழ்கால அரசியலில் ஈடுபடுகின்றவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்படவுள்ள எதிர்காலத்தில் ஒருநாள் இதிலுள்ள உண்மை நிலை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். அன்றைக்கு நவீன சிரில் மெதிவ் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வருவார்களோ என்று சொல்லத் தெரியவில்லை. அதேபோல, இந்த அரசியல் நாற்றம் வீசக்கூடிய சாப்பாட்டைச் சாப்பிடாமல் தூர விலகி நிற்கக் கூடிய இவ்விடயம் தொடர்பில் ஒருபக்கம் சாயாமல் சிந்திக்கின்ற, நொந்துபோயுள்ள உள்ளங்களை சமாதானப்படுத்துவதற்காக வேண்டி செயற்றிட்டங்களை மேற்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ள ஒரு இளம் அரசியல்வாதி எங்கள் பார்வையில் படுகின்றார். இது இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் காதுகுளிரக் கேட்கக்கூடிய நற்செய்தியாகும். அன்று பேருவலை, அளுத்கமை போன்ற இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி இவர் அறிந்தவேளை, இவரது உள்ளத்தை அந்நிகழ்வு நசுக்கியது. நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவது பற்றிய புதிய செயற்றிட்டமொன்றை கட்டியெழுப்புவதற்கு அன்றுதான் ஆரம்ப அடி வைத்தார்.
“அண்ணா, எங்களுக்கு சரியான மரண சடங்கை செய்வதற்கும் விடமாட்டார்கள் போல் தெரிகிறது. மையித்தைக் கொண்டு போகும் போதும் துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். நாங்கள் பெரும் பயத்துடன் இருக்கிறோம். முடியுமாயின் இதுபற்றி தேடிப்பாருங்கள். இதுபற்றி உங்களிடம் அல்லாமல் சொல்வதற்கு வேறு யாரும் எனக்கில்லை.”
நீலப் படையணியின் அங்கத்துவரான இளம் தம்பி ஒருவரின் இந்த எதிர்பாராத அழைப்பினால் இந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரான அண்ணன் ஆடிப்போனான். இது அவருக்கு புதிய அனுபவமாகவும் இருந்த்து. உண்மை இதுவாயின், நாங்கள் செய்கின்ற அரசியலின் பொருள்தான் என்ன என அவரது உள்ளத்திற்குத் தெரிந்தது. அந்த இளம் தம்பியின் தொலைபேசி அழைப்பு அவர் நீலப் படையணியில் கடமைபுரிவதற்காக எங்கும் பேசப்படவில்லை. அந்தத் தம்பி தனது தொலைபேசி இலக்கத்தை தன்வயம் வைத்துக்கொள்வாரோ என அவர் நினைத்ததாகவும் கூறப்படுகின்றது. அவர் அவசரமாக செயலில் இறங்கி பொறுப்புச் சொல்லவேண்டியவர்களுடன் கதைத்து உடனடியாக நிலைமையை சுமுக நிலைக்குக் கொணர்வதற்கு ஆவன செய்து வெற்றி கண்டார். அவர் யார் தெரியமா? ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.
கேள்விக்கு ஏற்ப தேவையை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு அதிலிருந்து விலகிவிடுவதே பொதுவாக அரசியல்வாதிகளின் செயலாக இருக்கின்றது. அதற்குக் காரணம் அவ்வாறான தேவைகள் பல தம்மை நோக்கி வருவதனாலாகும். ஆயினும் நாமல் ராஜபக்ஷ அவ்வாறான சில்லறைக்கடை முகாமையாளர்களைக் கொண்ட அரசியலிலிருந்து விலகி தூர நோக்கோடு சிந்திப்பவர் என்பது தெளிவாகின்றது. அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் “நம்பிக்கை”யை குறிக்கோளாகக் கொண்டு, அனைத்துமத ஒருமைப்பாட்டு மாநாடு அதனது பிரதிபலிப்பாகத் தோன்றுகின்றது. நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டையிலிருந்து ஆரம்பித்த இந்த “நம்பிக்கையின் மத மாநாடு” வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஆரம்பிப்பதற்கு அவர் திடசங்கற்பம் பூண்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ஷ சர்வதேச கருத்தரங்கு மண்டபத்தில் மக்கள் நிறைந்திருந்து “நம்பிக்கையின் மாநாடு” முழு நாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கான புதியதொரு கருத்தியலை கொண்டுவருவதற்கு ஆரம்ப படிக்கல்லாக அமைந்திருந்தது.
“இன்று நாங்கள் ஏற்படுத்திக் கொள்கின்ற நம்பிக்கையினால் எதிர்காலத்தைக் பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறோம். கலாச்சார ரீதியாக சிந்தித்தாலும், சம்பிரதாயபூர்வமாக சிந்தித்தாலும் இந்த அனைத்து மத சம்பிரதாயங்களிலும் ஏதோ ஒருவகையில் ஒருமைப்பாடும், நம்பிக்கையும் கலந்த யதார்த்தம் உள்ளது. இன்றைய தேவையாக உள்ள இந்த நம்பிக்கையை கைக்கொண்டு நாங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நினைவிற் கொள்கிறேன்.”
(பா.உ. நாமல் ராஜபக்ஷ 2014.06.28 லங்காதீப)
புதுமையான முறையில் சிந்திக்கின்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வரலாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ளது. 1970 - 77 காலப் பிரிவு இதற்கு நல்ல உதாரணமாகும். 1970 ஐக்கிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மெச்சத் தக்கவர்களும் எங்கள் பார்வையில் படுகின்றார்கள். இரத்தினபுரி நந்த எல்லாவல, பெலிஅத்தை மகிந்த ராஜபக்ஷ, திஸ்ஸமகாராமை டெனிஸன் எதிரிசூரிய, கெக்கிராவ யூ.பி.வை ஜினதாச என்போர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாக இருக்க, சரத் முத்தெட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார போன்ற இடதுசாரிகளும் அதில் உள்ளடங்கினர். அவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களை விடவும் மக்களுடன் நெருக்கமாகி செயற்பட்டமை அப்பிரிவில் இருந்த அனைவரும் நன்கறிந்த விடயம். இவர்களே திருமதி பண்டாரநாயக்க அரசியலில் தோற்றம் பெறுவதற்கும் வாய்ப்பளித்தார்கள் என்பது தெளிவாகிறது.
தற்காலத்தில் அவ்வாறான இளம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அவ்வாறானவர்கள் தோன்றுவதாகத் தெரியவில்லை. சிற்சில நிகழ்வுகளின் பின்னர் அவ்வாறான ஒன்று இரண்டு பேர் தோற்றம் பெற்றாலும் காலக்கிரமத்தில் அவர்கள் முகவரியிழந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். தற்போதை இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயினும், 1970 - 77 காலப்பகுதியை முன்மாதிரியாகக் கொண்டிருந்தால் பேருவலை, அளுத்கம போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைச் செயற்பாடுகள் அவ்வாறு ஏற்படாதிருக்கவும், இந்த அரசாங்கத்தை மேலும் உன்னதநிலைக்குக் கொண்டுசெல்வதற்கும் வழிவகுத்திருக்கும்.
நாமல் ராஜபக்ஷ அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக முயற்சி செய்கின்றாரோ தெரியவில்லை.
சிங்களத்தில் - வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්රිය රාමනායක)
தமிழில் - கலைமகன் பைரூஸ்
0 comments :
Post a Comment